»   »  ஃபெப்சியைத் திருத்திய ஆர்கே செல்வமணி... வில்லத்தனம் காட்டிய விஷால்!

ஃபெப்சியைத் திருத்திய ஆர்கே செல்வமணி... வில்லத்தனம் காட்டிய விஷால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஃபெப்சி.... இது தமிழ் சினிமாவின் தவிர்க்கவே முடியாத அமைப்பு. 23 யூனியன்களைச் சேர்ந்த 25 ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்ட பெரிய அமைப்பு. திரைத் துறை என்பது வெறும் நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் மட்டுமல்ல.

இந்த 25 ஆயிரம் தொழிலாளர்களையும் உள்ளடக்கியதுதான் திரைத்துறை. இவர்களை முன்னிறுத்தியே திரையுலக நிர்வாகிகள் அரசிடம் சலுகைகள் கேட்கிறார்கள். இவர்களுக்கும் சேர்த்துதான் அரசு சலுகைகளைத் தருகிறது.

RK Selvamani stands tall in Fefsi issue

ஆனால் திடீரென ஃபெப்சி தொழிலாளர்களுடன் பணியாற்றுவது சாத்தியமல்ல.. இனி யார் வேண்டுமானாலும் சினிமா தொழிலாளியாக பணியாற்றலாம் என்று விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துவிட்டது. ஃபெப்சி தொழிலாளர்கள் பெரும் பணக்காரர்கள் அல்ல. அன்றாட சம்பளத்தை நம்பியிருப்பவர்கள்தான் பெரும்பான்மையோர்.

அதற்காக ஃபெப்சி தரப்பில் தவறே இல்லை என்று யாரும் சொல்லவில்லை. ஏன், அதன் தலைவர் ஆர்கே செல்வமணியே, பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த காலகட்டங்களில் ஃபெப்சி தொழிலாளர்களால் பாதிக்கப்பட்டவர்தான்.

இப்போது தான் தலைவராக வந்த பிறகு, தயாரிப்பாளர்களை ஃபெப்சி எந்த வகையில் பாதிக்கிறது எனப் பார்த்து அவற்றைச் சரிசெய்துள்ளார். சின்ன படமோ பெரிய படமோ, இத்தனை தொழிலாளர்கள் கட்டாயம் என்று இருந்ததை, தேவைக்கேற்ப தொழிலாளிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாற்றி அமைத்தவர் செல்வமணிதான்.

அதேபோல, ஃபெப்சியின் எந்த அமைப்பும் படப்பிடிப்புத் தளங்களில் போய் தகராறு செய்யக் கூடாது, பேக்கப் சொல்லக் கூடாது என கண்டிப்பு காட்டினார். அப்படி பேக்கப் சொன்ன அமைப்பின் தலைவரையும் மன்னிப்புக் கேட்க வைத்தார்.

சொல்லப் போனால், ஃபெப்சி அமைப்பை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக மாற்றியுள்ளார் செல்வமணி.

பில்லா பாண்டி பிரச்சினையை முன்வைத்து ஃபெப்சியை விஷால் ஒரேயடியாக ஒதுக்க முயன்றபோது, முடிந்தவரை இழுத்துப் பிடித்து பேச்சுவார்த்தைக்கு வரக் கோரினார். ஆனால் கடைசி வரை விஷால் இறங்கி வரவில்லை.

இந்த நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்து தங்கள் பிரச்சினையைச் சொன்னார் செல்வமணி. அனைத்தையும் கேட்ட ரஜினிகாந்த், மோதல் போக்கு வேண்டாம். வேலை நிறுத்தமும் வேண்டாம். சமரசமாகப் பேசி தீர்வு காணுங்கள் என்று அறிவுறுத்தினார். அதேபோல தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடமும் சொன்னார்.

திரையுலகின் முக்கிய பிரமுகர்களும் இதே கருத்தில் இருந்தனர். எல்லோரும் கேட்டுக் கொண்டபடி ஆர்கே செல்வமணி இறங்கி வந்து வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றார். ஆனால் விஷால் கடைசி வரை வீம்பாகவே இருந்துவிட்டார். ஃபெப்சி வேலை நிறுத்தத்தைக் கைவிட்ட பிறகும், எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. நாங்கள் சொன்னது சொன்னதுதான். ஃபெப்சி உறுப்பினர்களை வேலைக்கு வைப்பதும் வைத்துக் கொள்ளாததும் எங்கள் இஷ்டம் என்று கூறியுள்ளார்.

இப்போது ஃபெப்சி தோற்றது போலத் தோன்றினாலும், தயாரிப்பாளர் சங்கத்துக்கு இது வெற்றியல்ல. ஃபெப்சி தொழிலாளர்களை பெருந்தன்மையாக மன்னித்து ஒப்பந்தங்களை திருத்தி அமைத்திருந்தால் அதுதான் நிஜமான வெற்றியாக இருந்திருக்கும்.

English summary
Though RK Selvamani announced withdrawal of its strike, producers council still adamant in its stand

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil