Ravi Mohan Birthday: ரவி மோகன் கவிதையை பாடலாக மாற்றிவிடுவாராம்.. பிறந்தநாள் வாழ்த்தில் கெனிஷா பளிச்!
சென்னை: நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என இந்த பிறந்தநாளில் சகலகல வல்லவனாக உருவெடுத்துள்ள ரவி மோகன். ரவி மோகன் இன்று அதாவது செப்டம்பர் 10ஆம் தேதி தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ரவி மோகனின் நெருங்கிய தோழி கெனிஷா ரவி மோகனுக்கு தனது இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்து பகிர்ந்துள்ள வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் ரவி மோகன் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற, அவர் ஜெயம் ரவி என கடந்த ஆண்டு வரை அழைக்கப்பட்டு வந்தார். தனது மனைவி ஆர்த்தியை பிரிந்த பின்னர், தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றிக் கொண்டார். இது எல்லாம் விவாதமாக மாறியது.

சுதா கொங்கரா வாழ்த்து: ரவி மோகனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவர் தற்போது நடித்து வரும் படமான பராசக்தி படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்புத் தள புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், " படப்பிடிப்புத் தளத்தில் ரவியை தேடி கண்டுபிடிக்க வேண்டுமா? அப்படியானால் நீங்கள் உடனே படப்பிடிப்புத் தளத்திலேயே அமைதியாக உள்ள இடத்திற்குச் சென்று பாருங்கள் அங்கு ரவி இருப்பார். அதுவும் கதாபாத்திரமாகவும், காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்றும் அவர் தயாராகிக் கொண்டு இருப்பார். 200 சதவீத ஈடுபாட்டுடன் இருக்க கூடிய எனது ஜெண்டில்மேன் நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுக்கு இந்த நாள் மிகவும் இனிய நாளாக அமையட்டும். உங்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி" என்று பதிவிட்டுள்ளார். இவரது வாழ்த்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

கெனிஷா வாழ்த்து: அதேபோல் நடிகர் ரவி மோகனின் நெருங்கிய தோழியும் பாடகியுமான கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரவி மோகன், பியானோ வாசிக்கும் வீடியோவைப் பகிர்ந்து தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து குறிப்பில், " பிறந்தநாள் வாழ்த்துகள் ரவி மோகன். நீங்கள் நீங்களாகவே இருப்பதற்கு நன்றி. யாரையும் தொந்தரவு செய்யாமல், கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் அனைத்து மனிதர்களுக்கும் அன்பைக் கொடுப்பதில் மிகவும் உறுதியாக இருக்குறீர்கள். அதற்காக நன்றி. அவ்வளவு வலியிலும் நிம்மதியைத் தேடுவதற்கு நன்றி. கவிதையை பாடலாக மாற்றும் கலை நீங்கள்" என்று தனது வாழ்த்துக் குறிப்பில் பதிவிட்டுள்ளார். அதுவும் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
இயக்குநர் அவதாரம்: ரவி மோகன் பிறந்த நாள் என்பதால், ரவி மோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள முதல் படமான யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். An Ordinary Man என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ப்ரோமோ, ரவி மோகனின் பிறந்த நாளை முன்னிட்டு மாலை 06.06 மணிக்கு ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் ரசிகர்கள் ரவி மோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளோடு, அவரது படத்துக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











