»   »  புதுக்கோட்டை தேர்தலில் போட்டியிடக் கூடாது... மன்றச் செயலாளருக்கு ரஜினி உத்தரவு?

புதுக்கோட்டை தேர்தலில் போட்டியிடக் கூடாது... மன்றச் செயலாளருக்கு ரஜினி உத்தரவு?

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rajinikanth
சென்னை: புதுக்கோட்டை இடைத் தேர்தலில் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் போட்டியிடும் புதுக்கோட்டை மாவட்ட ரசிகர் மன்றச் செயலாளர் ஸ்ரீதர் மீது நடிகர் ரஜினிகாந்த் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் மன்றம் சார்பில் போட்டியிடக் கூடாது, தேர்தலிலிருந்து வாபஸ் பெற வேண்டும் என்று ரஜினி சார்பில் உத்தரவு போயுள்ளதாக கூறப்படுகிறது.

புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடுகிறது, தேமுதிக போட்டியிடுகிறது, இந்திய ஜனநாயகக் கட்சியும் போட்டியிடுகிறது. இதேபோல புதுக்கோட்டை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர் ஸ்ரீதர் என்பவரும் போட்டியிட மனு செய்துள்ளார்.

இவர் ரஜினி மன்றம் சார்பில் போட்டியிடுகிறார். மேலும் மன்றக் கொடியையும் பயன்படுத்தி வாக்கு சேகரித்து வருகிறார். வேட்பு மனு தாக்கலின்போது ரஜினி ரசிகர்கள் புடை சூழ, மன்றக் கொடி, பேனருடன் ஊர்வலமாக சென்று பரபரப்பையும் ஏற்படுத்தினார்.

இது ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மன்றத்தின் பெயரில் ஸ்ரீதர் போட்டியிடுவதை அவர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே போட்டியிலிருந்து வாபஸ் பெறுமாறு ஸ்ரீதருக்கு அறிவுரை போயிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் ரஜினி அப்படி உத்தரவிட்டுள்ளாரா என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.

இந்த விவகாரம் குறித்து ரஜினி ரசிகர் மன்றப் பொறுப்பாளரான சுதாகர் என்பவர் கூறுகையில், ரசிகர்கள் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம், எந்தக் கட்சிக்காகவும் தேர்தல் வேலை செய்யலாம். அதை ஒருபோதும் ரஜினிகாந்த் தடுத்ததில்லை.

ஆனால் தேர்தல் பணியில் ஈடுபடும் யாரும் ரஜினியின் பெயரையோ, மன்றக் கொடியையோ பயன்படுத்தக் கூடாது. முதலில் ரசிகர்கள் தங்களது குடும்பங்களைத்தான் கவனிக்க வேண்டும். இதைத்தான் எப்போதும் ரஜினி சொல்லி வருகிறார், ஆசைப்படுகிறார்.

ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ஸ்ரீதர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள தகவலை பத்திரிகை மூலம் அறிந்தோம். நான் அவரிடம் ரஜினி பெயரையோ ரசிகர் மன்றத்தின் பெயரையோ மன்ற கொடியையோ பயன்படுத்தி தேர்தலில் நிற்கக் கூடாது என்று கூறி இருக்கிறேன் என்றார்.

ஆனால் தான் ரஜினி மன்றம் சார்பில் போட்டியிடுவது என்று அனைத்து ரசிகர்களும் கூடி எடுத்த முடிவு என்று ஸ்ரீதர் கூறுகிறார். இதனால் இவர் வாபஸ் பெறுவாரா, மாட்டாரா என்பது குழப்பமாகியுள்ளது.

English summary
Sources say that Actor Rajnikanth is upset over his fan club functionary Sridhar contesting in Pudukottai by poll. He has asked Sridhar to withdraw from the contest, sources add.
Please Wait while comments are loading...