twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மனம் பதைபதைக்கச் செய்த குடும்பப்படம் – சம்சாரம் அது மின்சாரம்

    By Shankar
    |

    - கவிஞர் மகுடேசுவரன்

    தமிழ்நாடே ஒரு குடும்பப் படத்தைப் பார்த்துப் பதைபதைத்துப் போனது என்றால் அது 'சம்சாரம் அது மின்சாரம்' திரைப்படத்திற்குத்தான். அந்தப் படம் வெளியான காலத்தில் பார்த்தவர்களில் பலர் நம்மிடையே இருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவர்க்கும் அந்தப் படம் நன்றாக நினைவிருக்கும். கலகலப்பான குடும்ப நிகழ்வுக் காட்சிகளில் தொடங்கி, இடையில் குடும்பத் தலைமகனுக்கும் தந்தைக்குமான கணக்கு வழக்குப் பேச்சில் சொல்முற்றி, குடும்பப் பாசத்தை மீண்டும் பழைய உவகையோடும் உணர்ச்சியோடும் ஒட்ட வைக்க முடியாமற் போவதை உணர்ச்சி ததும்ப வெளிப்படுத்திய படம்.

    Samsaram Athu Minsaram

    திருப்பூர் இராம்லட்சுமணன் திரையரங்கில் அரங்கு நிறைந்து ஓடிக்கொண்டிருந்த அத்திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றவர் மறைந்த என் பாட்டனார். தம்முடைய இளமைக் காலத்தில் கருணாநிதியைத் தலைவராக ஏற்றுக்கொண்டவர் அவர். அவருக்குத் தெரியாமல் நாங்கள் திரைப்படங்களுக்குச் செல்வதுதான் வழக்கம். சிவாஜி படங்களைப் பார்த்துவிட்டு வந்தால் மட்டும் ஏதோ உருப்படியான செயலைச் செய்ததாக நம்புவார். "திரைப்படங்களால் வாழ்க்கைக்கு என்ன பயன் ? ஏதும் படிப்பனையாவது உண்டா ?" என்பவை அவருடைய கேள்விகள். அப்படிப்பட்ட தாத்தாவே குடும்பத்தில் இருந்த அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்ற படம் 'சம்சாரம் அது மின்சாரம்'. இரண்டாவது ஆட்டம் பார்த்துவிட்டு ஆறு கிலோமீட்டர்கள் தொலைவுள்ள வீட்டுக்கு நடந்தே வந்த அவ்விரவை மறக்க முடியாது. வீட்டுக்கு நடந்து வந்த அந்நள்ளிரவில் படத்தின் கதையையும் கதைமாந்தர்கள் நடந்துகொண்ட விதங்களையும் பிரித்தாராய்ந்தோம்.

    அம்மையப்ப முதலியாரின் குடும்பத்திற்குள் நிகழும் வழக்கமான நிகழ்வுகளே சம்சாரம் அது மின்சாரத்தின் கதைக்களம். அம்மையப்பனின் மனைவி கோதாவரி. மூத்தவன் சிதம்பரம், படித்துவிட்டு நல்ல பணியில் அமர்ந்தவன். அவனைப் படாதபாடுபட்டு அம்மையப்ப முதலியார் படிக்க வைத்து ஆளாக்கியிருக்கிறார். அடுத்தவன் சிவாவைச் சிதம்பரத்தளவுக்குப் படிக்க வைக்க முடியவில்லை. படிக்காததால் சோடை போய்விடவில்லை, தொழிலாளியாகவே தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவன். கடைசிப் பையன் பாரதி. பன்னிரண்டாம் வகுப்பை எழுதினான் எழுதுகிறான் எழுதுவான். ஒரே மகள் சரோஜினி. குடும்பத்தின் மூத்த மருமகள் உமா. வேலைக்காரி கண்ணம்மா. குடும்பத்திற்கு வெளியே சம்பந்திகள் இருவர். கிருத்தவ மருமகன் திலீப். கல்யாணத் தரகர், சலவைத் தொழிலாளி, ஒரு இந்திக் குடும்பம். கதையில் இடம்பெறுபவர்கள் இவர்கள் மட்டுமே.

    Samsaram Athu Minsaram

    அம்மையப்ப முதலியாரின் மகள் சரோஜினியைப் பெண்பார்க்க வரும் முதற்காட்சியோடு படம் தொடங்குகிறது. சரோஜினி திருமணத்திற்கு மறுத்துவிடுகிறாள். இளைய மகன் சிவாவுக்கு வசந்தாவைக் கட்டிவைப்பது என்று இருவீட்டாரும் முடிவெடுக்கிறார்கள். சரோஜினி தன் கிருத்தவக் காதலன் பீட்டர் பெர்னாண்டசைத் திருமணம் செய்துகொள்கிறாள். வசந்தாவின் தனிப்பாடத்தால்தான் பாரதி இரவு முழுவதும் படிக்கிறான். இதனால் சிவா தன் மனைவிக்கு வேண்டிய தேவையை ஆற்றுவதில்லை. இதற்கிடையில் உமா தலைப்பிள்ளைப் பேற்றுக்காகத் தாய்வீடு சென்றுவிடுகிறாள். நலம் துலங்கிய குடும்பத்தில் சிற்றிடர்கள் சேர்கின்றன. வசந்தா சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். சரோஜினியும் தன் கணவனோடு பிணக்குற்று பிறந்தகத்திற்கு வந்துவிடுகிறாள். வசந்தாவுக்கு உறுதி கூறி சிவா அழைத்து வருகிறான். ஆனால், சரோஜினி தன் கணவன் வீட்டுக்குச் செல்வதாக இல்லை. திங்கள்தோறும் குடும்பச் செலவுக்குப் பணம் கொடுக்கும் சிதம்பரம் வழக்கமாய்க் கொடுக்கும் எண்ணூற்றுக்குப் பதிலாக நானூற்றைத் தர, கதையில் பெரும் திருப்பம் ஏற்படுகிறது. தனயனும் தந்தையும் குடும்பத்தின் காசுக்கணக்கைப் பேசும் நிலை ஏற்படுகிறது. தமிழ்த் திரையின் மிகச்சிறந்த உரையாடற்பகுதி அது. தந்தையும் மகனும் காது கூசும்படியான விவாதத்தைச் செய்வார்கள் என்று பார்வையாளர்களே எதிர்பார்த்திராத காட்சி.

    "யாருகிட்டப் பேசறேன்னு தெரியுதா மிஸ்டர் சிதம்பரம் ?"

    Samsaram Athu Minsaram

    "தட்டுத் தடுமாறி திசைமாறிப் போன தத்தாரிகளை தட்டிக்கேட்க வக்கில்லாத ஒரு முதுகெலும்பில்லாத வயசான கிழவன்கிட்ட பேசறேன்னு எனக்கு நல்லாத் தெரியும்."

    "உன்னப் பெத்து வளக்க வீதி வீதியா அலைஞ்சு தேய்ஞ்சு உன் பேருக்குப் பின்னாடி பிகாம்முன்னு மூனு எழுத்தைக் கூட்ட வெச்ச ஒரு பைத்தியக்காரனோட பேசறேன்னு தெரியல... இல்லையா ?"

    "தெரியல"

    கதாபாத்திரங்களின் உணர்ச்சிகள் பீறிட்டெழ ஒருவரையொருவர் பழித்தும் இழித்தும் பேசிக்கொள்ளும் அக்காட்சியில்தான் இரகுவரன் முதன்முதலாக ஒரு தேர்ந்த நடிகராக வெளிப்பட்டார். படத்தைத் தூக்கி நிறுத்துவதற்கு உதவிய அந்த நடிப்பு தற்செயலாக அமைந்ததுமில்லை. இயல்பாகச் சென்றுகொண்டிருக்கும் கதையில் ஒரேயொரு குணவார்ப்பின் நிலைபிறழல் திரைக்கதைக்கு எத்துணை வலிமையைக் கூட்டிவிடுகிறது! இன்றைய நிலவரத்தோடு ஒப்பிட்டால், ஒரு தொலைக்காட்சித் தொடரின் அத்தியாயத்தளவுக்கே அமைந்த காட்சிச் சட்டகங்கள். சுருக்கமாகச் செலவிடப்பட்டு எடுக்கப்பட்ட படம் என்பது நன்றாகத் தெரிகிறது. ஆனால், விசு என்னும் ஓர் உரையாடல் வித்தகரின் திறன்மிளிர்வால் நெஞ்சை உருக்குமளவுக்கு அமைந்த அந்தக் காட்சி யார் நினைவைவிட்டும் அகன்றிருக்காது.

    Samsaram Athu Minsaram

    விசு எடுத்த திரைப்படங்கள் யாவும் முப்பது நாற்பதாண்டுகளுக்கு முந்திய நம் குடும்ப வாழ்க்கையின் ஆவணங்கள். பாலசந்தரின் பள்ளியிலிருந்து புறப்பட்டவரான அவர், சென்னை நகரத்து நடுத்தரக் குடும்பங்களின் வாழ்க்கையைப் பல்வேறு இழைக்கதைகள் வழியாக நன்றாகச் செதுக்கியவர். சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் ஒரு காட்சி. வீட்டுக்கு நடுவில் கிழிக்கப்பட்ட கோட்டைத் தாண்டிச் சென்று பெயரனைப் பார்த்துவிட்டுத் திரும்பும் கோதாவரியை அம்மையப்பன் பார்த்துவிடுவார். "என்ன இருந்தாலும் புருசன்கிறது வேற ரத்தம். புள்ளங்கறது சொந்த ரத்தமாச்சே... அதனாலதான் ஓடிட்டியா கோதாவரி? உன்ன மாதிரிப் பொம்பளங்க தாலிக்கொடி மூலமா ஏற்படற உறவைவிட தொப்புள்கொடி மூலமா ஏற்படற உறவுக்குத்தான்டி ஜாஸ்தி மரியாதை கொடுக்கறீங்க," என்னும்போது கதைப்போக்கின் அந்தக் கட்டத்தில் பார்வையாளர்களே கேட்டுக் குமையும்படியான மிகச்சிறந்த உரையாடலை அமைக்கிறார். விசுவைப் போன்ற ஒரு நாடகக்காரரால்தான் தம் பட்டறிவின் வல்லமையைப் பயன்படுத்தி அவ்வாறு எழுத முடியும்.

    ஏவிஎம் நிறுவனத்தில் படமியக்கும் வாய்ப்புக்காகப் பல்வேறு கதைகளை விசு கூறியிருக்கிறார். அவர் கூறிய பலப்பல கதைகளையும் சரவணன் ஏற்கவில்லையாம். "சார்... நீங்க எனக்குப் படவாய்ப்பு தர விருப்பமில்லை என்றால் சொல்லிவிடுங்க. ஒவ்வொரு கதையையும் கேட்டுவிட்டு நல்லாயில்ல என்று சொல்வதற்குப் பதிலாக நேரடியாக மறுத்துச் சொல்லலாம்...," என்று வருந்திக் கூறினாராம். அதன்பிறகு அவர் கூறிய கதை சரவணனுக்குப் பிடித்துப்போக சம்சாரம் அது மின்சாரமாயிற்று.

    அந்நள்ளிரவில் படம் பார்த்துவிட்டுக் கலக்கமுற்ற இதயத்தோடு வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். "குடும்பம்கிறது ஒன்னும் லேசில்ல... ஒரு சொல்லு... ஒரு நினைப்பு... எல்லாத்தையும் குட்டிச்சுவராக்கிடும்... பெரியவங்க சொல்றத எப்பவும் மதிக்கணும்...," என்று என் தாத்தா அறிவுரை கூறியபடியே வந்தார். அவரை நாங்கள் எப்போதும் எதிர்த்துப் பேசியதில்லை. எதிர்த்துப் பேசும் நிலைமை வந்தபோது அவர் பேசுவதை நிறுத்திக்கொண்டார்.

    English summary
    A nastalgia on Visu's classic movie Samsaram Athu Minsaram
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X