பிரின்ஸ் பாக்ஸ் ஆஃபிஸ் இரண்டாம் நாள்: கார்த்தியிடம் தடுமாறும் சிவகார்த்திகேயன்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு 21ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான பிரின்ஸ் படத்துக்கு போட்டியாக கார்த்தியின் சர்தாரும் வெளியாகியுள்ளது.
முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்த சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், இரண்டாம் நாளில் சர்தாருடன் மோத முடியாமல் தடுமாறி வருகிறது.

முதல் நாளில் நல்ல ஓப்பனிங்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் தீபாவளியை முன்னிட்டு நேற்று முன்தினம் (அக் 21ம் தேதி) உலகம் முழுவதும் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இந்தப் படம், சிவகார்த்திகேயனின் வழக்கமான காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயனுடன் மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பிரின்ஸ் படத்தை, ஜதி ரத்னலு படம் மூலம் கவனம் ஈர்த்த, அனுதீப் இயக்கியுள்ளார். ஜதி ரத்னலு படத்தின் இயக்குநர் என்பதால், பிரின்ஸுக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதன்படியே, முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்தது.

சர்தாருடன் மோதல்
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்துடன் கார்த்தியின் சர்தாரும் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தீபாவளி ரேஸில் வேறு எந்த தமிழ்ப் படங்களும் வெளியாகாததால் பிரின்ஸ், சர்தார் இடையே போட்டி நிலவியது. அதன்படி பிரின்ஸ் படத்துக்கு முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்ததால், உலகம் முழுவதும் 7 முதல் 8 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. அதனால், வரும் நாட்களில் பிரின்ஸ் படம் வசூலில் மாஸ் காட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மோசமான விமர்சனங்களால் தற்போது ரசிகர்களிடம் வரவேற்பு குறைய தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இரண்டாம் நாள் வசூல்
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூலும், முதல் நாளை விட குறைந்துவிட்டது. நல்ல ஓப்பனிங் கிடைத்தும், மோசமான கதை, திரைக்கதையால் தீபாவளிப் போட்டியில் திணறி வரும் பிரின்ஸ், இரண்டாம் நாளில் 5 முதல் 6 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளதாம். முதல் இரண்டு நாட்களையும் சேர்த்து மொத்தமே 12 முதல் 13 கோடி வரை தான் பிரின்ஸ் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 60 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள பிரின்ஸ், ஓடிடி ரைட்ஸ், சாட்டிலைட் உரிமை உள்ளிட்ட வகைகளில் 50 கோடி ரூபாய்க்கும் மேல் பிசினஸ் பார்த்துவிட்டது. ஆனாலும், திரையரங்குகளில் கலெக்ஷன் மோசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்தாருக்கு வரவேற்பு
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்தாலும், கார்த்தியின் சர்தார் படத்துடன் ரேஸில் தாக்குப்பிடிக்குமா எனத் தெரியவில்லை. பிரின்ஸ் படத்துடன் ஒப்பிடும் போது முதல் நாளில் சர்தாருக்கு பெரிதாக ஓப்பனிங் கிடைக்கவில்லை. ஆனாலும், நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளதால் இரண்டாம் நாளில் இருந்தே வசூலில் மாஸ் காட்டத் தொடங்கிவிட்டது சர்தார். முதல் நாளில் 4 கோடி மட்டுமே வசூலித்த சர்தார், இரண்டாம் நாளில் மட்டும் 6 கோடியும், முதல் இரண்டு நாட்கள் மொத்தமாக சேர்த்து இதுவரை 10 முதல் 11 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











