33 வயதில் ஹீரோவாக செகண்ட் இன்னிங்ஸ்..சியான் விக்ரமின் விடாமுயற்சி வெற்றி
1990 களில் கதாநாயகனாக அறிமுகமாகி தோல்விப்படங்கள் காரணமாக அதிகம் பேசப்படாத நடிகராக இருந்த விக்ரம் 9 ஆண்டுகளுக்குப்பின் சேது படம் மூலம் ஹீரோவாக 2 வது இன்னிங்க்ஸை தொடங்கினார்.
சென்னை: சினிமா உலகில் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு உதாரணம் என்றால் நடிகர் விக்ரமை சொல்லலாம். தொடர் தோல்விகளை வெற்றியாக மாற்றிக்காட்டியவர்.
1999 ஆம் ஆண்டு 33 வயதில் ஹீரோவாக மீண்டும் வெற்றிப்பயணத்தை தொடங்கியவர் அதன் பின்னர் பல படங்களை தந்தார்.
சோழா டீ விளம்பரத்தில் நடித்தவர் இன்று சோழ மன்னனாக மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் நடிக்கிறார்.

விடா முயற்சிக்கு எடுத்துக்காட்டு எம்ஜிஆர்.
திரையுலகில் முடிசூடா மன்னன் எம்ஜிஆர் 19 வயதில் நடிக்க வந்தாலும் தனது 30 வயதில் தான் கதாநாயகனாக முடிந்தது. ஆனால் முன்னணி கதாநாயகனாக அவர் முத்திரை பதித்து வெற்றிப்பயணத்தை தொடங்கியது 40 வயதுக்கு மேல் தான். அதன் பின்னர் தான் முதல்வராக பொறுப்பேற்கும்வரை 60 வயதுவரை கதாநாயகனாக முன்னணி ஹீரோவாக வலம் வந்தார். இடையில் மேடை நாடகத்தில் கால் உடைந்து அவ்வளவுதான் எம்ஜிஆர் என பேசியவர்கள் வாயை அடைத்தவர் எம்ஜிஆர்.

எம்ஜிஆர் போலவே திரை வாழ்க்கையில் போராடிய விக்ரம்
இதேப்போன்ற வரலாறு சியான் விக்ரமிற்கும் உண்டு. சார்மிங் பாயாக வலம் வந்தவர். சிறுவயதிலேயே நடிகர் கனவில் மிதந்தவரை தந்தை கல்லூரிக்கு அனுப்ப கல்லூரியில் படித்து முடித்து எம்பிஏ படிக்க ஆரம்பித்த புதிதில் 18 வயதில் இடையிடையே விளம்பர படங்களிலும் நடித்து வந்த அவருக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. மிகப்பெரும் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் என் காதல் கண்மணி என்கிற படம் தான் அது. ஆனால் மோட்டார் சைக்கிள் விபத்து காரணமாக பல ஆண்டுகள் படுக்கையில் இருந்து பின்னர் மீண்டு 1990-ல் படத்தை முடிக்கும்போது 24 வயது ஆகியிருந்தது.

மீரா பேசப்பட்ட படம் என்றாலும் விக்ரமுக்கு வெற்றி வாய்ப்பை தரவில்லை
அடுத்து மீண்டும் ஸ்ரீதர் படத்தில் 1991ல் ‘தந்து விட்டேன் என்னை' படத்தில் கிடைத்தது. அடுத்து எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் ‘காவல் கீதம்' (1992) படம் வந்தது. ஆனால் அவைகள் விக்ரமை அடையாளம் காட்டவில்லை. 1992 ஆம் ஆண்டு பி. சி. ஸ்ரீராம் இயக்கத்தில் ‘மீரா' வெளியானது. பாடல்களுக்காக இது பேசப்பட்டது. இந்தப்படத்தில் தான் லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா அறிமுகமானார். ஆனால் இந்தப்படமும் பெரிதாக எடுபடவில்லை. இரண்டாண்டுகள் தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்த அவர் இடையிடையே விளம்பரப்படங்களிலும் நடித்தார். அப்படி நடித்த விளம்பரம் தான் சோழா டீ விளம்பரம். அன்று விளம்பரத்தில் சோழ மன்னனாக நடித்தவர் இன்று புகழ்பெற்ற காவியப்படமான பொன்னியின் செல்வனில் சோழமன்னனாக நடிக்கிறார்.

திருப்புமுனை தந்த 'பாலா'வின் ‘சேது' திரைப்படம்
பின்னர் 1994 ஆம் ஆண்டில் ‘புதிய மன்னர்கள்' என்ற படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். அப்படம், எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், மீண்டும் தெலுங்கு மற்றும் மலையாளம் பக்கம் சென்றார். 1997 ஆ ஆண்டு அஜித்துடன் இணைந்து ‘உல்லாசம்' படத்தில் நடித்தார். அடுத்த ஆண்டு ‘கண்களின் வார்த்தைகள்' ‘ஹௌஸ்ஃபுல்' (1999) போன்ற படங்களில் நடித்தார். அதன் பின்னர் 1999 ஆண்டு பாலா இயக்கத்தில் அவர் நடித்த ‘சேது' பெரும் திருப்புமுனையாக விக்ரம் வாழ்க்கையில் அமைந்தது. பட்டி தொட்டியெங்கும் விக்ரம் யார் என பேச வைத்தது. சியான் அடைமொழியும் இதில் தான் விக்ரமுக்கு வந்தது.

பிதாமகனுக்காக தேசிய விருது
சேது படத்தில் விக்ரமின் வித்தியாசமான வெற்றி அவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. யார் இந்த விக்ரம் என ரசிகர்கள் தேடித்தேடி பார்க்க ஆரம்பித்தனர். தொடர்ந்து தில், காசி, ஜெமினி, சாமுராய், கிங், என வரிசையாக விக்ரம் பேசப்பட்டார். சார்மிங்கான விக்ரம் மிரட்டும் போலீஸ் அதிகாரியாக சாமி படத்தில் நடித்தார். போலீஸ் வேடமிட்டு வெற்றிபெற்ற கதாநாயகர்களில் விக்ரமும் சேர்ந்தார். 37 வயதில் அவரது கட்டுடல் இளைஞர்களை ஈர்த்தது. அந்த ஆண்டே வித்யாசமாக மீண்டும் பாலா இயக்கத்தில் பிதாமகன் படத்தில் நடித்தார். இந்தபடத்தில் சிறந்த நடிகருக்கான ‘தேசிய விருதை' வென்றார்.

அந்நியன் வெற்றி..தெய்வத்திருமகளுக்கு விருது
தொடர்ந்து அருள், ஷங்கர் இயக்கத்தில் அந்நியன் படத்திலும் நடித்தார். வித்தியாசமான வேடத்தில் அந்நியன் பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது. தொடர்ந்து மஜா, பீமன், மணிரத்னம் இயக்கத்தில் ராவணா உள்ளிட்ட படங்களில் நடித்தார். வித்யாசமாக முயற்சிக்கிறேன் என சிங்கம் படம் வாய்ப்பை மறுத்தார். அது பின்னர் சூர்யா நடித்து பெரும் ஹிட் அடித்தது. பின்னர் தெய்வத்திருமகள் படத்தில் மன வளர்ச்சி குறைபாடு உள்ளவராக நடித்தார். இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது' கிடைத்தது.

சிறப்பான கதையை தேர்வு செய்வதில் குழப்பம்
தொடர்ந்து சிறப்பான கதைக்களத்தை தேர்வு செய்வதிலும், தனக்கான சார்மிங்கான உருவத்தை விட்டு வித்தியாசமான முயற்சிகளை எடுத்ததாலும் பல படங்கள் தோல்வியைத் தழுவின. இயக்குநர் சங்கர் இயக்கத்தில் எடுக்கப்பட்ட ஐ படம் பெரும் தோல்வியை தழுவியது. அதன் பின்னர் விக்ரம் பல படங்கள் வித்தியாசமான ரோல்களில் நடித்தார். இடையில் மலையாளம், தெலுங்குப்பக்கம் தாவினார். தாண்டவம், 10 எண்றதுக்குள்ள, கடாரம் கொண்டான், ஸ்கெட்ச், சாமி-2, மஹான் போன்ற படங்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
Recommended Video

வித்தியாசத்துக்கு விக்ரம்..கைவசம் முக்கிய படங்கள்
ஆனால் விக்ரம் தனது படங்களில் வித்தியாசமான நடிப்பை தொடர்ந்து காண்பித்து வருகிறார். தற்போது கோப்ரா என்கிற படத்திலும், மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வம் படத்தில் சோழமன்னர் பாத்திரத்திலும், துருவ நட்சத்திரம், கரிகாலன் மற்றும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். வித்தியாசமான எந்த பாத்திரம் கொடுத்தாலும் நடிக்கக்கூடிய நடிகர். பாடல், டப்பிங் என பல துறைகளில் திறமையுள்ளவர். அஜித், அப்பாஸ், பிரபுதேவா போன்றோருக்கு டப்பிங் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











