For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எம்ஜிஆர் சிலைத் திறப்பு: ரஜினியின் அரசியல் மாநாட்டுக்கு பிரமாண்ட முன்னோட்டம்!

  By Shankar
  |
  ரஜினி, கமல் பேசவேண்டியது என்ன?- வீடியோ

  தமிழக அரசியல்வாதிகள் காமராஜர் ஆட்சி அமைப்போம் என கூறுவதில் பெருமை கொள்வார்கள்.
  அம்மா ஆட்சியை நடத்தி வருகிறோம் என்று எடப்பாடியும், அம்மா ஆட்சியை அமைப்போம் என்று தினகரனும் ஒவ்வொரு மைக்கிலும் சொல்கிறார்கள்.

  எம்.ஜி.ஆரின் ஏழைகளுக்கான ஆட்சியை நான் கொடுப்பேன்' என்று புதிய முழக்கத்தை முன் வைத்திருக்கிறார், இன்னும் கட்சி ஆரம்பிக்காத ரஜினிகாந்த். இது இந்திய அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. சந்தேகமில்லை.

  Rajinikanth's speech at MGR statue opening gets big response

  கட்சியை முறையாக ஆரம்பிப்பதற்கு முன்பே நேற்று (மார்ச் 5) சென்னையை அடுத்த வேலப்பன்சாவடியில் இருக்கும் டாக்டர் எம்.ஜி.ஆர் ஆராய்ச்சி நிலையத்தில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்து வைத்தார் ரஜினி.

  ஆயிரக்கணக்கானோர் மத்தியில் பேசினார் ரஜினி. அப்போது தன்னை மையமாக வைத்து எழுப்பப்படும் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். ஒவ்வொன்றும் நெத்தியடி பதில்.

  "இது ஒரு பல்கலைக்கழக விழா என்று நினைத்தேன். இதை நான் அரசியல் மேடையாக ஆக்கக் கூடாது; இங்கு அரசியல் பேசக்கூடாது என்று நினைத்திருந்தேன். அந்த நினைப்பின் திரியை ஏ.சி.சண்முகம் பற்ற வைத்துவிட்டார்.

  'பேன்ட் சர்ட் போட்டு மேக்கப் போட்டு கதாநாயகிகளுடன் டூயட் பாட நாங்கள் வரவில்லை. நீங்கள் ஏன் கரைவேட்டி கட்டி எங்கள் வேலைக்கு வருகிறீர்கள்' என்கிறார்கள் அரசியல்வாதிகள். ஐயா நான் மற்றவர்களைப் பற்றி பேசலை.

  என்னைப் பற்றி மட்டும் சொல்றேன். என் வேலையை நான் சரியாகசெய்துகொண்டிருக்கிறேன், 67 வயசுலயும் மக்களை மகிழ்விக்கிறேன். ஆனா, நீங்க உங்க வேலையைச் சரியாக செய்யவில்லையே? அதனால்தான் நான் வர வேண்டியிருக்கு.

  1996இல் இருந்து அரசியல் என்னும் தண்ணீர் என் மீதும் பட்டுவிட்டது. அதனால் அரசியல் நெளிவு சுளிவுகளை தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். எனது மதிப்புக்குரிய கலைஞரிடம் பழகியிருக்கேன். மூத்த அரசியல்வாதி அமரர் மூப்பனார் அவர்களோடு பழகியிருக்கேன். என் நண்பர் சோ சாரிடம் பழகியிருக்கேன். இவர்களிடம் அரசியல் பத்தி நிறைய கத்துக்கிட்டிருக்கேன். எங்கெங்கே தப்பு நடக்கிறது, அதை எப்படி தடுப்பது என்று எனக்குத் தெரியும். எனக்கும் மக்களுக்குச் செய்யவேண்டிய கடமை இருக்கு. எனவே தான் அரசியலுக்கு வருகிறேன்.

  நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னதும் என்னை ரத்தின கம்பளம் போட்டு வரவேற்கணும்னு நான் எதிர்பார்க்கலை. ஆனால், ஏன் ஏளனம் செய்கிறீர்கள்? எனக்கு வாழ்த்து சொல்ல வேண்டிய அவசியம் உங்களுக்கு கிடையாது. ஆனால், ஏளனம் செய்கிறீர்களே ஏன்?. அரசியல் பாதை பூ மாதிரி கிடையாதுன்னு எனக்குத் தெரியும். அது முட்கள் நிறைஞ்ச பாதை. கற்கள் நிறைஞ்ச பாதை, பாம்புகள் நிறைஞ்ச பாதை... எனக்கு எல்லாம் இருந்தும், ஆனாலும் இந்த வயசுல நான் அரசியலுக்கு வர்றேன்னு சொன்னால், ஏன் ஏளனம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

  எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது எனச் சொல்கிறார்கள். சினிமாவில் இருந்துவரும் யாரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. சினிமாவில் இருந்து அவரை போல யாரும் அரசியலில் ஜொலிக்க முடியாது என்கிறார்கள்.

  சத்தியமாக யாரும் எம்.ஜி.ஆராக முடியாது. எம்.ஜி.ஆர் யுக புருஷர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம். இன்னும் நூறு அல்லது ஆயிரமாண்டுகள் ஆனாலும் அவரை போன்று யாராலும் வர முடியாது.

  ஆனால்... அந்த எம்.ஜி.ஆர் கொடுத்த நல்லாட்சி, ஏழை மக்களுக்கான ஆட்சி, மத்திய தர மக்களுக்கான ஆட்சி, சாமானிய மக்களுக்கான ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்.

  மக்களுடைய ஆசீர்வாதம், இளைஞர்கள் பங்களிப்பு, சிறந்த தொழில்நுட்பம், நல்ல சிந்தனையாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் திறமைசாலிகளை வைத்துக்கொண்டு எம்.ஜி.ஆர் தந்த நல்லாட்சி போன்ற ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்.

  ஆன்மிக அரசியல் என்றால் என்ன என்று என்னிடம் கேட்கிறார்கள். உண்மையான, நேர்மையான, வெளிப்படையான, சாதி மத சார்பற்ற அறவழியில் நடப்பது தான் ஆன்மிக அரசியல் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கேன்.

  ஏன்... திராவிட அரசியலில் இறை நம்பிக்கை இல்லையா... நேர்மை இல்லையா, சாதிய சமயமற்ற அறவழி இல்லையா... ஆன்மீக அரசியல். இனிமேதான் ஆன்மிக அரசியல் பாக்கப் போறீங்க.

  வெற்றிடம் இருக்கு அதனால்தான் அரசியலுக்கு வர்றீங்களானு கேக்குறாங்க. ஆமாய்யா வெற்றிடம் இருக்கு. ஜெயலலிதா என்ற மகத்தான ஆளுமை இப்போது இல்லை. 13 வருஷங்கள் எதிர்க்கட்சியா இருந்தாலும் கட்சியைக் கட்டிக் காப்பாத்துற திறமைகொண்ட கலைஞர் உடல்நலம் சரியில்லாமல் இருக்கார்.

  இப்போது தமிழ்நாட்டுக்குத் தலைவர்கள் இல்லை. நல்ல தலைமை இல்லை. அதனால் அந்த இடத்தை நிரப்ப நான் வர்றேன்," என்று பகிரங்கமாக போட்டு உடைத்தார் ரஜினி.

  எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்து வைத்து ரஜினி பேசிய நீண்ட உரை பல விளக்கங்களை உள்ளடக்கி உள்ளது. ஒரே நேரத்தில் கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெ ஆகிய மூன்று தலைவர்களை பற்றியும் பேசியிருக்கிறார் ரஜினி.

  எம்.ஜி.ஆர் போன்ற ரஜினியின் இயல்பான பேச்சு. அடித்தட்டு மக்களை ஈர்ப்பதற்கான வாய்ப்பு நிறையவே உள்ளது. காரணம் இப்படி ஒரு மேடைப் பேச்சு தமிழ் மக்களுக்கு புதிய அனுபவம்.

  ரஜினியின் பேச்சில் முதிர்ச்சி, பக்குவம், அனுபவம் தெரிகிறது. அதேபோல இளைஞர்கள் மத்தியிலும் ரஜினியின் இந்தப் பேச்சுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக மாணவர்கள் கொண்டாடித் தீர்த்ததைப் பார்க்க முடிந்தது.

  வரும் வழியில் வீதியெங்கும் தனக்கு பேனர்கள் வைத்ததற்காக ரஜினி மக்களிடம் பகிரங்கமாக பொது மேடையில் மன்னிப்பு கேட்டது கூட விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. இப்படிக் கேட்கும் பக்குவம் இன்றைக்கு எந்தத் தலைவருக்காவது இருக்கிறதா..!

  எம் ஜி ஆர் சிலை திறப்பு விழா ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கிய பின் தனக்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பதற்கான முன்னோட்டமாகவே அரசியல் வட்டாரத்தில் கவனிக்கப்படுகிறது.

  - நமது நிருபர்

  English summary
  Rajinikanth's speech at MGR statue opening ceremony became viral among public and got biggest reception.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X