மீண்டும் இயக்குநராக களமிறங்கும் ஐஸ்வர்யா… மகளுக்காக ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கொடுக்கும் ரஜினிகாந்த்?
சென்னை: தனுஷ் நடித்த 3 திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
திருமண வாழ்க்கையில் தனுஷுடன் ஏற்பட்ட பிரிவை அடுத்து திரைப்படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரைவில் தமிழில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா, தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 2004ல் நடைபெற்ற தனுஷ் - ஐஸ்வர்யா திருமணம், 2022ல் பிரிவை சந்தித்தது. சினிமா வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விவகாரம் பின்னர் அப்படியே இருக்கும் இடம் தெரியாமல் போனது. தனுஷ் அடுத்தடுத்து படங்களில் நடிப்பதில் பிஸியாக இருக்க, ஐஸ்வர்யாவும் அவரது கேரியரை பார்க்கத் தொடங்கிவிட்டார். முன்னதாக 2012ல் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 திரைப்படம் மூலம், இயக்குநராக அறிமுகமானார் ஐஸ்வர்யா.

பாலிவுட்டில் ஓ சாத்தி சல்
தனுஷ், ஸ்ருதி ஹாசன், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடிப்பில் வெளியான '3' திரைப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் தான் அனிருத்தும் இசையமைப்பாளராக அறிமுகமானார். சமீபத்தில் கூட ஐஸ்வர்யா இயக்கிய 3 திரைப்படம், ஆந்திராவில் மீண்டும் ரிலீஸாகி பட்டையைக் கிளப்பியது. 3 படத்திற்கு பிறகு கெளதம் கார்த்திக், பிரியா ஆனந்த் நடித்த 'வை ராஜா வை' படத்தை இயக்கியிருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் பாலிவுட்டில் ஓ சாத்தி சல் என்ற படத்தை இயக்கவுள்ளதாக ஐஸ்வர்யா அறிவித்திருந்தார். இதனால் அதிகம் எதிர்பார்ப்பு எழுந்தது.

கோலிவுட்டுக்கே திரும்பிய ஐஸ்வர்யா
'ஓ சாத்தி சல்' ரொமாண்டிக் திரைப்படமாக உருவாகவுள்ளதாகக் கூறப்பட்டது. இந்தப் படத்தின் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், ஐஸ்வர்யா தற்போது தமிழில் ஒரு படம் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. 'ஓ சாத்தி சல்' திரைப்படம் இன்னும் தொடங்கப்படாத நிலையில், மீண்டும் தமிழிலேயே படம் இயக்கத் திட்டமிட்டுள்ளாராம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். விரைவில் இந்தப் படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

மகளுக்காக இணையும் சூப்பர் ஸ்டார்
இந்நிலையில் ஐஸ்வர்யா தமிழில் இயக்கும் புதிய படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மகளுக்கு கை கொடுக்கும் முடிவில் உள்ள ரஜினி, ஐஸ்வர்யா இயக்கும் புதிய படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளாராம். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது உறுதியானால் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











