Coolie 8th Day Box Office - கூலி 8வது நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா?..
சென்னை: ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி திரைப்படம் கடந்த 14ஆம் தேதி ரிலீஸானது. படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும்; விமர்சன ரீதியாக பலத்த அடியே விழுந்தது. அதேசமயம் வசூல் ரீதியாக உலக அளவில் மிரட்டிய கூலி; 400 கோடி ரூபாய் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில் எட்டாவது நாளான நேற்றைய வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
ரஜினியும், லோகேஷும் இணைந்த கூலி கடந்த வாரம் ரிலீஸானது. கோலிவுட்டில் தரமான சம்பவத்தை படம் செய்யும் என்றுதான் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ட்ரெய்லர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தாவிட்டாலும்; படத்தில் லோகி ஏதோ ஒன்று செய்து செம அனுபவத்தை கொடுப்பார் என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு; கூலி படம் பலத்த இடியை இறக்கியது. விமர்சன ரீதியாக படம் முதல் நாளே படுத்துவிட்டது.
என்ன பிரச்னை?: லோகேஷ் கனகராஜின் மாகரம், கைதி ஆகிய படங்கள் அனைவருக்குமே பிடித்ததற்கு காரணம் அந்தப் படங்களில் இருந்த மேக்கிங்கும், நேட்டிவிட்டியும், லாஜிக்கும்தான். ஆனால் அதற்கு பிறகு அவர் எடுத்த மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய மூன்று படங்களிலும் அந்த இரண்டு விஷயங்களும் கொஞ்சம் கொஞ்சமாக தேய ஆரம்பித்து; கூலி படத்தில் அது சுத்தமாகவே இல்லை என்ற நிலைதான் இருந்தது.

ரஜினி மட்டும் போதுமா?: படம் பார்த்த பலரும் இப்படத்தை கதையை நம்பி எடுத்தாரா இல்லை ரஜினியை நம்பி எடுத்தாரா என்ற கேள்விகள் எழுந்தன. முக்கியமாக ஒட்டுமொத்த படத்தையும் ரஜினியின் தோளில் வைத்துவிட்டார் லோகி. எவ்வளவு பெரிய ஸ்டார் படத்துக்குள் இருந்தாலும்; கதையும், திரைக்கதையும்தான் அந்தப் படத்தை தாங்கும்; நடிகரால் முடியாது என்பதை இந்தப் படம் இயக்குநருக்கு சொல்லிக்கொடுத்திருக்கும் என்ற கருத்துக்கள் நிலவுகின்றன.
வசூலில் சூப்பர்: விமர்சன ரீதியாக படம் சேதாரம்தான். இதனை ரஜினியும், இயக்குநரும் கண்டிப்பாக எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் என்பதுதான் உண்மை. அதேசமயம் நினைத்தபடியே வசூலில் மாஸ் காண்பித்தது. முதல் நாளில் 151 கோடி ரூபாய் வசூலித்து லியோவை ஓவர் டேக் செய்த கூலி; நான்கு நாட்களில் 404 கோடி ரூபாயை வசூலித்தது. இருப்பினும் 1000 கோடி ரூபாய் வசூல் பெரும்பாலும் சாத்தியமில்லை என்றே தெரிகிறது.
எட்டாவது நாள் வசூல்: சூழல் இப்படி இருக்க படங்களின் வசூல் விவரத்தை வெளியிடும் Sacnilk இணையதள தரவுகள்படி நாளுக்கு நாள் படத்தின் வசூல் குறைந்துகொண்டே வருவதை பார்க்க முடிகிறது. அந்த தளம் கொடுத்திருக்கும் தகவல்படி நேற்று முன்தினம் இந்தியாவில் 7.5 கோடி ரூபாய் வசூலித்த கூலி; எட்டாவது நாளான நேற்று 6.25 கோடி ரூபாயைத்தான் வசூலித்திருக்கிறது. இதனைப் பார்த்த ரசிகர்களோ, என்னது இது நாளுக்கு நாள் வசூல் குறைகிறது; போகிற போக்கை பார்த்தால் இன்னும் கொஞ்ச நாட்களில் தியேட்டர்களிலிருந்து கூலியை தூக்கிவிடுவார்களோ என கேள்விகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











