விஜய் தம்பிக்கு ஜோடியான வாரிசு நடிகை: யார் மகள் என்று தெரிகிறதா?
ஹைதராபாத்: நடிகை ஷிவாத்மிகா தனது அக்கா ஷிவானியை முந்திவிட்டார்.
நடிகை ஜீவிதா, நடிகர் ராஜசேகரின் இளைய மகள் தான் இந்த ஷிவாத்மிகா. ஜீவிதா, ராஜசேகரின் மூத்த மகள் ஷிவானி தந்தை வழியில் டாக்டராக விரும்பி மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் சினிமா படங்களில் நடிக்க வந்துள்ளார்.

ஷிவானி நடிக்க வந்த வேகத்தில் அவரின் தங்கையான ஷிவாத்மிகாவை தேடி தெலுங்கு பட வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பை ஏற்று அவர் தொரசானி படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மதுரா ஸ்ரீதர் இயக்கியுள்ள தொரசானி படத்தின் ஹீரோ ஆனந்த், அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆவார். விஜய் தம்பி, ஜீவிதா-ராஜசேகர் மகள் நடித்துள்ளதாலும் தொரசானி படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
தொரசானி படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இந்நிலையில் படம் குறித்து ஷிவாத்மிகா கூறியதாவது,

இது ஒரு கனவு போன்று உள்ளது. நானும், அக்காவும் நடிகையாக வேண்டும் என்று கனவு கண்டோம். அக்கா படத்தின் ஷூட்டிங் இன்னும் போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் என் படம் ரிலீஸாகிறது.
இயக்குநர் மதுரா ஸ்ரீதர் எங்கள் குடும்ப நண்பர். அவர் கதை சொன்னதுமே என் குடும்பத்தாருக்கு பிடித்துவிட்டது. இதையடுத்து ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்கப்பட்டது. சிறு வயதில் இருந்தே அப்பா, அம்மாவுடன் ஷூட்டிங் சென்றதால் கேமரா முன்பு நடிப்பது எனக்கு ரொம்ப எளிது என்று நினைத்தேன். ஆனால் முதல் நாள் பயந்துவிட்டேன். அதன் பிறகே மெல்ல மெல்ல நம்பிக்கை ஏற்பட்டது.
நான் முதல் முறை ஹீரோ ஆனந்தை சந்தித்தபோது அவர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி என்பது எனக்கு தெரியாது. யார் என்று தெரியாமல் தான் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆனந்த் திறமையான நடிகர்.
படப்பிடிப்பின்போது அங்கிருந்தவர்கள் என் நடிப்பை என் அம்மாவுடன் ஒப்பிட்டு பேசினார்கள். நான் என்னை அறியாமலேயே அம்மா மாதிரி நடித்திருக்கலாம். ஆனால் யார் ஸ்டைலையும் காப்பியடிக்கக் கூடாது என்று என் பெற்றோர் தொடர்ந்து அறிவுரை வழங்கினார்கள். அதனால் நான் எனக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கி நடித்தேன் என்றார்.


Click it and Unblock the Notifications