»   »  'இவரு பெரிய அரசியல்வாதிப்பா...' - தமிழக அரசியலை மீண்டும் பரபரக்க வைத்த ரஜினி!

'இவரு பெரிய அரசியல்வாதிப்பா...' - தமிழக அரசியலை மீண்டும் பரபரக்க வைத்த ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ... அவர் இல்லாமல் தமிழக அரசியல் களம் இல்லை எனும் அளவுக்கு கடந்த 22 ஆண்டுகளாக தனியாக ஒரு 'ரஜினி அரசியல்' நடந்து கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா, கருணாநிதி என்ற பெரும் ஆளுமைகள் பலமாக இருந்த காலகட்டத்திலேயே அரங்கேறிய அரசியல் அது. உண்மையில் இந்த இரு ஆளுமைகளுக்குமே ரஜினி என்ற ஆளுமை விஸ்வரூபமெடுப்பது பிடிக்கவில்லை. அதை ஜெயலலிதா நேரடியாகக் காட்டிவிட்டார். கருணாநிதி அப்படிக் காட்டவில்லை. அரவணைத்து, சில நேரங்களில் மூச்சுத் திணற அரவணைத்து நட்பு வட்டத்துக்குள் கொண்டு வந்து, சாதகமான ஆளுமையாக்கிக் கொண்டார்.

Reactions for Rajini speech

இப்போது இருவருமே களத்தில் இல்லை. உடனே ரஜினி அரசியலில் குதித்திருக்க வேண்டுமே... ஏன் இன்னும் தாமதம் செய்கிறார்? அட, அவராவது வர்றதாவது... சும்மா பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறாருப்பா... சினிமாவை விட்டு அவர் வரமாட்டார்... என்ற விமர்சனங்கள் இப்போது வரை தொடர்கின்றன.

கடந்த 22 ஆண்டுகளில் ரஜினி வெளிப்படையாக அரசியல் பேசியது 1996-ல்தான். அதுவும கட்சிகள், தலைவர்கள் பெயர்களைக் குறிப்பிட்டு, விமர்சித்து, ஆதரவு கேட்டு அவர் விமர்சனம் செய்தது அந்த ஒரு ஆண்டுதான். மற்ற தேர்தல் சமயங்களில் அவர் அமைதி காத்தார், 2004-ல் பாமகவுக்கு எதிரான வெளிப்படையான நிலைப்பாட்டை அறிவித்ததைத் தவிர்த்து.

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஓரளவு வெளிப்படையாக அரசியல் பேசியிருப்பது இந்த முறைதான். அதுவும் தனது ரசிகர்களின் அரசியல் பதவி ஆசை, பணம் சம்பாதிக்கத் துடிப்பது போன்றவற்றை அப்பட்டமாக அம்பலப்படுத்தியது இதுவே முதல் முறை.

"நான் ஒருவேளை பொறுப்புக்கு வந்தால், நிச்சயம் பணம், பதவி ஆசை கொண்டவர்களுக்கு இடமில்லை. அவர்களை உள்ளே நுழையக்கூட அனுமதிக்க மாட்டேன்," என்று அவர் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார் முதல் முறையாக.

இதுதான் அரசியல் களத்தை அதிரவைத்துள்ளது. நான் அரசியலுக்கு வரவேண்டுமா என்பதை ஆண்டவன் தீர்மானிப்பான் என்பதுதான் வழக்கமான பேச்சு. ஆனால் ரசிகர்களுக்கான எச்சரிக்கை, தனது அரசியல் வாழ்க்கையில் ஊழல் தலைவர்களுக்கு இடமில்லை என்பதைச் சொல்லும் விதமாக உள்ளதாக கருத்துத் தெரிவிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

"ரஜினி மிகப் பெரிய அரசியல்வாதி. ஒரு தேர்ந்த தலைவருக்கான முதிர்ச்சியும் பக்குவமும் இன்றைய அவரது பேச்சில் வெளிப்பட்டது. அவர் அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ... 'ஏன் இந்த மனிதர் வரக்கூடாது.. இன்னும் என்ன தயக்கம் இவருக்கு?' என்ற கேள்வியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது," என்கிறார், ரஜினியை தமாகா காலத்திலிருந்து உற்று நோக்கி வரும் ஒரு அரசியல் விமர்சகர்.

"ரஜினியின் இன்றைய பேச்சு தெளிவானது... அரசியலுக்கு வருவார் என்ற சமிக்ஞைகளை உள்ளடக்கியது. பல சிறு, நடுத்தர கட்சிகளின் தூக்கம்தான் இன்று தொலைந்து போயிருக்கும். ஆனால் இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள் தனது வெளிப்படையான அரசியலை அவர் செய்யாமல் காலம் தாழ்த்தினால், இந்தப் பேச்சுக்கு அர்த்தமில்லாமல் போகும்," என்கிறார் ரஜினியின் அரசியல் நண்பர் ஒருவர்.

-விதுரன்

English summary
Political critics and Tamil politicians comments on Rajinikanth's recent speech at his fans meet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil