பூமியில் சிறந்த மனிதர் நீங்க தான் சார்...சோனு சூட்டிற்கு குவியும் பாராட்டுக்கள்
மும்பை : விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமிக்கு உதவிய பாலிவுட் நடிகர் சோனு சூட்டிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சோனு சூட் செய்த இந்த காரியத்தை பலரும் வேகமாக இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் பிரபலமான வில்லன் நடிகராக இருப்பவர் சோனு சூட். அருந்ததி, சந்திரமுகி உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் கொடூரமான வில்லனாக வரும் சோனு சூட், நிஜத்தில் பலருக்கும் ஹீரோவாக இருந்து வருவது அனைவரும் அறிந்தது தான்.
கொரோனா சமயத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கும், மருத்துவமனையில் மருத்துவ வசதிகள் பெற முடியாமல் தவித்த நோயாளிகள் ஆகியோருக்கு உதவினார். தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சமயத்திலும் சோஷியல் மீடியா மூலம் ஏராளமானோருக்கு உதவி செய்தார். பல மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கை வசதி போன்றவற்றை வழங்கினார்.

சிறுமிக்கு உதவிய சோனு சூட்
சத்தமில்லாமல் பல சமூக சேவைகள், உதவிகளை செய்து வரும் சோனு சூட், தற்போது மீண்டும் அப்படி ஒரு உதவியை செய்துள்ளார். பீகாரைச் சேர்ந்த செளமுகி குமாரி என்ற இரண்டு வயது குழந்தை பிறக்கும் போதே 4 கால்கள், 4 கைகளுடன் பிறந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக உதவி பெற முடியாமல் தவித்த இந்த குழந்தை பற்றி கேள்விப்பட்டதும், தேடிச் சென்று அந்த குழந்தையின் மருத்துவ செலவிற்கு உதவி செய்துள்ளார் சோனு சூட்.

தேடி சென்று உதவிய சோனு சூட்
தற்போது அந்த குழந்தைக்கு கூடுதலாக இருந்த உறப்புக்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, அந்த குழந்தை நலமுடன் இருப்பதாக சோனு சூட் தனது ட்விட்டரில் போட்டோவுடன் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். பீகாரில் சிறிய கிராமத்தில் தவித்து கொண்டிருந்த அந்த சிறுமியும் நானும் மேற்கொண்ட பயணம் வெற்றி அடைந்துள்ளது. தற்போது அறுவை சிகிச்சை முடிந்து அவர் நலமுடன் வீடு திரும்பி உள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

அந்த நல்ல மனசு தான் சார் கடவுள்
செளமுகி குமாரிக்கு சூரத்தில் உள்ள மருத்துவமனையில் கிட்டத்தட்ட 7 மணி நேரம் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடுமையான போராட்டத்திற்கு பிறகு அறுவை சிகிச்சை வெற்றி அடைந்துள்ளது. இந்த தகவலை சோனு சூட் பகிர்ந்ததும் அவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி, பாலிவுட் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உலகத்திலேயே சிறந்த மனிதர்
பாலிவுட் பிரபலங்களான சுனில் ஷெட்டி, பூஜா பந்த்ரா, இஷா குப்தா, ரிதிமா பண்டிட் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவர்களில் பலர், பூமியிலேயே சிறந்த மனிதர் நீங்கள் தான். ஒவ்வொரு முறையும் நீங்கள் அனைவரின் மனதையும் வென்று விடுகிறீர்கள். மிக சிலர் மட்டுமே உங்களை போல் உள்ளனர். கடவுள் எப்போதும் உங்களை மகிழ்ச்சியுடன் வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











