மீண்டும் கொரோனா குமார்... விரைவில் விண்ணைத்தாண்டி வருவாயா 2? சிம்பு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்
சென்னை: சிம்பு நடித்து வரும் பத்து தல படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே சிம்பு அடுத்து நடிக்கவுள்ள இரண்டு படங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிம்புவின் அடுத்த இரண்டு படங்களையும் வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கம்பேக் கொடுத்த சிம்பு
கடந்த ஆண்டு வெளியான 'மாநாடு' திரைப்படம் மூலம் செம்மையான கம்பேக் கொடுத்துள்ள சிம்பு, அடுத்தடுத்து புதிய ஜானரில் உருவாகும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த மாதம் வெளியான சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' விமர்சன ரீதியாகவும் வசூலிலும் மாஸ் காட்டியது. கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு கேங்ஸ்டராக நடித்த இந்தப் படத்தின் செகண்ட் பார்ட் விரைவில் உருவாகும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். இதனால், வெந்து தணிந்தது காடு படத்தின் அடுத்த பாகத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

மீண்டும் தொடங்கும் கொரோனா குமார்
சிம்புவின் பத்து தல படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், டிசம்பர் 14ம் தேதி வெளியாகவிருந்த பத்து தல, இப்போது ரிலீஸில் இருந்து பின்வாங்கியதாக கூறப்படுகிறது. முன்னதாக சிம்பு கமிட் ஆகியிருந்த 'கொரோனா குமார்' டிராப் ஆகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. 'இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' மூலம் கவனம் ஈர்த்த கோகுல் இந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது. மேலும், சிம்புவுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் கமிட் ஆகியுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், கொரோனா குமார் படத்தை மீண்டும் தொடங்கவுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

விண்ணைத்தாண்டி வருவாயா 2?
அதேபோல், சிம்பு, கெளதம் மேனன், ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் சூப்பர் ஹிட் அடித்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் அடிக்கடி கேட்டு வந்தனர். இப்போது அதற்கும் விடை கிடைத்துள்ளது. கொரோனா குமார் படத்தை முடித்ததும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தில் சிம்பு நடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சிம்பு - கெளதம் மேனன் - ஏஆர் ரஹ்மான் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு
கொரோனா குமார், விண்ணைத்தாண்டி வருவாயா 2 என சிம்புவின் இரண்டு படங்களையும் ஐசரி கணேஷ் தான் தயாரிக்கவுள்ளாராம். வெந்து தணிந்தது காடு கொடுத்த கலெக்ஷனில் மனம் குளிர்ந்துள்ள ஐசரி கணேஷ் சிம்புவின் அடுத்த இரண்டு படங்களையும் தயாரிக்க முடிவெடுத்துவிட்டாராம். வெந்து தணிந்தது காடு செகண்ட் பார்ட் தான் முதலில் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது கொரோனா குமார், விண்ணைத்தாண்டி வருவாயா 2 படங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன. இருந்தாலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறதா என விரைவில் தெரியவரும்.


Click it and Unblock the Notifications











