Box Office: கிஸ், சக்தித் திருமகன், தண்டகாரண்யம் மற்றும் படையாண்ட மாவீரா.. முதல் நாள் வசூலில் வென்றது யாரு?
சென்னை: ரோபோ சங்கரின் மறைவு காரணமாக ஏகப்பட்ட திரைப்பிரபலங்களும், சின்னத்திரை நடிகர்களும், ரசிகர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். நேற்று செப்டம்பர் 19ம் தேதி வெளியான படங்களின் மீது மக்களின் கவனம் அதிகளவில் செல்லவில்லை. அதன் காரணமாக நேற்று வெளியான 4 படங்களின் வசூலும் ரொம்ப சுமாராகவே உள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பல படங்கள் வெளியாகி வந்தாலும், எந்தவொரு படமும் மக்களை கவர்ந்தது போல தெரியவில்லை. கடைசியாக சிவகார்த்திகேயனின் மதராஸி படம் மட்டுமே தமிழ் சினிமாவில் 100 கோடி வசூலை ஈட்டியது.

இந்நிலையில், நேற்று வெளியான 4 படங்களில் அதிக வசூலை முதல் நாளிலேயே அறுவடை செய்தது யார் என்பது குறித்தும் ஒவ்வொரு படத்தின் வசூல் குறித்த தகவல்களையும் இங்கே காணலாம் வாங்க..
கிஸ் முதல் நாள் வசூல்: சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின், ப்ரீத்தி அஸ்ரானி, தேவயானி, கெளசல்யா, விடிவி கணேஷ் ஆர்ஜே விஜய், ராவ் ரமேஷ், பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று வெளியான கவினின் கிஸ் திரைப்படம் அதிகபட்சமாக இரவு ஷோக்களிலேயே 22 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே வந்ததாக சாக்னிக் தகவல் தெரிவித்துள்ளது. முதல் நாள் வசூல் ஒட்டுமொத்தமாக வெறும் 40 லட்சம் மட்டுமே வந்துள்ளது. கவின் நடித்த முந்தைய படங்களின் வசூலை விட இது மிகவும் குறைவு. மேலும், கலவையான விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வசூல் அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தண்டகாரண்யம் முதல் நாள் வசூல்: பா. ரஞ்சித் தயாரிப்பில் அட்டகத்தி தினேஷ், கலையரசன் நடிப்பில் சமூக போராளி படமாக உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் வெளியான தண்டகாரண்யம் படத்துக்கு முதல் நாளில் மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. பல இடங்களில் தியேட்டர்களில் சரியான ஷோக்கள் கூட கிடைக்காத நிலை தான் இருந்தது. வெறும் 26 லட்சம் ரூபாய் மட்டுமே இந்த படம் முதல் நாளில் வசூல் செய்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

படையாண்ட மாவீரா முதல் நாள் வசூல்: இயக்குநர் கவுதமன் இயக்கி நடித்த படையாண்ட மாவீரா திரைப்படம் முதல் நாளில் வெறும் 2 லட்சம் ரூபாய் வசூலை மட்டுமே எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சக்தித் திருமகன் முதலிடம்: அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த சக்தித் திருமகன் திரைப்படம் இந்த வாரம் வெளியான மற்ற படங்களை விட முதல் நாளில் அதிகபட்சமாக 90 லட்சம் வரை வசூல் செய்ததாக சாக்னிக் வெப்சைட் தகவல் வெளியிட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் படத்தின் வசூல் சில கோடிகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த வாரம் வெளியான எந்தவொரு படமும் பிளாக்பஸ்டர் வரவேற்பை பெறவில்லை என்பது தமிழ் சினிமாவுக்கு மீண்டும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தனுஷின் இட்லி கடை படம் தான் அடுத்த மாதம் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி படங்களும் பாக்ஸ் ஆபீஸ் மார்க்கெட்டுக்கு கைகொடுக்கும்.


Click it and Unblock the Notifications











