ஐஸ்வர்யா ராயுடன் நடிச்சாச்சு.. 71 வயசுல சரத்குமாருக்கு யாருடன் நடிக்கணும்னு ஆசை வந்திருக்கு பாருங்க!
சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டியூட் திரைப்படம் ஐந்து நாட்களில் 95 கோடி ரூபாயை வசூலித்து கெத்து காட்டியிருக்கிறது. இன்று எப்படியும் அந்தப் படம் நூறு கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூழல் இப்படி இருக்க நேற்று படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது. அதில் படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். சரத்குமார் பேசியது கலகலப்பை ஏற்படுத்தியது.
லவ் டுடே, டிராகன் படங்களின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் டியூட் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்திருக்கிறார். சரத்குமார் மிக முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். கடந்த 17ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் வெளியானது. ரசிகர்களுக்கு படம் முழு திருப்தியை கொடுத்திருக்கிறது.
நல்ல கதை: கமர்ஷியலாக இயக்குநர் படத்தின் திரைக்கதையை எழுதியிருந்தாலும், அவர் சொல்லியிருக்கும் மெசேஜ் சமூகத்துக்கு தேவையான ஒன்று. ஆணவ கொலை பற்றி படத்தில் அவர் பேசியிருந்த விதம் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. 'தாலிக்கு மரியாதை இல்லை; தாலிக்கு பின்னால் இருக்கும் பெண்ணின் ஃபீலிங்ஸுக்குத்தான் மரியாதை', 'உங்கள் ஆணவத்துக்கு கொலை பண்ணுவீங்களா?.. தாங்க முடியலனா நீங்கள் போய் சாகுங்க' போன்ற வசனங்கள் நெத்தியடியாக இருந்தது.

95 கோடி ரூபாய் வசூல்: விமர்சகர்கள் மத்தியில் படத்துக்கு ஏகப்பட்ட பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்திருக்கின்றன. இது ஒருபக்கம் வசூலிலும் படம் மாஸ்தான். ரிலீஸாகி ஐந்தே நாட்களில் உலகம் முழுவதும் 95 கோடி ரூபாயை படம் அள்ளியிருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கு இது இரண்டாவது தமிழ் படம். இந்த ரிசல்ட் அந்த நிறுவனத்தை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. கண்டிப்பாக இன்று டியூட் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
படத்தின் வெற்றி விழா: இதன் காரணமாக படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டார்கள். படத்தில் பெரிதும் ரசிக்கப்பட்ட சரத்குமாரும் இதில் கலந்துகொண்டார். விழாவில் பேசிய அவர், "கீர்த்திஸ்வரன் சொன்ன கதை எனக்கு பிடித்திருந்தது. அதனால்தான் இதில் நடித்தேன். நான் படத்தில் வருவது போல் எப்போதுமே ஜாலியான ஆள்தான். எனது உடல் பெரிதாக இருப்பதால் அதெல்லாம் வெளியே தெரிவதில்லை.
கீர்த்திக்கு பாராட்டு: இந்தப் படத்தை ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால் சமூகத்துக்கு தேவையான கருத்தை ஜனரஞ்சகமாக கீர்த்தி சொல்லியிருக்கிறார். தாலிக்கு ஒருத்தன் புள்ளை பெத்துக்க ஒருத்தனா என்று கேட்டதெல்லாம் கீர்த்தி காண்பித்ததுதான். இந்தப் படத்திலிருந்து எல்லோரும் என்னை டியூட் என்று அழைக்க தொடங்கியிருக்கிறார்கள்.
அடுத்து தீபிகா படுகோனேதான்: அடுத்ததாக தீபிகா படுகோனேவுக்கு ஜோடியாக நான் நடிக்கலாம். ஐஸ்வர்யா ராய்க்கே கணவனாக நடித்துவிட்டேன். தயாரிப்பாளர்களிடம் இப்போதே கேட்டுக்கொண்டால்தான் உண்டு. யாரும் பொறாமைப்பட வேண்டாம்" என்றார். முன்னதாக டியூட் படத்தில் பிரதீப்புக்கு அடுத்ததாக சரத்குமார்தான் அசால்ட்டாக அப்ளாஸை அள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











