த்ரில்லர் படமாக உருவாகி வரும் ’ரெட் லேபிள்’.. ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட சிம்ரன்!
சென்னை: கோயம்புத்தூரை களமாகக் கொண்ட மர்மமான கொலைக் கதையாக உருவாகியிருக்கிறது 'ரெட் லேபிள்' திரைப்படம். ஒரு கல்லூரியில் நிகழும் கொலைகளையும், அதைச் சுற்றிய சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. கே.ஆர். வினோத் இயக்கியுள்ள இத்திரைப்படத்தை, ரெவ்ஜென் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார். பொன். பார்த்திபன் இக்கதையை எழுதியுள்ளார்.
படத்தின் ஒளிப்பதிவை சதீஷ் மெய்யப்பன் கவனிக்க, கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். லெனின் நாயகனாகவும், அஸ்மின் நாயகியாகவும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் தோன்றுகிறார். முனிஷ்காந்த் ஒரு கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். கோவை நகரின் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

'ரெட் லேபிள்' என்ற தலைப்பு பொதுவாக டீ அல்லது மது வகைகளின் பெயரை நினைவூட்டலாம். ஆனால், இத்தலைப்பு அதற்கு நேர்மாறானது. 'ரெட்' என்பது புரட்சியையும், 'லேபிள்' என்பது அடையாளத்தையும் குறிக்கிறது. எனவே, இப்படம் அடையாளத்தைத் தேடும் பல மனிதர்களின் கதையை சித்தரிப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ளார். பொதுவாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காத சிம்ரன், புதிய படக்குழுவினரை ஊக்குவிக்கும் நல்லெண்ணத்தில், முதல் முறையாக 'ரெட் லேபிள்' போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











