»   »  வந்தனா குடும்பத்தார் மீது மோசடி புகார்கள்:ஸ்ரீகாந்த் கல்யாணத்தில் சிக்கல்!

வந்தனா குடும்பத்தார் மீது மோசடி புகார்கள்:ஸ்ரீகாந்த் கல்யாணத்தில் சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு நிச்சயம் செய்துள்ள வந்தனா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஏராளமான மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால் திட்டமிட்டபடி அவர்களின் கல்யாணம் நடக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.


கடந்த வாரம்தான் ஸ்ரீகாந்த்தின் தந்தை தனது மகனின் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ஜூன் 18ம் தேதி ஸ்ரீகாந்த்துக்கும், வந்தனாவுக்கும் கல்யாணம் நடைபெறும் என அவர் அறிவித்தார்.

இருவரும் நீண்ட காலமாகவே நெருங்கிப் பழகி வந்தனர், எனவே இது காதல் கல்யாணம் என்றும் பின்னர் கூறப்பட்டது.

ஸ்ரீகாந்த்தை கணவராக அடைவது நான் செய்த பாக்கியம், கிடைத்த வரம் என்று வந்தனா நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார். அதேபோல மகிழ்ச்சி தெரிவித்திருந்தார் ஸ்ரீகாந்த்தும்.

திருமண ஏற்பாடுகள் சூடுபிடித்துள்ளன. இரு வீட்டாரும் பத்திரிக்கை அடிப்பு, திருமண அழைப்பு ஆகியவற்றில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சமயத்தில் புது சிக்கல் எழுந்துள்ளது.


வந்தனா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிபிஐயிலும், சென்னை போலீஸிலும் நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம்.

வந்தனா, அவரது தந்தை சாரங்கபாணி, சகோதரர் ஹர்ஷவர்த்தன் ஆகியோர் மீது இந்த மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்.

போலியான ஆவணங்களை தாக்கல் செய்து கனரா வங்கியிலிருந்து இவர்கள் ரூ. 18 கோடி கடன் வாங்கியுள்ளனர். பின்னர் பணத்தைத் திருப்பித் தராமல் மோசடி செய்து விட்டனர். இதையடுத்து கனரா வங்கி வந்தனா உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. விரைவில் 3 பேர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாம்.

அதேபோல, வந்தனாவின் சகோதரர் ஹர்ஷவர்த்தன், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டை பரத் மேத்தா என்பவருக்கு ரூ. 75 லட்சத்திற்கு விற்றுள்ளார். பின்னர் தான், அந்த வீடு ஹர்ஷவர்த்தனுக்குச் சொந்தமானதல்ல என்று தெரிய வந்ததாம். போலியான ஆவணங்களைக் காட்டி அந்த வீட்டை தனக்கு விற்று விட்டதை அறிந்து பரத் மேத்தா அதிர்ச்சி அடைந்தார்.


இதையடுத்து மத்திய குற்றப் பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார் பரத் மேத்தா. இதையடுத்து ஹர்ஷவர்த்தன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டாராம்.

இதேபோல, அண்ணா அறிவாலயம் எதிரே உள்ள ஒரு வீட்டை போலியான ஆவணத்தைக் காட்டி ஹர்ஷவர்த்தன் விற்க முன்றுள்ளார். அந்த வீடு முஸ்லீம் பெண்மணி ஒருவருக்குச் சொந்தமானதாம். அவர் தற்போது துபாயில் உள்ளார்.

முதலில் வாடகைக்கு இருப்பது போல அங்கு குடியேறியுள்ளார் ஹர்ஷவர்த்தன். பின்னர் அந்த வீடு தனது பெயரில் இருப்பது போல மோசடியான ஆவணங்களை தயாரித்துள்ளார். பின்னர் அந்த பத்திரத்தை பதிவும் செய்துள்ளார். இதையடுத்து எழும்பூரைச் சேர்ந்த பிகாரிலால் என்பவருக்கு ரூ. 95 லட்சத்துக்கு விற்க முயன்றுள்ளார்.

பின்னர்தான் பிகாரிலாலுக்கு இந்த விவரம் தெரிய வந்து அதிர்ச்சியுற்று, சென்னை காவல்துறையில் புகார் கொடுத்தார். இந்த சம்பவத்திலும் ஹர்ஷவர்த்தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, கோட்டூர்புரம், ரஞ்சித் சாலையில் உள்ள இன்னொரு வீட்டை இதேபோல சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஒருவருக்கு விற்றுள்ளார் ஹர்ஷவர்த்தன். அந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.

மேற்கண்ட சொத்துக்களைக் காட்டித்தான் கனரா வங்கியில் அவர் ரூ. 18 கோடி கடனைப் பெற்றுள்ளார். இதில் ஹர்ஷவர்த்தனுடன் சேர்ந்து கடன் பெறுபவர்களாக வந்தனா, சாரங்கபாணி ஆகியோர் காட்டப்பட்டுள்ளனர், கையெழுத்தும் போட்டுள்ளனர்.

இவர்களின் மோசடியை அறிந்த கனரா வங்கி, பெங்களூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் புகார் கொடுத்தது. சில நாட்களுக்கு முன்பு சிபிஐ அதிகாரிகள் சென்னை வந்து பாலவாக்கத்தில் உள்ள ஹர்ஷவர்த்தனின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவர் வீட்டில் இல்லை.

தற்போது அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இத்தனை சமாச்சாரங்களும் ஸ்ரீகாந்த் குடும்பத்துக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டு விட்டதாம். கல்யாண தேதியை முடிவு செய்த பின்னர்தான் இவை தெரிய வந்து, ஸ்ரீகாந்த் குடும்பம் அதிர்ச்சியில் மூழ்கி விட்டதாம். ஸ்ரீகாந்த்தின் தந்தை மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, என்னால் இப்போதைக்கு எதுவும் சொல்ல இயலாது என்று மறுத்து விட்டார். ஆனால் கல்யாணம் எப்போது வேண்டுமானாலும் ரத்தாகலாம் என்று மட்டும் குறிப்பிட்டார்.

ஸ்ரீகாந்த்திடம் கருத்து கேட்டபோது, வந்தனாவின் குடும்பத்தில் நடந்துள்ள இந்த சம்பவங்களை என்னால் நம்ப முடியவில்லை. இதுகுறித்து அவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. எனது குடும்பத்தினருடன் பேசி வருகிறேன். விரைவில் ஒரு முடிவை எடுத்து அறிவிப்பேன் என்றார்.

நமக்கும் இது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil