twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'பெப்சி' தொழிலாளர்கள் Vs தயாரிப்பாளர்கள்: முதல்வர் தலையிட கோரிக்கை!

    By Shankar
    |

    சென்னை: 'பெப்சி' தொழிலாளர்கள் சம்பள பிரச்சினை தீர்வு காண முடியாத அளவுக்கு முற்றிவிட்டதால், இதில் முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு சமரசம் செய்ய வேண்டும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கேட்டுக்கொண்டார்.

    சம்பள உயர்வு தொடர்பாக பட அதிபர்களுக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கும் இடையே பெரும் சிக்கல் எழுந்துள்ளது.

    "இனிமேல், பெப்சியுடன் தயாரிப்பாளர்களுக்கு எந்த ஒப்பந்தமும் கிடையாது'' என்று தயாரிப்பாளர்கள் கூறிவிட, அதற்கு, 'பெப்சியை உடைக்க சதி நடக்கிறது' என்று தொழிலாளர்கள் தரப்பில் பதில் அறிக்கை வெளியிடப்பட்டது. "பெப்சி இல்லாமல் சினிமா எடுக்க முடியாது'' என்று அதன் ஊதியக்குழு தலைவரான இயக்குநர் அமீர் கூறிவிட்டதால், பெப்சி தரப்பு வலுவடைந்துள்ளது.

    இதற்கு பதில் அளிப்பதற்காக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் அவசர கூட்டம், சென்னையில் நேற்று காலை நடந்தது. கூட்டம் முடிந்த பின், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நிருபர்களிடம் கூறுகையில், "பெப்சி ஊழியகர்கள் இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என்பது தயாரிப்பாளர்களின் நோக்கம் அல்ல. அப்படி ஒரு அறிக்கை நாங்கள் வெளியிட்டோம் என்றால் அந்த நிலைமைக்கு தயாரிப்பாளர்களை தள்ளியவர்களே 'பெப்சி'தான்.

    350 ருபாய் சம்பளம் வாங்கும் தொழிலாளிக்கு 30, 40, 50 ரூபாய்தான் ஏற்றி கேட்கிறோம் என்று ஒரு பொய்யான தகவலை தெரிவித்து, தயாரிப்பாளர்களை ஒரு கொடுமைக்காரர்கள் போல் சித்தரித்து இருக்கிறார்கள். தொழிலாளர்கள் சம்மேளனத்தை சார்ந்த அனைத்து தொழிலாளர் பிரிவுகளுக்கும் பழைய ஊதியத்தில் இருந்து 100 ரூபாய் ஏற்றித்தர தயாராக இருக்கிறோம். இந்த நொடியிலேயே அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயார்.

    தூண்டி விடுகிறார்கள்

    தயாரிப்பாளர்கள், தொழிலாளர்களை எவ்வளவு கண்ணியத்தோடு நடத்துகிறார்கள் என்பதை திரைப்பட தொழிலாளர்களும் நன்றாக அறிந்திருக்கிறார்கள். ஆனால், தற்போது திரைப்பட தொழிலாளர் அமைப்பை வழி நடத்தி செல்ல, முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரோ அல்லது நிர்வாகமோ இல்லாத காரணத்தால், அந்த பதவியை கைப்பற்றுவதற்காக தொழிலாளர்களுக்கு முறையற்ற, அதிக ஊதியத்தை பெற்றுத்தருவதாக சில சுயநலவாதிகள் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்த உண்மையை தொழிலாளர்களே உணர்ந்து கொள்ளும், புரிந்து கொள்ளும் நிலைமை வெகு தொலைவில் இல்லை.

    படப்பிடிப்புகள் ரத்து

    'புதிய ஊதியம் தந்தால்தான் பணிபுரிவோம், இல்லையென்றால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டோம்' என்று கூறி, நேற்று முன்தினம் மட்டும் சுமார் 16 தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகளை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.

    இது தொடர்ந்தால் ஆந்திராவிலும், கேரளாவிலும் உள்ளது போல் இங்கேயும் புதிய தொழிலாளர் அமைப்பு உருவாகும்,'' என்றார்.

    "நடிகர்களுக்கு பல கோடிகளை சம்பளமாக கொடுக்கிறார்கள். தொழிலாளர்களின் சம்பளத்தை மட்டும் குறைக்க சொல்கிறார்கள்'' என்று பெப்சி தரப்பில் சொல்லப்படுகிறதே? என்று நிருபர்கள் கேட்டதற்கு, "எந்த நடிகரும் தங்களை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தெருவுக்கு போக வேண்டும் என்று நினைப்பதில்லை. படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து உதவியிருக்கிறார்கள். தொழிலாளர்கள் வாங்கிய சம்பளத்தை திருப்பிக் கொடுப்பார்களா?'' என்று எஸ்.ஏ.சந்திரசேகரன் பதில் அளித்தார்.

    பேட்டியின்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத் தலைவர்கள் டி.ஜி.தியாகராஜன், டி.சிவா, செயலாளர்கள் கே.முரளிதரன், பி.எல்.தேனப்பன், பொருளாளர் எஸ்.தாணு உள்ளிட்டோர் இருந்தனர்.

    English summary
    Tamil Producer Council president S A Chandrasekaran urged the CM to solve the deadlock between Producers and cinema workers federation FEFSI.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X