100 செஞ்சுரி அடிச்சவருக்கா 90 ரன் வந்தா பயம்.. சச்சின், தோனிக்கே விமர்சனம்.. சிவகார்த்திகேயன் பேச்சு!
சென்னை: மதராஸி படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசிய பேச்சுக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் அடுத்த வசூல் நாயகனாக உருவாகியுள்ள சிவகார்த்திகேயனுக்கு எதிராக ஏகப்பட்ட விமர்சனங்களும் குவிந்து வரும் நிலையில், அதுதொடர்பாகவும் ஆடியோ லாஞ்சில் ரொம்ப வெளிப்படையாகவே பேசிவிட்டார்.
விஜய், அஜித், கமல், ரஜினிகாந்த், சிம்பு, தனுஷ், சூர்யா மற்றும் விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்கள் குறித்தும் அவர்களுக்காக துணையாக நிற்கும் ரசிகர்கள் குறித்தும் தூள் கிளப்ப பேசிய சிவகார்த்திகேயன் தன் மீது கிளம்பும் விமர்சனங்கள் குறித்து பேசும் போது, நல்ல விமர்சனங்களை காது கொடுத்து கேட்டு ஏற்று என்னிடம் உள்ள தவறுகளை திருத்திக் கொள்ள முயற்சித்து வருகிறேன்.

விமர்சனங்கள் நிச்சயம் ஒருவரை சரி செய்ய வேண்டும். அதை பலர் செய்கின்றனர். ஆனால், ஒரு சிலர் நம்மை காலி பண்ணும் நோக்கில் செய்வதை நாம் பெரிதாக எடுத்துக் கொண்டு முடங்கி விடக் கூடாது என பேசிய சிவகார்த்திகேயன், சச்சின் டெண்டுல்கர், தோனியையே விமர்சிக்கவில்லையா? என்று பேசியது அனைத்து ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
பிஜு மேனன், வித்யூத் ஜமால்: துப்பாக்கி படத்தின் இயக்குநர், துப்பாக்கி படத்தின் வில்லன் வித்யூத் ஜமால் உடன் பணியாற்றிய அனுபவம் எல்லாம் கனவில் கூட நினைத்தது கிடையாது. வித்யூத் ஜமால் கையை குலுக்கும் போதே பயங்கரமா பிடிச்சாரு, முருகா படம் முடியுற வரைக்கும் இந்த ஆள் கிட்ட அடி வாங்கிடக் கூடாது, அப்புறன் உனக்கு நான் யாருன்னே அடையாளம் தெரியாதுன்னு வேண்டிக்கிட்டேன். அவர் நான் அடிக்கும் போது தடுப்பார். அதுவே பயங்கரமாக வலிக்கும் என செம காமெடியாக பேசி அரங்கை சிரிப்பலையில் ஆழ்த்தினார். பிஜு மேனன் குரலே கம்பீரமாக இருக்கும். எல்லாரையும் போல அய்யப்பனும் கோஷியும் படம் எனக்கும் ஃபேவரைட். எப்படி ஒரு வாய்ஸை பவர்ஃபுல் ஸ்க்ரீன் பிரசென்ஸாக மாற்ற முடியும் என்பதை அவரிடம் கற்றுக்கொண்டேன் என சிவகார்த்திகேயன் மதராஸி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசினார்.
சச்சின், தோனிக்கே விமர்சனம்: மதராஸி இசை வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி ரசிகர்கள் எப்படி ரசிகர்களை சம்பாதித்தார்கள், தான் அதற்காக கடந்த 13 ஆண்டுகளாக என்ன முயற்சி எடுத்து வருகிறேன் என பேசிய சிவகார்த்திகேயன் தன் மீது எழும் விமர்சனங்களுக்கும் பதில் அளித்துள்ளார். 100 செஞ்சுரி அடித்த சச்சினுக்கே 90 ரன் அடிக்கும் போது கை உதறும் என்று சொல்வதெல்லாம் வேடிக்கையான விமர்சனம் தான். ஏதோ ஒரு சீசனில் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி சொதப்பி விட்டால், தோனியை கடுமையாக விமர்சிக்கின்றனர். தம்பி அவர் 5 முறை சாம்பியன்ஷிப் வென்று கப் வாங்கிக் கொடுத்தவர்ப்பா என்று சொன்ன சிவகார்த்திகேயன் இவர்களுக்கே இப்படி விமர்சனங்கள் வரும்போது, நானெல்லாம் யாரு? நல்ல விமர்சனத்தை நிச்சயம் கேட்டு அதன்படி நடிப்பேன். ஆனால், காலி பண்ணும் விமர்சனங்களை கண்டுக்கொள்ள மாட்டேன் என்று அதிரடியாக பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











