»   »  கெரேவுக்கு பிடிவாரண்ட்-ஷில்பாவுக்கு தடை

கெரேவுக்கு பிடிவாரண்ட்-ஷில்பாவுக்கு தடை

Subscribe to Oneindia Tamil

டெல்லியில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முத்தம் கொடுக்கப்பட்டது தொடர்பாக ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரேவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஜெய்ப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், நடிகை ஷில்பா ஷெட்டி வெளிநாடு போகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடந்த லாரி டிரைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக ரிச்சர்ட் கெரேவும், ஷில்பா ஷெட்டியும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் யாரும் எதிர்பாராத வகையில், ஷில்பாவை இறுக்கி அணைத்து சரமாரியாக முத்தம் கொடுத்தார் கெரே.

இது பெரும் சர்ச்சையை எழுப்பி விட்டது. குறிப்பாக இந்து அமைப்புகள் ஷில்பாவை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், பொது இடத்தில் செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் வகையில் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் பூணம் சந்த் பண்டாரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி திணேஷ் குப்தா, இது எல்லை மீறிய செயல். வீடியோ படத்தைப் பார்த்தபோது இது நமது கலாச்சாரத்திற்கு விரோதமானது என்பதை உணர முடிகிறது.

சமூகத்தைத் தவறான பாதைக்கு இது இட்டுச் செல்லக் கூடியதாக உள்ளது. கெரே செய்தது தவறு என்றால், அதை அனுமதித்ததால், கெரேவின் பிடியிலிருந்து விலகாமல் அப்படியே இருந்ததால் ஷில்பாவும் குற்றவாளியாகிறார்.

கெரேவை கைது செய்து நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்த வேண்டும். ஷில்பா ஷெட்டி மே 5ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அவர் வெளிநாடுகளுக்குப் போகக் கூடாது என்று உத்தரவிட்டார் நீதிபதி.

Please Wait while comments are loading...