குறும்படத்திற்கு தாவிய நடிகை.. பெண்கள் பிரச்னை பேசும் குறும்படத்தில் ரித்திகா சிங்!
சென்னை : மாதவன் நடித்த 'இறுதிசுற்று' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நிஜ குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங். அதன்பிறகு 'ஆண்டவன் கட்டளை', 'சிவலிங்கா' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது வணங்காமுடி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தற்போது குறும்படம் ஒன்றில் நடித்திருக்கிறார் ரித்திகா. பாலிவுட் கலைஞர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்தக் குறும்படத்திற்கு 'ஐ யம் சாரி' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குறும்படம் பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பாலியல் ரீதியான பிரச்னைகளைப் பற்றிப் பேசும் மியூசிக்கல் குறும்படமாக உருவாகியிருக்கிறதாம். இந்தக் குறும்படத்தை தேசிய விருது பெற்ற அஷ்வின் சதுர்த்தி இயக்கி இருக்கிறார்.
"நானும் ஒரு பெண் என்பதால் பெண்கள் குறித்த இந்த விழிப்புணர்வு படத்தில் ஆர்வமுடன் நடித்தேன். பெண்கள் தற்காப்பு கலை பயில வேண்டும் என்பதை ஒவ்வொரு தருணத்திலும் நான் கூறி வருகிறேன். அதை பலமாக சொல்ல இந்தப் படம் உதவியது" எனக் கூறியுள்ளார் ரித்திகா.
இந்தக் குறும்படம் மகளிர் தினமான இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை நிறுத்தக்கோரும் விழிப்புணர்வு குறும்படமாக உருவாகியிருக்கிறது 'ஐ யம் சாரி'.


Click it and Unblock the Notifications











