கதை திருட்டு விவகாரத்தில் சிக்கிய அடுத்த பிரபலம்... அதிர்ச்சியில் படக்குழு!
சென்னை: சுப்ரமணியபுரம் திரைப்படம் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் சசிகுமார்.
முதல் படத்திலேயே தனித்துவமான இயக்குநர் என முத்திரை பதித்த சசிகுமார், அதன் பின்னர் ஈசன் படத்தை மட்டும் இயக்கினார்.
தொடர்ந்து மினிமம் பட்ஜெட் படங்களில் ஹீரோவாக நடித்து வரும் சசிகுமாரின் அயோத்தி விரைவில் வெளியாகவுள்ளது.
அயோத்தி ட்ரெய்லர் பொங்கல் தினத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இந்தப் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சசிகுமாரின் அயோத்தி
சுப்ரமணியபுரம் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்தவர் சசிகுமார். இயக்குநர், நடிகர் என அறிமுகமான சசிகுமார், சுப்ரமணியபுரத்துக்கு பின்னர் ஈசன் படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் சசிகுமார், நாடோடிகள், சுந்தர பாண்டியன், குட்டி புலி, கிடாரி, பேட்ட உட்பட மேலும் சில படங்களில் நடித்துள்ளார். கடந்தாண்டு மட்டும் கொம்பு வச்ச சிங்கம்டா, நான் மிருகமாய் மாற, காரி என மூன்று படங்கள் சசிகுமார் நடிப்பில் வெளியானது. இதனைத் தொடர்ந்து சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் அயோத்தி.

சிக்கலில் அயோத்தி
மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள அயோத்தி படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ளார், என்.ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார். சசிகுமாருடன் குக் வித் கோமாளி புகழ், போஸ் வெங்கட், யஷ்பால் சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராமேஸ்வரம், மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வந்த அயோத்தி ஷூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிறைவுபெற்றது. அதனைத் தொடர்ந்து பொங்கலை முன்னிட்டு அயோத்தி ட்ரெய்லரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அயோத்தி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கதை திருட்டா?
சிறுகதை, கவிதை, நாவல் என தமிழ் இலக்கியச் சூழலில் முக்கியமானவராக காணப்படும் எழுத்தாளர் நரன், அயோத்தி படத்தின் கதை தன்னுடையது என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளாராம். தனது சரீரம் என்ற சிறுகதை தொகுப்பில் இடம்பெற்ற வாரணாசி சிறுகதை தான் அயோத்தி படத்தின் கதை எனவும் அவர் கூறியதாக சொல்லப்படுகிறது. அந்த சிறுகதையில் ஒரு பெண் தன்னுடைய இறந்த கணவனின் உடலை தகனம் செய்ய, வாரணாசிக்கு எடுத்து செல்லும் பயணத்தை விவரிப்பதாக இருக்கும். தற்போது அயோத்தி படத்தின் ட்ரெய்லரும் அதுமாதிரி இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிர்ச்சியில் படக்குழு
இதன் காரணமாக அயோத்தி திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால், சசிகுமார் உட்பட படக்குழுவினர் அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக இந்தப் படம் பற்றி பேசியிருந்த இயக்குநர் மந்திர மூர்த்தி, "எல்லோரும் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திக்கும் ஒரு விஷயத்தைப் பற்றியது இந்தப் படம். இந்த கதையோடு மக்கள் அவர்களை எளிதில் தொடர்புப்படுத்திக்கொள்ள முடியும். நாம் வாழும் உலகின் மறுபக்கத்தைக் காட்டும் உணர்ச்சிகரமான கதை இது. கதையைக் கேட்டவுடன் சசிகுமார் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











