Thamma X Review: ராஷ்மிகாவுக்கு அடுத்த ஜாக்பாட்.. ஆயுஷ்மான் குரானாவின் ’தம்மா’ விமர்சனம்!
மும்பை: நடிகர் ஆயுஷ்மான் குரானா, ராஷ்மிகா மந்தனா, நவாசுதின் சித்திக் நடித்துள்ள 'தம்மா' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியாகவுள்ள நிலையில், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆயுத்மான் குரானா மீண்டும் திரைக்கு வருகிறார். 'ட்ரீம் கேர்ள் 2' படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஆயுஷ்மான் தற்போது 'தம்மா' என்ற ரொமான்டிக் ஹாரர் காமெடி படத்தில் நடித்துள்ளார்.
ஆதித்யா சர்போதார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, நவாசுதீன் சித்திக் மற்றும் பரேஷ் ராவல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று. 'தம்மா' படத்தின் கதை, ஒரு வரலாற்று ஆசிரியர் காட்டேரியாக மாறி, ஒரு மோசமான ரத்த உறவை எதிர்கொள்வதை மையமாகக் கொண்டுள்ளது.

இது மேடாக் ஹாரர் காமெடி யூனிவர்ஸின் ஐந்தாவது திரைப்படமாகும். இதற்கு முன் 'ஸ்த்ரீ', 'பேடியா', 'முன்ஜ்யா' மற்றும் 'ஸ்த்ரீ 2' ஆகியவை வெளியாகின. ஆயுஷ்மான் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் முதல் கூட்டணி இது என்பதால், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. காதல் மற்றும் திகில் கலந்த இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது தொடர்பாக படம் பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
டிரெண்டிங்கில் தம்மா: கடந்த வாரம் வெள்ளிக்கிழமையே தமிழில் பல படங்கள் வெளியாகி தீபாவளி விடுமுறையை கச்சிதமாக கணக்கிட்டு கல்லா கட்டி வரும் நிலையில், ஆயுஷ்மான் குரானா, ராஷ்மிகா நடித்துள்ள தம்மா தீபாவளி முடிந்து இன்று செவ்வாய்க்கிழமை வெளியாகிறதே ஏன் என்கிற கேள்வி தான் பலரது மனங்களிலும் ஓடிக்கொண்டிருக்கின்றன. வட இந்தியாவில் இந்த வாரம் முழுவதும் தம்மா ஓடினால் தான் வசூல் வேட்டை நடத்தும் என்கின்றனர். விமர்சகர் சுமித் கடேல் தம்மா படத்தை பிளாக்பஸ்டர் என விமர்சித்துள்ளார்.
தம்மா விமர்சனம்: இன்று திரைக்கு வந்துள்ள 'தம்மா' படத்தின் விமர்சனங்களை இப்போது பார்க்கலாம். சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஒரு ட்வீட்டின்படி, 'தம்மா' ஒரு பொழுதுபோக்கு ஹாரர் காமெடி படமாக இருந்தாலும், கதையில் புதுமை இல்லை என்று கூறப்படுகிறது. பாலிவுட் விமர்சகர் தரன் ஆதர்ஷ் இந்தப் படத்திற்கு 4 ஸ்டார்கள் கொடுத்து, "இது நன்றாக உருவாக்கப்பட்ட சுவாரஸ்யமான ஹாரர்-காமெடி டிராமா திரைப்படம் என பதிவிட்டுள்ளார்.
தீபாவளி பிளாக்பஸ்டர்: 'தம்மா' திரைப்படம் கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்த 'லோகா' படத்துடன் ஒப்பிட்டு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் ரத்தக் காட்டேரியாக கல்யாணி நடித்த படம் 300 கோடி வசூலை ஈட்டியது. ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ரத்தக் காட்டேரியாக நடித்துள்ள நிலையில், பலரும் ஒப்பிட்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஆயுஷ்மான் குரானா ஏற்கனவே விளக்கம் ஒன்றையும் அளித்திருந்தார். அதில், லோகா தன்னுடைய ஃபேவரைட் என்றும் இந்தி ரசிகர்களை தம்மா கவரும் என்றும் கூறினார். இந்நிலையில், தீபாவளி பிளாக்பஸ்டர் தம்மா என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
வசூல் வேட்டை உறுதி: தம்மா திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் ஒரு பக்கம் குவிந்து வந்தாலும், முதல் பாதி ரொம்பவே டல் அடிக்கிறது என்றும் ராஷ்மிகா மந்தனா மட்டுமே படத்தில் ஒரே ஆறுதல். படத்தின் முதல் பாதியில் சில பிரச்னைகள் உள்ளதாக கூறுகின்றனர். ஆனால், மேடாக் ஹாரர் யூனிவர்ஸின் இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய கல்லா கட்டும் என்றும் ஆயுஷ்மான் குரானாவின் நடிப்பு அட்டகாசம் என்றும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











