ரஜினி, கமலை வைத்து இயக்கும் லோகேஷ் கனகராஜ்?.. தயாரிப்பாளர் இன்பநிதியா?.. மாஸ்டர் பிளான்!
சென்னை: ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவின் அடையாளங்களாக திகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். கமல் நடித்த தக் லைஃப், ரஜினிகாந்த் நடித்த கூலி ஆகிய இரண்டு படங்களுமே போதுமான வரவேற்பை பெறவில்லை. இதனால் இரண்டு பேரின் ரசிகர்களுமே சோகத்தில் இருந்த நிலையில் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக ஒரு தகவல் வெளியானது.
இந்திய சினிமாவில் பலருக்கும் ரோல் மாடலாக திகழ்பவர்கள் ரஜினியும், கமலும். இரண்டு பேருமே கே.பாலசந்தரின் அறிமுகங்கள்தான். ரஜினி வருவதற்கு முன்னதாகவே கமல் ஸ்டார் அந்தஸ்தில் இருந்தார். இரண்டு பேரும் சேர்ந்து பல படங்களில் நடித்தார்கள்.கடைசியாக அவர்கள் 1979ஆம் ஆண்டு வெளியான அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில்தான் சேர்ந்து நடித்தார்கள். அந்தப் படத்துக்கு பிறகு அவர்கள் பிரிந்து நடிக்க ஆரம்பித்தார்கள். ரஜினி கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்டார்.

இரண்டு பேருமே சரியான வளர்ச்சி: இரண்டு பேரும் வெவ்வேறு பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்டாலும் அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்தே வளர்ந்தார்கள். அவர்களுக்கு தொழில் போட்டி இருந்தது உண்மைதான். அதேசமயம் பொறாமை என்பது சற்றும் இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஒருவரையொருவர் புகழ்ந்துதான் பேசியிருக்கிறார்கள். அதிலும் ரஜினிகாந்த் தான் நடித்த சில படங்கள், பேசிய மேடைகள், கொடுக்கும் பேட்டிகள் என அனைத்திலும் கமலை புகழ்ந்துதான் பேசுவார். கமலும் அவ்விதமே.
இப்போதைய படங்கள்: இருவரும் இப்போதும் பிஸியாக நடித்துவருகிறார்கள். கமல்ஹாசன் கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்திலும், ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்திலும் நடித்தார்கள். இரண்டு படங்களுமே உச்சக்கட்ட எதிர்பார்ப்பை பெற்றிருந்தன. ஆனால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டன. கூலி படமாவது வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டது. தக் லைஃப் படமோ மோசமான விமர்சனம், கடுமையான ட்ரோல்களை எல்லாம் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
சேர்ந்து நடிக்க ஆசை: கமல் அடுத்தது அன்பறிவ் இயக்கத்திலும், ரஜினி நெல்சன் திலீப்குமார் இயக்கத்திலும் நடிக்கிறார்கள். இதற்கிடையே அவர்கள் மீண்டும் எப்போது சேர்ந்து நடிப்பார்கள் என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. ரஜினியேகூட பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழா மேடையில், நல்ல கதை இருந்தால் நானும் கமலும் சேர்ந்து நடிப்பதற்கு தயார் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க அவர்கள் இரண்டு பேரையும் வைத்து லோகேஷ் கனகராஜ் படம் இயக்கப்போகிறார் என்று புதிய பேச்சு ஒன்று எழுந்திருக்கிறது.

யார் தயாரிப்பாளர்?: இந்தத் தகவல் அனைவரையுமே சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஒருவேளை இதுமட்டும் நடந்தால் கண்டிப்பாக ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தமிழ் சினிமா தொட்டுவிடும் என்பது பலரது கருத்து. அதேசமயம் இந்தப் படத்தை தயாரிப்பதற்கு நிச்சயம் அதிக பட்ஜெட் தேவைப்படும் என்பது உறுதி. எனவே யார் தயாரிக்க முன்வருவார்கள் என்ற கேள்வியும் திரைத்துறையை சேர்ந்த பலரிடம் எழுந்தது.
உதயநிதி ரூட்டில் இன்பநிதி?: இந்நிலையில் அதுகுறித்தும் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனமும், கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமும் சேர்ந்து தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகனான இன்பநிதி ரெட் ஜெயன்ட் நிறுவனத்துக்கு விரைவில் CEOவாக பொறுப்பேற்கப்போகிறார் என்றும்; அவர் அந்த சீட்டுக்கு வந்ததும் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கோலிவுட்டில் குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











