»   »  தன்னைத் தானே உருவாக்கிக்கொண்ட கலைஞர் - செந்தில்!

தன்னைத் தானே உருவாக்கிக்கொண்ட கலைஞர் - செந்தில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தன்னைத் தானே உருவாக்கிக்கொண்ட கலைஞர்-செந்தில்!-

- மகுடேசுவரன்

தோற்றமளிப்பதுதான் நடிப்பின் அடிப்படை. ஒருவர் எப்படித் தோன்றுகிறாரோ அத்தோற்றத்திற்கேற்ற வேடத்தை இயக்குநர் வழங்குகிறார். தோற்றத்தின்படி வழங்கப்பட்ட வேடத்திற்கு அந்நடிகர் எவ்வளவு வினைக்கெடுகிறாரோ அதற்கேற்ப அவர் முன்னேறத் தொடங்குகிறார். அதற்கடுத்த நிலையில் ஒரு நடிகரை எப்படியெல்லாம் தோற்றமளிக்கச் செய்யலாம் என்னும் திக்கில் இயக்குநர்கள் எண்ணத் தொடங்குகிறார்கள். ஒரு நடிகர்க்குச் சந்தை மதிப்பு ஏற்பட்டவுடன் அவரைத் தினுசு தினுசாகக் காண்பிக்க முயல்வார்கள். இவை இரண்டும் சேர்ந்து ஒரு நடிகரின் பன்முகத்தை வெளிக்கொண்டு வருகின்றன.

நம் மக்கள் தம்மைப்போன்ற தோற்றத்தில் உள்ளவர்களை எவ்வொரு கேள்வியும் இல்லாமல் ஏற்றுக்கொள்கிறார்கள். கருமையும் முகத்தில் ஒடுக்கங்களும் வற்றலான உடலும் கொண்டவர்களை ஏற்காமல் கைவிட்டதில்லை. வடிவேலின் தொடக்கக் காலத் தோற்றத்தைக் காண்கையில், அந்த வறுமை ஆண்ட தோற்றத்தை நம் மக்கள் உடனே ஏற்றுக்கொண்டதை அறியலாம். பொதுவாக தளர்ச்சியான உடற்கட்டு உள்ளவர்களை நகைச்சுவைக்கென்றே பயன்படுத்தினார்கள். நகைச்சுவை நடிகர் என்றால், ஒன்று ஒடிசலாக இருக்க வேண்டும், அன்றேல் குண்டாக இருக்க வேண்டும். நகைச்சுவை நடிப்பு என்பது உடலால் நிகழ்த்தப்படும் கலை. நாகேஷிலிருந்து இன்றைய நடிகர்கள்வரை எடுத்துப் பார்க்கலாம், நகைச்சுவை நடிப்பில் உடல் தோற்றம் வகித்த பங்கைப் புறந்தள்ள முடியாது.

Senthil, a self built artist

குள்ளமான உருவம், இதுவரை பார்த்திராதது போன்ற முகக்கட்டு, அப்பழுக்கில்லாத சிரிப்பு, மதுரைத் தமிழ், கறுப்பு நிறம் என்று தனித்தன்மையான தோற்றமுடைய நடிகர் செந்தில். எந்தப் பின்புலமுமில்லாமல் நடித்து நடித்தே தமக்கான இடத்தைப் பிடித்தவர். படத்தோடு காண்கையில் செந்திலின் நகைச்சுவை மிக இயற்கையாக அமைந்திருப்பதுதான் அவருடைய வெற்றிக்குக் காரணம். எல்லாத் திரைக்கதையிலும் ஏதேனுமொரு வெள்ளந்தியான மனத்தை உடைய பாத்திரம் உருவாக்கப்படும். அதில் எந்தக் கேள்வியுமில்லாமல் செந்திலைப் பொருத்திப் பார்க்கலாம்.

நடிகர் செந்தில் 'எங்க டைரக்டர்' என்று பாக்கியராஜைக் குறிப்பிடுகிறார். கவுண்டமணி பாரதிராஜாவின் அறிமுகம் என்றால் செந்தில் பாக்கியராஜின் அறிமுகம். நகைச்சுவைக் காட்சிகளை எடுக்கும் இயக்குநர்கள் அதற்கேற்ற தோற்றமுடைய கலைஞர்களுக்காகக் காத்திருப்பார்கள். அந்நடிகர் இன்றைக்கு வரவில்லை என்றால் வேற்றாளைப் போட்டுப் படமெடுப்பதில்லை. அந்தக் காட்சியை அந்தத் தோற்றமுடையவர் செய்தால்தான் நகைச்சுவை அமையும் என்பது இயக்குநரின் தீர்மானம். சுடுவு சுடுவாக எடுக்கப்படும் ஒரு நகைச்சுவைக் காட்சியில் நடிகரின் ஆற்றல் விளங்கவில்லையென்றால் எப்படி நகைச்சுவை தோன்றும்? அதனால் நகைச்சுவைக் காட்சிகள் முழுக்க முழுக்க நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றவை. அதனால்தான் ஓர் இயக்குநர் எவ்வளவு முயன்றாலும் புதிதாக ஒரு நகைச்சுவை நடிகரை உருவாக்கிவிட முடிவதில்லை. ஒரு நடிகரே தம்மை உருவாக்கிக்கொண்டு அவ்விடத்திற்கு வந்து சேர்கிறார்.

Senthil, a self built artist

இராமநாதபுர மாவட்டத்தின் முதுகுளத்தூரைச் சேர்ந்தவரான செந்தில் இளமையிலேயே வீட்டை விட்டு வெளியேறியவர். பல்வேறு தொழிற்பாடுகளுக்குப் பிறகு ஒரு நாடகக் குழுவில் பணியாற்றியவர். அப்படியே திரைப்படங்களில் தலைகாட்டத் தொடங்குகிறார். செந்திலுக்கு முத்தாய்ப்பாக அமைந்த முதல் நகைச்சுவைக் காட்சியைப் பாக்கியராஜின் திரைப்படமான 'பொய்சாட்சி'யில் காணலாம். "எங்க ஊரு புளியம்பட்டி... பேரு பண்டாரம்... சினிமாவுல ஆக்டு குடுக்கலாமுன்னு வந்தேன்... ஒருத்தன் சிவாஜியைத் தெரியும் எம்ஜியாரைத் தெரியும்னு கூட்டிட்டு வந்து கைல இருந்த பணத்தையும் காசையும் பிடுங்கிட்டு விட்டுட்டான்... கொஞ்சம் காசு கொடுத்தீங்கன்னா எங்க ஆச்சி டவுனுப்பக்கம் வரும்... குடுத்தனுப்புறேன்..." என்று யாசிக்கும் காட்சி செந்திலுக்கு. படத்தில் அக்காட்சி நன்கு எடுபட்டது.

பாக்யராஜ் செந்திலை அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தினார். இன்றுபோய் நாளை வா திரைப்படத்தில் நாயகியைத் துபாய்க்குக் கடத்தும் மூடர்கூட்டத்தில் ஒருவர். தூறல் நின்னு போச்சு திரைப்படத்தில் நம்பியாருடன் திரியும் அடியாள். செந்திலின் இப்போதைய தோற்றம்தான் கழுத்தேயில்லாதபடி குண்டாக இருக்கிறதே தவிர, தொடக்கக் காலத்தில் அவருடைய தோற்றம் கட்டுதிட்டான உடல்வாகுடன்தான் இருந்தது.

நான் செந்திலை முதன்முதலாக அறிந்து சிரித்தது இளமைக் காலங்கள் திரைப்படத்தில்தான். குதிரைப் பந்தயத்தில் பணம் கட்டும் கெட்ட பழக்கமுள்ள அலுவலகக் கணக்காளர். அதனால் அவருடைய இரண்டு பிள்ளைகளும் சம்பள நாளன்று அலுவலகத்திற்கே வந்து அவரைப் படுத்தியெடுப்பார்கள்.

"எப்பா... அந்தக் கண்ணாடி போட்டிருக்காளே... அவ யாருப்பா ?"

"மகனே... அவங்கதான் டைப்பிஸ்ட்"

"ஓகோ.. அந்த மேனேஜரை வெச்சிருக்கான்னு ராத்திரில அம்மாகிட்ட சொல்வியே... அவளா?"

இளமைக் காலங்கள் திரைப்படம் வெளியாகி முப்பத்தைந்தாண்டுகள் ஆகியும் இவற்றை எந்த நினைவுக் குழப்பமும் இல்லாமல் என்னால் தெளிவாக நினைவுபடுத்த முடிகிறது. தமக்கான பார்வையாளர்களைத் தம் நடிப்பால் செந்தில் தொடர்ந்து ஈர்த்தார். அம்மன் கோவில் கிழக்காலே திரைப்படத்தில் செந்தில் பாட முயன்று செய்யும் முகக் கோணல்களை இப்போது எண்ணினாலும் சிரிக்கலாம்.

Senthil, a self built artist

ஒரு நடிகர் மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடிக்கவேண்டுமென்றால் அவர்மீது மக்களுக்கு 'ஐயோ பாவம்' என்ற இளக்கம் தோன்ற வேண்டும். தம் நடிப்பால் மக்களிடத்தில் அவ்வுணர்ச்சியைத் தோற்றுவித்தால் அதன்பிறகு உங்களை யாராலும் வீழ்த்த முடியாது. திரைவானில் உயர்ந்த விண்மீன் ஆவதற்கு இஃதொன்றே வழி. அந்நடிகர் துயருறுவதைப் பார்த்து மக்கள் நெகிழ வேண்டும். ஒரேயொரு சொட்டுக் கண்ணீரையேனும் பிழியச் செய்ய வேண்டும். அதன்பிறகுதான் ஒருவர் நடிகராக ஏற்றுக்கொள்ளப்படுகிறார். அந்த இடத்திற்கு வராதவரை ஒருவர்க்கு மக்கள் மனத்தில் இருக்கை இடப்படுவதில்லை. செந்திலுக்கு அப்படி அமைத்த ஒரு கதாபாத்திரம் உண்டு. நட்பு என்னும் திரைப்படத்தில் அமைந்த 'பத்துப் பைசா' என்னும் கதாபாத்திரம். ஊரில் யாரைப் பார்த்தாலும் 'பத்துப் பைசா' என்று இரக்கின்ற வேடம். பத்துப் பைசா கொடுத்தால் எதையும் செய்பவர். செந்திலின் இந்தத் தன்மையைப் பயன்படுத்திக்கொள்ளும் காதலர்கள் அவரிடம் பத்துப் பைசாவைக் கொடுத்து காதல் கடிதங்களைக் கொடுக்கும் தூதுவராக மாற்றிவிடுவார்கள். 'அதிகாலை சுபவேளை' பாடற்காட்சியில் செந்தில் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். பாடல் முடிவில் செந்தில் பத்துப் பைசாக்களின் குவியலை அள்ளி இறைத்து மகிழ்வார். பத்துப் பைசாவைக் கொடுத்து கிணற்றில் குதிக்கச் சொன்னதும் அவ்வாறே குதித்துவிடுவார். அந்தப் பாத்திரம்தான் செந்திலுக்கு மக்கள் மனத்தில் நீங்கா இடம்பெற்றுத் தந்தது.

மலையூர் மம்பட்டியான் திரைப்படத்தில் மம்பட்டியானை அடித்துக்கொல்லும் துரோகி வேடம் செந்திலுக்கு. அந்தத் திரைப்படத்தில் பண்ணையாராக கவுண்டமணி நடித்திருந்தார். இதில் வியப்பு என்னவென்றால் அப்படத்தில் இருவர்க்கும் உரையாடும் காட்சியில்லை. அந்தத் திரைப்படத்திற்குப் பிறகுதான் இருவரும் சேர்ந்து தோன்றும் காட்சிகள் வரலாறாயின. கவுண்டமணியுடன் சேர்ந்து நடித்த பிறகு செந்திலின் வளர்ச்சிப் படிநிலை வேறொரு தளத்திற்குச் சென்றது. நம்புவீர்களா, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதெட்டாம் ஆண்டில் வெளியான படங்களில் செந்தில் நடித்த படங்கள் முப்பத்தைந்துக்கும் மேல்.

English summary
An article on comedy artist Senthil, a self built artist

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil