டாப் ஹீரோ படத்தில் ராஜு ஜெயமோகன்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
சென்னை : கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தை எட்டி உள்ளது. ஒவ்வொரு நாட்களும் புதுசு புதுசாக உருவாகும் பிரச்சனை, மோதல்கள் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை அதிகரித்து வருகிறது.
ஆரம்பத்தில் 18 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நிலையில், மருத்துவ காரணங்களால் நமீதா மாரிமுத்து முதல் வாரத்திலேயே வெளியேறினார். முதல் வாரத்தில் எலிமினேஷன் ப்ரோசசில் 15 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் முதல் ஆளாக யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

காமெடியால் கவர்ந்த ராஜு
இந்த சீசனில் அதிகமான பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் பிரியங்கா, பாவனி ரெட்டி, இசைவாணி, தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி ஆகியோர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். ஆண் போட்டியாளர்களில் முதல் நாளில் இருந்து நகைச்சுவையால் அனைவரையும் கவர்ந்தவர்களில் ஒருவர் ராஜு ஜெயமோகன்.

இந்த படத்தில் இவரா
லேட்டஸ்ட் ஸ்வாரஸ்யமான தகவல் என்னவென்றால், சிவகார்த்திகேயன் - பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள டான் படத்தில் முக்கியமான ரோலில் ராஜு ஜெயமோகன் நடித்துள்ளாராம். த்ரில்லர் ஆக்ஷன் படமாக தயாராகி உள்ள இந்த படத்தை டைரக்டர் சிபி சக்ரவர்த்தி இயக்கி உள்ளார். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.

எதிர்பார்ப்பை கிளப்பிய ரோல்
எஸ்.ஜே.சூர்யா, பாலா சரவணன், காளி வெங்கட், முனிஸ்காந்த், சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் சமீபத்தில் தான் நடித்து முடித்தார் எஸ்.ஜே.சூர்யா. இந்த படம் 2022 ம் ஆண்டின் துவக்கத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜு ஜெயமோகன் ஏற்கனவே சினிமாவில் நடித்திருந்தாலும், சிவகார்த்திகேயன் படத்தில் நடிப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

சின்னத்திரை பிரபலம்
2012 ம் ஆண்டு விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் நடிக்க வந்த ராஜு, பிறகு கல்லூரி சாலை, ஆண்டாள் அழகர், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர், பாரதி கண்ணம்மா போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். 2019 ல் கவின், அருண்ராஜா காமராஜ் கூட்டணியில் உருவான நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் சினிமாவிலும் என்ட்ரி ஆனார்.

சினிமா வாழ்க்கையில் முக்கியம்
பிக்பாஸ் வீட்டிற்குள் சிவகார்த்திகேயன் போன்று பாடிலேங்குவேஜ் காட்டி நடந்து வரும் ராஜு, சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் நடித்துள்ளார் என்பதால் இதில் என்ன கேரக்டரில் நடித்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிக்பாஸ் சீசன் 5 முடியும் சமயத்தில் டான் படம் ரிலீசாகும் என்பதால் இந்த படம் ராஜுவின் சினிமா வாழ்க்கைக்கு அது பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











