யார் என்ன சொன்னாலும் கவலைப்படமாட்டேன்.. மனைவியிடம் ரோபோ சங்கர் சொன்னது என்ன தெரியுமா?
சென்னை: மறைந்த காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மனைவி தனியார் யூடியூப் சேனல் நடத்தும் ருசி நேரம் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது கைப்பக்குவத்தை ரசிகர்களுக்கு சொல்லிக்கொடுத்தார். அதனைத் தொடர்ந்து குடும்பத்தோடு அமர்ந்து தான் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்ட போது ரோபோ சங்கர் குறித்து அவர் பேசிய விஷயம் சோஷியல் மீடியாக்களில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
நடிகர் ரோபோ சங்கர் தனுஷின் மாரி படத்தின் மூலம் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். முதல் படத்திலேயே அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸை அள்ளிய அவர்; அடுத்தடுத்து வரிசையாக வாய்ப்புகளை பெற்றார். இதற்கிடையே நடன கலைஞர் பிரியங்காவையும் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இந்திரஜா என்ற மகள் இருக்கிறார். அவரும் தமிழில் சில படங்களில் நடித்திருக்கிறார்.
உடல்நல குறைவு: சினிமாவில் பீக்கில் இருந்தபோது அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. அதற்கு அவருக்கு இருந்த அதீத மது பழக்கமே காரணம். எப்படியோ அவரை மருத்துவமனையில் அனுமதித்து ஏகப்பட்ட சிகிச்சைகள் கொடுத்து பத்திரமாக மீட்டு கொண்டுவந்தார்கள் நண்பர்களும், குடும்பத்தினரும். புது மனிதனாக பிறப்பெடுத்த சங்கர் முன்னைவிட வேகமாக கரியரில் ஓட ஆரம்பித்தார். அனைத்து தீய பழக்கங்களிலிருந்தும் வெளியே வந்திருந்தார்.

ரோபோ சங்கர் உயிரிழப்பு: தொடர்ந்து சினிமாக்களில் நடித்தும், சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டும்வந்த அவர்; ஒரு படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு திடீரென வாந்தி வந்து மயக்கம் போட்டார். உடனடியாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எப்படியாவது அவர் உடல்நலம் தேறிவிடுவார் என்றுதான் குடும்பத்தினர் நினைத்தார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துவிட்டார்.
கலங்கிய மனைவி பிரியங்கா: அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. முக்கியமாக மனைவி பிரியங்காவை ரொம்பவே பாதித்தது. தனது கணவரின் உடல் அருகே இருந்து சங்கரா சங்கரா என்று அவர் அழைத்துக்கொண்டிருந்தது காண்போரை கலங்க செய்தது. அதேபோல் சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது பிரியங்கா துக்கத்துடன் நடனமாடியதை பார்த்தபோதும் அனைவரது நெஞ்சும் கனத்துதான் போனது.
பிரியங்கா பேட்டி: தற்போது கணவரின் இழப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவந்திருக்கும் பிரியங்கா தனியார் யூடியூப் சேனல் நடத்தும் ருசி நேரம் என்ற சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், " நான் ஒரு டான்ஸர். ஆனால் குண்டாக இருந்தேன். எனவே எனது அப்பா, அம்மா, நண்பர்கள் எல்லாம் நீ நல்ல டான்ஸர். ஆனால் குண்டாக இருக்கியே என்று திட்டுவார்கள். என்னை வெயிட் குறைக்கக்கூடாது என்று சொன்னவர் என்றால் ரோபோ சங்கர்தான்.
இதுதான் அழகு: மனைவி குண்டாக இருந்தால் கமெண்ட்ஸ் செய்யும் கணவர்கள் மத்தியில், அவர் என்னிடம் இதுதான் உனக்கு அழகு. நீ இப்படியே இரு. யார் என்ன சொன்னாலும் கவலைப்படமாட்டேன். நீ இப்படி இருந்தால்தான் எனக்கு பிடிக்கும் என சொல்லி என்னை வர்ணித்து கொஞ்சியவர் அந்த மனிதர்தான்" என்றார். அவரது இந்தப் பேட்டி பலரிடமும் வரவேற்பை பெற்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications











