Madharasi Trailer: துப்பாக்கி எவன் கையில் இருந்தாலும்.. வில்லன் நான் தான்டா.. மதராஸி டிரைலர்!
சென்னை: இயக்குநர் ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மதராஸி' திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படத்தின் அட்டகாசமான டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படத்தையும் எடுக்காமல் இருந்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த ஆண்டு தொடக்கத்தில் சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா ஆகியோரை வைத்து 'சிக்கந்தர்' என்ற படத்தை எடுத்து இருந்தார். இந்தி, தமிழில் வெளியான இந்த படம் படுதோல்வி அடைந்தது. சிக்கந்தர் படத்தின் தோல்விக்கு காரணம் நான் மட்டும் இல்லை. சல்மான் கானை வைத்து படப்பிடிப்பு நடத்துவது இவ்வளவு ஈசியான விஷயம் இல்லை. அவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் பகலிலும் பொது இடத்தில் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது. அவர் இரவு 8 மணிக்குத்தான் படப்பிடிப்பு தளத்திற்கு வருவார். காலையில் இருந்து நாங்கள் படப்பிடிப்பு தளத்தில் அவரின் வருகைக்காக காத்துக்கொண்டு இருப்போம். இரவிலும் பகல் போல செட் போட்டு படப்பிடிப்பை நடத்தினோம். அனைத்து காட்சிகளையும் கிரீன் மேட் மற்றும் கிராபிக்ஸில் எடுத்தால் படம் எப்படி தான் இருக்கும்? ஆனால் இந்தக் கதை என் மனதுக்கு நெருக்கமானது என கூறியிருந்தார்.

மதராஸி : சிக்கந்தர் படத்தை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி உள்ளார். சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் மிகப்பெரிய அளவின் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த படம் வெளியாக இருப்பதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. மதராஸி படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மதராஸி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சாய் ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. கல்லூரியை சுற்றி பல இடத்தில் சிவகார்த்திகேயனின் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய எதிர்நீச்சல் திரைப்படத்தில் வரும் எதிர்நீச்சல் அடி என்ற பாடலை பாடி அரங்கு முழுக்க டார்ச் லைட்டை அடித்து ரசிகர்கள் அலப்பறை செய்து வருகின்றனர்.
டிரைலர் வெளியானது: தற்போது மதராஸி படத்தின் அதிரடியான டிரைலர் வெளியாகி உள்ளது. டிரைலரின் ஆரம்பத்தில் உன்னை போல் பிறரை நேசி... எல்லாரையும் உன் குடும்பமாக நினை.. இதைத்தான் எல்லா மதமும்.. எல்லா கடவுளும் சொல்கிறார்கள் என்ற வசனத்துடன் டிரைலர் தொடங்கிறது. இதைத்தொடர்ந்து துப்பாக்கி சத்தம், குண்டு வெடிப்பு என டிரைலர் பட்டையை கிளப்பு கிறது. அதே போல துப்பாக்கி எவன் கையில் இருந்தாலும், வில்லன் நான் தான் டா என்று சொல்லும் வசனம் மாஸாக உள்ளது. ஏற்கனவே ஏ.ஆர். முருகதாஸ் இந்த படம் கஜினி படம் போல, காதல், பழிவாங்குவது இருக்கும் என சொல்லி இருந்தார். அதே போல டிரைலரில் சிவகார்த்திகேயன் கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு அதிரடி காட்டி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











