அது வேண்டாம்னு இந்திரஜாவும் சொன்னார்.. சித்திக்கு யாரும் இல்லை.. ரோபோ சங்கர் மனைவி பற்றி உறவினர் உருக்கம்
சென்னை: ரோபோ சங்கர் கடந்த மாதம் உடல்நல குறைவால் உயிரிழந்தார். ஏற்கனவே அவருக்கு இருந்த உடல்நல பிரச்னை மீண்டும் தலை தூக்கியதால் இந்த உயிரிழப்பு நடந்தது. அவர் இறந்துபோனது அவரின் குடும்பத்துக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் பெரிய அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இந்நிலையில் ரோபோ சங்கரின் மனைவியுடைய சகோதரி மகள் உருக்கமாக ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
பன்முக திறமை கொண்ட கலைஞன் ரோபோ சங்கர். மதுரையில் மேடை நிகழ்ச்சிகளில் ஆரம்பித்த தன்னுடைய பயணத்தை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து கொண்டிருந்தவர். ஒருவழியாக சின்னத்திரையில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு சரசரவென்று வளர்ந்தார். அவரது திறமை தனுஷுக்கு புலப்பட்டதால் தான் ஹீரோவாக நடித்த மாரி படத்தில் வாய்ப்பும் கொடுத்தார்.
பிஸி ரோபோ சங்கர்: மாரி படத்தில் சங்கரின் நடிப்பு பலருக்கும் பிடித்துப்போனதால் அவருக்கான வாய்ப்புகள் சினிமா மார்க்கெட்டில் உருவாக தொடங்கின. அப்படி அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இதனால் அவரை காமெடி, குணசித்திரம் ஆகிய ரோல்களுக்கு சினிமா படைப்பாளிகள் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

தப்பித்த சங்கர்: அவரது கரியர் பீக்கில் இருந்தபோது திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அளவுக்கு அதிகமாக மது குடித்ததன் காரணமாக அந்த பிரச்னையில் சிக்கினார். ஒருவழியாக குடும்பத்தினர், மருத்துவர்கள், நண்பர்கள் உதவியோடு சிகிச்சை பெற்று முழு குணமாகி மீண்டு வந்தார். அப்படி வந்த அவர் தனது நடிப்பு பயணத்தில் மட்டும் முழுக்க முழுக்க கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.
உயிரிழந்த ரோபோ: நிலைமை இப்படி இருக்க கடந்த மாதத்தில் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் அவர் கலந்துகொண்டிருந்தபோது ரத்த வாந்தி எடுத்து மயக்கம் போட்டு விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிரமான சிகிச்சை அளித்தாலும்; சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. வயது 46தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சகோதரி மகள் பேட்டி: சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது தனது பிரியாவிடையை அவரது மனைவி பிரியங்கா நடனம் ஆடி வெளிப்படுத்தியது பார்ப்போரை உருக வைத்தது. இந்நிலையில் பிரியங்காவின் சகோதரி மகள் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இறுதி சடங்கின்போது சித்திக்கு நடந்த சில விஷயங்களை பார்த்து இதெல்லாம் வேண்டாம் என்று நானும், இந்திரஜாவும் சொன்னோம். அந்த சடங்குகள் எல்லாம் வேறு யாருக்காவது நடந்தால் எனது சித்தி குரல் கொடுப்பார்.
சித்திக்கு யாரும் இல்லை: ஆனால் அன்று எனது சித்திக்காக பேச யாருமே இல்லை.எனது சித்திக்கு சித்தப்பா தங்க கொலுசுதான் போட்டார். மூன்று மெட்டி போடுவார். ஆனால் அன்று அவை எதுவுமே சித்தியின் காலில் இல்லாததை பார்த்தபோது தனியாக வந்து அழுதுவிட்டேன். எனது சித்தி குண்டாக இருக்கும்போது அவரது கைகளும், போட்டிருந்த அணிகலன்களும் அவ்வளவு அழகாக இருக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











