ஆர்ஆர்ஆர் செகண்ட் பார்ட் கன்ஃபார்ம்… அப்போ மகேஷ் பாபு படம் என்னாச்சு ராஜமெளலி காரு?
ஐதராபாத்: ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 1200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியாபட், அஜய்தேவ் கன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த ஆர்ஆர்ஆர் தற்போது ஆஸ்கர் போட்டியிலும் பங்கேற்றுள்ளது.
இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் ராஜமெளலி முக்கியமான அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர்
ராஜமெளலி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தரமான சாதனையை படைத்தது. தெலுங்கில் உருவான ஆர்ஆர்ஆர், தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என பான் இந்தியா படமாக வெளியாகி 1200 கோடிக்கும் மேல் வசூலித்தது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய்தேவ் கன் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தனர். ஆர்ஆர்ஆர் படத்தின் மேக்கிங்கை ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் பாராட்டியதோடு, இந்தப் படத்துக்கு ஆஸ்கர் போட்டியில் விருதுகள் நிச்சயம் என கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆஸ்கர் போட்டியில் ஆர்ஆர்ஆர்
திரையரங்குகளைத் தொடர்ந்து ஒன்றுக்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களிலும் வெளியானது ஆர்ஆர்ஆர். நெட்பிளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ், ஜீ5 தளங்களில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' படத்திற்கு, ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனிடையே இந்தியாவில் இருந்து ஆஸ்கர் போட்டிக்கு ஆர்ஆர்ஆர் திரைப்படம் தேர்வாகாததால் நேரடியாக தயாரிப்பு நிறுவனமே களமிறங்கியுள்ளது. அதன்படி மொத்தம் 15 பிரிவுகளில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் ரேஸில் போட்டியிடுகிறது. இதனால், ராஜமெளலி உள்ளிட்ட படக்குழுவினர் ரொம்பவே உற்சாகத்தில் உள்ளனர்.

ஆர்ஆர்ஆர் செகண்ட் பார்ட்
இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என இயக்குநர் ராஜமெளலி கூறியுள்ளார். சமீபத்தில் பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டி கொடுத்துள்ள ராஜமெளலி, "ஆர்ஆர்ஆர் படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வரும். அதற்கான கதையை தனது தந்தை விஜேயந்திர பிரசாத் எழுதி வருவதாக கூறியுள்ளார். மேலும், ஆர்ஆர்ஆர் இரண்டாம் பாகத்திலும் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் நடிப்பார்கள்" என தெரிவித்துள்ளார். இதனால், ஆர்ஆர்ஆர் படத்தின் செகண்ட் பார்ட்டை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து வருகின்றனர்.

மகேஷ் பாபு படம் என்னாச்சு?
விஜேயந்திர பிரசாத் தான் ராஜமெளலியின் பாகுபலி, ஆர்ஆர்ஆர் உட்பட மற்ற படங்களுக்கும் கதை எழுதியுள்ளார். அதேபோல், இந்தியில் சூப்பர் ஹிட் அடித்த சல்மான் கானின் 'பஜ்ராங்கி பைஜான்' படத்தின் கதையும் விஜேயந்திர பிரசாத் எழுதியது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆர்ஆர்ஆர் இரண்டாம் பாகத்தின் கதையையும் விஜேயந்திர பிரசாத் எழுதி வருவது படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இன்னொரு பக்கம் மகேஷ் பாபுவின் படத்தை இயக்கவும் ராஜமெளலி கமிட் ஆகியுள்ளதால், முதலில் எது தொடங்கப்படும் என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆனாலும், இதுவரை கிடைத்த தகவல்களின் படி, முதலில் மகேஷ் பாபு படத்தை முடித்துவிட்டே, ஆர்ஆர்ஆர் இரண்டாம் பாகத்தை ராஜமெளலி இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











