»   »  அழகாபுரி அழகப்பனின் பல்சுவைக்கதை - சக்களத்தி

அழகாபுரி அழகப்பனின் பல்சுவைக்கதை - சக்களத்தி

Subscribe to Oneindia Tamil

- கவிஞர் மகுடேசுவரன்

நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது நெடுங்கதைகள் படிக்கத் தொடங்கினேன். குமுதம் இதழோடு 'மாலைமதி' என்ற நெடுங்கதை இதழையும் வாங்குவோம். வானொலியைத் தவிர வேறெந்த வீட்டுப் பொழுதுபோக்குக்கும் வழியில்லாத எண்பதாம் ஆண்டுகளின் நடுப்பகுதி அது. தொண்ணூற்றாறு பக்கங்களுக்கு வரும் மாலைமதியை என் தந்தையார்தான் படிப்பார். நான் குமுதத்தோடு நின்றுவிடுவேன்.

படிப்பதற்கு வேறு எவ்விதழும் இல்லாத ஒரு நாளில் மாலைமதியை எடுத்தேன். அதில் 'அழகாபுரி அழகப்பன்' என்னும் கதாசிரியர் எழுதிய நெடுங்கதை இருந்தது. படிக்கத் தொடங்கியதுதான் தெரியும். என்னை மறந்து அக்கதைக்குள் மூழ்கிவிட்டேன். பத்தாம் அகவை நிரம்பிய சிறுவனுக்குக் கதையின் சுவையை முதன்முதலாக ஊட்டிய எழுத்து அவருடையது. கதை சொல்வதை நோக்கமாகக் கொண்ட, விறுவிறுப்பான நடையில் அமைந்த எளிய சொற்றொடர்கள்.

Sakkalathi, an unfottable folk classic in Tamil cinema

அழகாபுரி அழகப்பன் நூற்றுக்கணக்கான பல்சுவை நெடுங்கதைகளை எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன். அவருடைய கதைத் தலைப்புகளைப் பார்த்தால் துணுக்குறும்படி இருக்கிறது. தூக்கிவாரிப் போடுகிறது. 'நள்ளிரவு நாயகி, கிராமத்து அநியாயம், காதல் ஜென்மங்கள், அது வந்து நிற்கிறது, புதுப்புதுப் பெண்கள், அத்தானைப் பார்த்தீங்களா, திலகா ஒரு திறந்த வீடு' என்று தலைப்பு வைத்து விளையாடியிருக்கிறார். மலையாளப் படங்களுக்கு திரையரங்குகளில் இளமைப் பட்டாளம் கூடிய அக்காலத்தில் இத்தலைப்புகளைப் பார்க்கும் ஒருவர் புத்தகம் வாங்காமல் சென்றிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். என் கதைப் படிப்புக் காலத்தின் முதல் ஐந்து ஆண்டுகளில் அவருடைய கதைகளை விரும்பிப் படித்தேன். அழகாபுரி அழகப்பனின் கதைகள் இப்போது எங்கேனும் கிடைக்கின்றனவா என்று தேடிப்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. வெகுமக்கள் வாசிப்புலகில் பத்திருபது ஆண்டுக்காலம் செல்வாக்கு பெற்றிருந்த ஓர் எழுத்தாளர் நம் கண்முன்னேயே சுவடுகளற்றவராக மாறி நிற்கும் கொடுமை தமிழ்மொழியில்தான் நிகழும். அவருடைய உருவப்படம்கூட இணையத்தில் கிடைக்கவில்லை.

Sakkalathi, an unfottable folk classic in Tamil cinema

பல்சுவைத் தளத்தில் அவருடைய கதைகள் எழுதப்பட்டிருந்தாலும், நல்ல இலக்கியத்தின் உட்கூறுகளாய் மாறத்தக்க பல நிகழ்வுகளை அவற்றில் கோத்திருக்கிறார். தமிழ்த் திரைப்படங்களை ஆராய்ந்துகொண்டபோது அழகாபுரி அழகப்பனின் திரைப்படப் பங்களிப்பு என் கண்ணில் பட்டது. தேவராஜ்-மோகன் இயக்கிய 'சக்களத்தி' என்ற திரைப்படத்திற்கு அழகாபுரி அழகப்பன் கதை வசனம் எழுதியிருக்கிறார். நடிகர் பட்டியலிலும் அவர் பெயர் வருகிறது. படத்தில் ஏதேனும் ஒரு காட்சியில் அவர் நடித்திருக்க வேண்டும், அவரைக் கண்டுபிடிக்கலாம் என்று முழுப்படத்தையும் பார்த்தேன். படத்தில் அவர் யார் என்பதை என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆனால் அது நல்ல கதைப்படம். சக்களத்தி திரைப்படத்தின் கதையை நவீன இலக்கிய மொழியில் எழுதினால் இன்றைய எழுத்தாளர்களின் எந்தக் கதையையும் நிகர்த்து நிற்கும். அந்தக் கதையைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.

பாஞ்சாலி (ஷோபா) தன் அண்ணனின் வளர்ப்பில் வளர்பவள். அண்ணிக்குப் பாஞ்சாலிமீது வெறுப்பு. சுடுசொற்களால் காய்ச்சுகிறாள். பாஞ்சாலிக்குத் திருமணம் செய்துவைக்க அண்ணன் நினைக்கிறான். அருகிலுள்ள கிராமத்தில் பண்ணையார் வீரப்பனிடம் சோற்றுக்கு வேலை பார்த்திருப்பவன் சாமிக்கண்ணு (சுதாகர்). சாமிக்கண்ணின் தங்கை அழகம்மை (அம்பிகா) கல்லூரியில் படிப்பவள். சாமிக்கண்ணின்மீது இரக்கத்தோடு இருப்பவள். சாமிகண்ணின் அடுத்த வீட்டுக்காரி சௌந்தரம் (ஒய்.விஜயா).

Sakkalathi, an unfottable folk classic in Tamil cinema

தன் கணவன் சிங்கப்பூர்க்கு வேலைக்குச் சென்றுவிட்டதால் தனியாக இருப்பவள் சௌந்திரம். மாதந்தவறாமல் கணவனிடமிருந்து பணம் வருகிறதே தவிர, கணவன் வருவதாய்த் தெரியவில்லை. நகை நட்டு என்று ஒய்யாரமாக வாழ்ந்தாலும் ஆண்மையால் ஆளப்படாமல் தவிப்பவள். சாமிக்கண்ணிடம் 'கொழுந்தனாரே... கொழுந்தனாரே...' என்று கள்ளங் கபடமில்லாமல் கொஞ்சி விளையாடுபவள்.

சாமிக்கண்ணுக்குச் சர்க்கரை ஆலையில் வேலை வாங்கித் தருவதாக பண்ணையார் வீரப்பன் கூறுகின்ற உறுதிமொழியின் அடிப்படையில் சாமிக்கண்ணுக்கும் பாஞ்சாலிக்கும் திருமணம் நடக்கிறது. சௌந்திரம்தான் புதுமணமக்களான சாமிக்கண்ணுக்கும் பாஞ்சாலிக்கும் முதலிரவு ஏற்பாடுகளை முன்னிருந்து செய்து வைக்கிறாள். பாஞ்சாலியைக் கூடப்பிறந்த பிறப்பாக நினைக்கிறாள்.

Sakkalathi, an unfottable folk classic in Tamil cinema

நாட்செல்ல நாட்செல்ல சாமிக்கண்ணின் வேலையில்லாத வெட்டித்தன்மை பாஞ்சாலியைப் பதறவைக்கிறது. அழகம்மையிடம் சென்று அண்ணனுக்குத் தன்குறைகளைச் சொல்லி ஒரு கடிதம் எழுதிப்போடச் சொல்கிறாள். அழகம்மையோ, "இங்கே அனைவரும் நலம்... எனக்கு எக்குறையுமில்லை," என்பதைப்போல் எழுதித் தருகிறாள். நமக்கு ஆயிரம் துன்பங்கள் இருந்தாலும் கணவன் வீட்டிலிருந்து பிறந்தகத்திற்குச் செல்லும் கடிதம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது அழகம்மையின் அறிவுரை.

சாமிக்கண்ணு திருந்துவதாகத் தெரியவில்லை. தேநீர்க்கும் வடைக்கும் ஊரார் இடும் பணிகளைச் செய்கிறான். இரவில் காமத்துடன் தன்னை அணைக்கும் சாமிக்கண்ணை வைகிறாள் பாஞ்சாலி. "ஒரு வேலை வெட்டி செஞ்சு நாலு காசு சம்பாதிச்சுக் கொடுத்துட்டு என்னைத் தொடு... அதுவரைக்கும் நான் உனக்கு முந்தானை விரிக்க மாட்டேன்," என்று பாய் தலையணையைத் தூக்கி வெளியே எறிகிறாள். "வேலை கிடைச்சா நான் என்ன செய்யவா மாட்டேங்கிறேன் ?" என்று நொந்து வெளியேறுகிறான் சாமிக்கண்ணு.

Sakkalathi, an unfottable folk classic in Tamil cinema

இதற்கிடையில் சிங்கப்பூரிலிருந்து வரும் பக்கத்துவீட்டுக்காரன் மூலம் சௌந்திரத்தின் கணவன் சீனாக்காரி ஒருத்தியைத் திருமணம் செய்துகொண்டு அங்கேயே வாழ்வது தெரிகிறது. சௌந்திரம் நெஞ்சைப்பிடித்துக்கொண்டு சாய்கிறாள். அவளுடைய நெஞ்சு வலிக்கு மருத்துவம் பார்க்க நகரத்திற்குச் செல்கையில் அந்த மருத்துவன் சௌந்திரத்தின் நிலையறிந்து அவள் உணர்வுகளைத் தூண்டி அணைத்துவிடுகிறான். மருத்துவனுடனான சௌந்திரத்தின் உறவு பலநாள்கள் நீடிக்கையில் ஊர்ப்பெண்களில் ஒருத்திக்குத் தெரிந்துவிடுகிறது. அவள் அந்தக் கதையை ஊரெல்லாம் பரப்பிவிட, சௌந்திரம் நகரத்திற்குச் செல்வதை நிறுத்திவிடுகிறாள். அவள் அம்முடிவை எடுப்பதற்கு ஊர்ப்பண்ணையின் மிரட்டலும் ஒரு காரணம். ஆனால், சௌந்திரத்தைத் தேடி அந்த மருத்துவனே கிராமத்துக்கு வருகிறான். சௌந்திரம் தன் மானமே போயிற்று என்று அவனைக் கடிந்து அனுப்புகிறாள். மருத்துவனை ஊர்நடுவில் வைத்து அடித்து உதைத்து ஓடவைக்கிறான் வீரப்பன். "இவ்வூர்க்காரியைத் தேடி வெளியூர்க்காரன் வருவதா ? இனி இப்படி யாராவது உன்னைத் தேடி வந்தால் நசுக்கிவிடுவேன்...," என்று சௌந்திரத்தை மிரட்டுகிறான்.

சௌந்திரத்திற்கு நேர்ந்தவை பற்றி பாஞ்சாலிக்குத் தெரியாது. தன் அண்ணனின் ஊர்த்திருவிழாவுக்காகச் சென்றவள் அண்ணியின் இழிசொல் பொறாமல் இடையிலேயே திரும்பி வருகிறாள். "கல்யாணமாயி ஒரு வருசம் ஆச்சு. இன்னும் மாத்துச் சீலைக்கு மறுசீலை இல்ல. நாங்க கட்டிவிட்ட சீலையோடதான வந்து நிக்கற....? இன்னும் உனக்கு இறுமாப்பு கொள்ளல... மத்தவளுங்க மாதிரி சம்பாதிச்சுக் கஞ்சியூத்துற புருசனைக் கட்டியிருந்தா உன்னைப் புடிக்க ஏழூருல்ல வேணும்," என்ற அண்ணியின் கொடுஞ்சொல் பொறாமல் அழுதுகொண்டே ஊர்திரும்புகிறாள்.

Sakkalathi, an unfottable folk classic in Tamil cinema

வழியில் இருட்டில் கரும்புத் தோட்டத்தில் ஒரு பெண்ணுருவம் செல்வதைப் பார்த்து "யாரது?" என்று கேட்க இன்னொரு புறத்திலிருந்து சாமிக்கண்ணு வருகிறான். வீரப்பன் சொன்னதால் கரும்புத் தோட்டக் காவலுக்கு நிற்பதாகச் சொல்கிறான். ஓடியது யார் என்று கேட்கிறாள். "சீதை வேசம் போடற சொக்கனைப் பார்த்தா உனக்குப் பொம்பளையாவா தெரியுது ?" என்பது அவன் பதில்.

பாஞ்சாலிக்கு ஐயம் வலுக்கிறது. சாமிக்கண்ணு இரவில் வீடு தங்குவதில்லை. இதற்கிடையில் இரவானால் கறிச்சோறு ஆக்கி எடுத்துக்கொண்டு சௌந்திரம் வெளியே செல்வதையும் அவள் வீடு பூட்டியிருப்பதையும் பாஞ்சாலி கண்டுபிடிக்கிறாள். "கட்டினவளுக்கே சம்பாதிச்சுக் கொடுக்க வக்கில்ல. உன்னைப்போயி எவ ஏத்துக்குவா ? ஆனாலும் ஆள் அழகாயிருக்கானே... அதுக்கு ஒருத்தி வரமாட்டாளா என்ன...?" என்று அவளுடைய எண்ணங்கள் அலைபாய்கின்றன. தன் கணவன் இரவில் தங்காமல் கரும்புத் தோட்டக் காவலுக்குச் செல்வதையும் சௌந்தரத்தின் வெளியேற்றத்தையும் முடிச்சுப் போட்டு அவர்கள் தவறிழைப்பதாக நினைக்கிறாள்.

நள்ளிரவுவரை காத்திருக்கையில் சௌந்திரம் வந்து சேர்கிறாள். "ச்சீ... நீயா இப்படிப் பண்றே ? உனக்கு வெட்கமாயில்ல ?" என்று கேட்கிறாள். "என்னை என்னடி பண்ணச்சொல்றே... என் இடத்தில் நீ இருந்தாலும் இப்படித்தான் பண்ணுவே," என்று அவள் அழுகிறாள். இன்னொருநாள் சௌந்திரத்திடம் வரும் பாஞ்சாலி, "என் புருசனை வீட்லதான் ஒளிச்சு வெச்சிருக்கே.... வெளியே அனுப்பிடு," என்று கேட்கிறாள். தான் கரும்புத் தோட்டத்திற்குச் செல்வது பண்ணையார் வீரப்பனின் ஆசைக்கு அடிபணிந்துதான், நெடுங்காலமாக பண்ணையாரின் அழைப்புக்கு மறுத்து வந்த தன்னை வெளியூர் மருத்துவன் வந்து போன பிறகு மிரட்டிப் பணியவைத்துவிட்டான் என்னும் உண்மையைச் சொல்கிறாள் சௌந்திரம். "உன் புருசன் சாமிக்கண்ணு எனக்குக் குழந்தை மாதிரி. அவன் யோக்கியன்," என்று கூறுகிறாள். பாஞ்சாலி சாமிக்கண்ணு மீது அன்பு பெருகியவளாகி அவனுக்காகக் காத்திருக்கிறாள். விடிந்தும் சாமிக்கண்ணு வரவில்லை.

Sakkalathi, an unfottable folk classic in Tamil cinema

அன்றிரவு கரும்புத் தோட்டத்தில் சாமிக்கண்ணைப் பாம்பு கடித்துவிடுகிறது. வைத்தியம் பார்த்துப் படுக்கவைத்திருக்கிறார்கள். பாஞ்சாலி ஓடிச்சென்று அவன் உடலில் விழுந்து கதறுகையில் அவன் சட்டையில் பச்சைக் குங்குமம் ஒட்டியிருக்கிறது. அவள் திருவிழாவுக்குச் சென்று திரும்பியபோது அந்தக் குங்குமத்தை பண்ணையாரின் தங்கை அழகம்மைக்குத் தந்திருந்தாள். இறக்கும் தறுவாயில் இருக்கும் சாமிக்கண்ணைப் பார்க்க அழுதபடியே பண்ணையாரின் தங்கை அழகம்மை வருகிறாள். அவள் நெற்றியில் பச்சைக் குங்குமம் கலைந்திருக்கிறது. படம் நிறைவுறுகிறது.

கதையின் உட்கிளைகள் பலவற்றைச் சொல்லாமல் நடுக்கதையை மட்டும் கூறியிருக்கிறேன். ஒரு திரைக்கதையாக இக்கதை எப்படிச் சிறப்பாக எழுந்து நின்றிருக்கும் என்பது உங்களுக்கு விளங்கியிருக்கும். இளையராஜாவின் இசை, ஷோபாவின் நடிப்பு என்று மேலும் புகழ்ந்து சொல்வதற்குப் பல இருக்கின்றன. ஒய் விஜயாவின் அருமையான நடிப்பையும் இப்படத்தில் பார்க்க முடிகிறது.

கிராமியக் கதைகள் என்றவுடன் நாம் பாரதிராஜாவைத்தான் முதற்கண் நினைவுகூர்கிறோம். தேவராஜ்-மோகன் என்னும் இரட்டை இயக்குநர்கள் பொருட்படுத்தத்தக்க ஊர்ப்புறக்கதைகளில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள். அன்னக்கிளி, கவிக்குயில், உறவாடும் நெஞ்சம், ரோசாப்பூ இரவிக்கைக்காரி, பூந்தளிர், சக்களத்தி, கண்ணில் தெரியும் கதைகள் ஆகியவை உட்பட இருபது படங்களை இயக்கியிருக்கிறார்கள். தேவராஜ்-மோகன் இயக்கிய படங்களை இனி ஒவ்வொன்றாகப் பார்க்க வேண்டும் என்றிருக்கிறேன்.

சக்களத்தி என்ற தலைப்பு அக்காலத்தில் எப்படி எதிர்கொள்ளப்பட்டது என்று தெரியவில்லை. சகக்கழுத்தி என்ற சொற்றொடர்தான் பேச்சு வழக்கில் 'சக்களத்தி' என்று திரிந்தது. "தன் கழுத்தில் உள்ள தாலியைப் பங்கு போட்டுக்கொள்ளும் இன்னொருத்தி," என்ற பொருளில் அமைந்ததுதான் அத்தொடர். ஆனால் இன்றைக்கு அதன் நேரடியான சொற்பொருளை எடுத்துக்கொள்ளாமல் வசவுச்சொல்போல ஆக்கிவிட்டார்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Poet Magudeswaran's article on Sakkalathi, a folk classic movie directed bu by Devraj - Mohan.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more