அமுல் பேபி மாதிரி கொழுக் மொழுக்னு இருக்கேன்.. ரோபோ சங்கர் கடைசியாக பேசியது.. இப்படி தவிக்கவிட்டுட்டாரே!
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் ரொம்பவே ஃபேமஸ் ஆனவர். மாரி படத்திலிருந்து தனது திரை பயணத்தை தொடங்கிய அவர் வாயை மூடி பேசவும், வேதாளம் என ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று மீண்ட அவருக்கு; மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இந்நிலையில் அவர் கடைசியாக சினிமா ஈவென்ட் ஒன்றில் பேசியது கலங்க செய்கிறது.
மதுரையை பூர்வீகமாகக் கொண்ட ரோபோ சங்கர் ஆரம்பத்தில் மேடைகளில் தன்னுடைய திறமைகளை காண்பித்தவர். உடல் முழுவதும் வெள்ளி பெயின்ட்டை அடித்துக்கொண்டு ரோபோ போன்று நடனமாடி அனைவரையுமே சிரிக்க வைத்தார். பிறகு தமிழ்நாடு முழுவதும் ஓரளவு அறியப்பட்ட அவர்; தனியார் சேனல் நடத்திய ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு கலக்கினார். இதனால் அவருக்கு நல்ல பிரபல்யம் கிடைத்தது.
சினிமாவில்: சின்னத்திரையில் ஜொலித்தால் வெள்ளித்திரையிலும் ஜொலிக்கலாம் என்பதற்கேற்ப தனுஷ் ஹீரோவாக நடித்த மாரி திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார் சங்கர். சனிக்கிழமை என்ற கதாபாத்திரத்தை ஏற்று அசால்ட்டாக ஸ்கோர் செய்திருந்தார். அதற்கு பிறகு வாயை மூடி பேசவும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வேதாளம் என எக்கச்சக்கமாக நடித்துக்கொண்டே இருந்தார்.

உடல்நல குறைவு: அவரது கரியர் பீக்கில் சென்றுகொண்டிருந்தபோது சங்கரின் உடல்நலம் பிரச்னையை சந்தித்தது. அளவுக்கதிகமான குடி காரணமாக உடல்நல குறைவு ஏற்பட மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் துணையோடு நாட்டு வைத்தியம் எடுத்து அதிலிருந்து மீண்டார் என்று கூறப்படுவதுண்டு. நலமாக திரும்பி வந்த பிறகு குடியின் தீமைகள் குறித்து பேட்டிகளில் பேசினார். மேலும் அதுதொடர்பான சில விளம்பர படங்களிலும் நடித்தார்.
மீண்டும் பிரச்னை: இனி எந்தப் பிரச்னையும் இருக்காது என்று நினைத்திருந்த அவரது குடும்பத்துக்கு அதிர்ச்சி தரும் விதமாக; ரோபோ சங்கருக்கு மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டது. எனவே பெருங்குடியில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 46. சங்கரின் இறுதி சடங்குகள் இன்று சென்னையிலேயே நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல், தனுஷ், சிம்பு உள்ளிட்டோர் தங்களடு இரங்கலை தெரிவித்திருக்கிறார்கள். இன்னும் பலர் நேரில் வந்தும் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
ரோபோ சங்கர் பேசியது: இந்நிலையில் தான் இறப்பதற்கு முன்பு கடைசியாக அவர் பட ஈவென்ட் ஒன்றில் கலந்துகொண்டு பேசியது ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் பேசுகையில், "இந்தப் படத்துக்காக தாடியை எடுத்துவிட்டு கொழுக் மொழுக் என்று இருக்கிறேன். எனது லுக்கை பார்த்ததுமே தயாரிப்பாளரும் அதனையேத்தான் சொன்னார். இதனை தமிழ்நாடே பார்க்கப்போகிறது" என்றார். அவர் கடைசியாக தேசிங்கு ராஜா 2, சொட்ட சொட்ட நனையுது ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் சில படங்களில் கமிட்டாகியிருந்தார்.


Click it and Unblock the Notifications











