twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாரதியாரையே ஜோக்கராகப் பார்த்தவர்கள்தானே இவர்கள்! - இயக்குநர் ராஜு முருகன்

    By Shankar
    |

    இவரது இரண்டாவது படம் என்னவாக இருக்கும்... எதைப்பற்றி பேசும் என முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தவர் ‘குக்கூ' ராஜூமுருகன்.

    தன் மீதான நம்பிக்கையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் முயற்சியில் அரசியல் பேசும் ஒரு படத்தை எடுத்து வருகிறார். படத்தின் பெயர் ‘ஜோக்கர்'.

    போஸ்ட் புரொடக்ஷன் வேலையில் பரபரத்துக்கொண்டிருந்தவரை சந்தித்தோம்.

    Raju Murugan speaks on Joker

    யார் ஜோக்கர்?

    "இது சமூகத்தை பற்றிய படம். இன்றைய இந்தியாவில் மக்களின் வாழ்க்கைத் தரம், டிஜிட்டல் மயம் வளர்ச்சின்னு மாறியிருந்தாலும் மக்களோட போராட்டங்களும் அதிகமாயிடுச்சு. அதுப்பற்றிப் பேசும் கதைதான் இது.

    பொதுவா நமக்காக போராட முன் வருபவர்கள் எல்லோருமே ஆரம்பத்தில் ஜோக்கர்களாகதான் பார்க்கப்படுவார்கள். பாரதியாரையே இந்த சமூகம் ஆரம்பத்தில் அப்படித்தான் பார்த்தது. இந்த ஜோக்கர் தலைப்பை அந்த கோணத்தில் பாருங்க.

    யாரையெல்லாம் நாம் ஜோக்கர்களாக பார்க்கிறோமோ அவங்களெல்லாம் ஜோக்கர்கள் இல்லை. அப்போ உண்மையில் ஜோக்கர்கள் யார்? அதுதான் இந்தக் கதை."

    அரசியல் பிடிக்கும்

    "பத்திரிகையாளன் எழுத்தாளன் இயக்குநர் என்ற பாதையில் வந்தவன் என்றாலும் அடிப்படையில் எனக்கு அரசியல் ஆர்வம் இருக்கு. அரசியல் என்றால் கட்சி சம்பந்தப்பட்டு, இயக்கம் சம்பந்தப்பட்டே பார்த்து பழகிட்டோம். அதில்லை அரசியல். மக்களின் வாழ்க்கை, அவர்களின் துன்பங்கள்தான் அரசியல். அப்படியான அரசியலுக்குள்தான் நாம் இருக்கிறோம்.

    இதுதான் அரசியல்...

    இருபது வருடங்களுக்கு முன்னாடி தண்ணீரை விலை கொடுத்து வாங்குவோம்னு நாம் நினைச்சிருக்க மாட்டோம். இன்றைக்கு நகரத்தில் தொடங்கி கிராமங்கள் வரை வாட்டர் கேனை காசுக்கொடுத்து வாங்குறோம். உலகமயமாக்கல் நவீன இந்தியான்னு சொல்லிட்டு இருக்கும் நேரத்தில் வறுமை பரவியிருக்கு. எல்லா வசதிகளும் கிடைத்துவிட்டது போன்ற மாயையை ஏற்படுத்தி சிந்தனை அளவிலும் பொருளாதார அளவிலும் பின்தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் மக்கள். இதெல்லாம் சேர்ந்ததுதான் அரசியல். சமூகத்திற்காக பேசுகிறவன், மக்களுக்காக யோசிக்கிறவன் எல்லாருமே அரசியல்வாதிகள்தான். அதை பேசுற படம்தான் இது."

    காமெடி

    "ஜோக்கர்ல காமெடிக்கும் பஞ்சம் இருக்காது. உதாரணத்துக்கு தேர்தல் என்பது எவ்வளவு சீரியஸான விஷயம். ஆனா நடப்பது எல்லாமே நமக்கு காமெடியா தெரியுதுதானே. அப்படியான ஒரு சிரிப்பு எசன்ஸ் படம் முழுக்க தெளிக்கப்பட்டிருக்கும். படம் பார்க்கும்போது சிரிச்சிட்டே இருக்குற மாதிரியான கேலி ஜாலியும் ஆடியன்ஸை ரசிக்க வைக்கும். க்ளைமாக்ஸில் ஆடியன்ஸுக்கு கிரியேட்டரா ஒரு கேள்வியை வைக்கிறேன்."

    தர்மபுரி களத்தில்...

    "தருமபுரிதான் கதை களம். ஷூட்டிங் தொடங்குவதற்கு ஆறு மாசத்துக்கு முன்னாடியே அங்கேயே ஒரு வீடு எடுத்து தங்கி, பக்காவா ரிகர்சல் பார்த்து எல்லாம் சரியா இருக்குன்னு திருப்தி கிடைச்சப் பிறகுதான் ஷூட்டிங்கிற்கே போனோம். தருமபுரி பகுதியைச் சேர்ந்த மக்களையும் நடிக்க வச்சிருக்கோம்.

    சோமசுந்தரம்

    ‘ஆரண்ய காண்டம்' சோமசுந்தரம்தான் கதையின் நாயகன். அவர் சில படங்களே பண்ணியிருந்தாலும் அவர் நடித்த கேரக்டர்களில் ஏதாவது ஒரு விதத்தில் கவனத்தை ஈர்த்திடுவார். இந்தியில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடிக்கத்தொடங்கி இன்றைக்கு சிறந்த நடிகராக பேசப்படும் நவாசுதின் சித்திக் மாதிரிதான் சோமசுந்தரமும் ஒரு அற்புதமான நடிகர்.

    பொன்னூஞ்சல்

    படத்தில் பொன்னூஞ்சல் என்ற 60 வயசு கேரக்டருக்காகதான் அவரிடம் பேசப்போயிருந்தேன். ‘கேரக்டர் நல்லாயிருக்கு பண்றேன். ஆனா தொடர்ந்து என்னை வயசானவன் கேரக்டருக்கு கூப்பிடுறாங்க. எனக்கு அவ்வளவு வயசாகலை'ன்னு சொன்னார். அவர் பேசும்போது நான் பார்த்த உடல்மொழி, பேச்சு எல்லாமே என் கதை நாயகனுக்கான சரியான சாய்ஸ் இவர்தான்னு முடிவு பண்ணி மன்னர்மன்னன் என்ற கதைநாயகனாக அவரை மாற்றினேன்.

    பொன்னூஞ்சல் கேரக்டரில் "நாடக ஆளுமைகொண்ட மு.ராமசாமி பண்ணியிருக்கிறார். நியாயத்திற்காக கோபம் கொப்பளிக்கும் கேரக்டர் என்பதால் அவரை எழுத்தாளர் ஜெயகாந்தன் போன்ற தோற்றத்துக்கு மாற்றியுள்ளேன். ஸ்டில்ஸ் பார்க்கும் எல்லாருமே ஜெயகாந்தன் மாதிரியே இருக்கார்ன்னு சொல்றாங்க.

    நாயகிகள்

    இசை என்ற கேரக்டரில் காயத்ரி, மல்லிகா என்ற கேரக்டரில் ரம்யாவும் கதையின் நாயகிகளாக நடிச்சிருக்காங்க. வெறுமனே இல்லாமல் ஹீரோவுக்கு சமமான வலுவான கேரக்டரில் இவங்களோட நடிப்பும் மனசில் நங்கூரமிடும். தவிர எழுத்தாளர்கள் பவா செல்லதுரை, சா.பாலமுருகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காங்க."

    செழியன்

    "படத்தை சர்வதேச அளவுக்கு எடுத்துச்செல்வதுபோன்ற ஒளிப்பதிவை செழியன் செய்திருக்கிறார். நான் சொல்ல வரும் வாழ்க்கையை துள்ளியமும் இயல்பும் தவறாமல் பதிவு செய்திருக்கிறார் என்றுதான் சொல்லணும். ‘முண்டாசுப்பட்டி' சான் ரோல்டன் ( shan rolden ) இசையமைப்பில் யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். நான் நினைக்கிற படத்தை தருவதற்காக எடிட்டர் சண்முகம் வேலுச்சாமி அர்ப்பணித்திருக்கிறார். கதையிலிருந்து துறுத்தி நிற்காத கலை இயக்கத்தில் கைவண்ணம் காட்டியிருக்கிறார் சதீஷ் குமார்.

    சமூக அக்கறை கொண்ட தயாரிப்பாளர்கள்

    இந்த ஒட்டுமொத்த உழைப்பிற்கும் திறமைக்கும் மூல காரணமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு - நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன். இந்தப்படம் பேச வரும் பொருளை எடுத்து அதை தயாரிக்க சில பேருக்குத்தான் மனசு வரும். வியாபார ரீதியாகவும் வெற்றி பெறுவதற்கான கதை என்றாலும், சமூக நோக்கமும் அக்கறையும் கொண்டவர்களால் மட்டுமே இதை தயாரிக்க முடியும். அந்த வகையிலும் தயாரிப்பாளர்களுக்கு இன்னொரு நன்றியை சொல்லிக்கிறேன்."

    English summary
    Raju Murugan's second movie Joker is completely a different movie from his debut movie. Joker is based on current politics with the background of Dharmapuri.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X