»   »  மீண்டும் ஸ்ரீகாந்த், வந்தனா கல்யாணம்

மீண்டும் ஸ்ரீகாந்த், வந்தனா கல்யாணம்

Subscribe to Oneindia Tamil

நடிகர் ஸ்ரீகாந்த்திற்கும், அவரது மனைவி வந்தனாவுக்கும் சென்னையில் இன்று காலை மீண்டும் திருமணம் நடந்தது. இரு வீட்டாரின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், வெகு சில திரையுலகினர் மட்டும் இதில் கலந்து கொண்டனர்.

தமிழ் சினிமா உலகை சமீபத்தில் கலக்கிய ஹாட் நியூஸ் ஸ்ரீகாந்த் - வந்தனா விவகாரம்தான். முதலில் இருவருக்கும் திருமணம் என செய்தி வந்தது. பின்னர் வந்தனாவின் சகோதரர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதையடுத்து ஸ்ரீகாந்த் தரப்பு கல்யாணத்திலிருந்து பின் வாங்கியது. பிறகு திடீரென ஸ்ரீகாந்த் வீட்டில் வந்தனா அதிரடியாக குடி புகுந்தார். இதையடுத்து ஸ்ரீகாந்த் குடும்பம் வீட்டை விட்டு வெளியேறியது.

அதன் பின்னர் கோர்ட்டில் இரு தரப்பினரும் போரைத் தொடங்கினர். மாறி மாறி வழக்குகள், விசாரணைகள், முன் ஜாமீன்கள் என சர்ச்சை நீடித்தது.

இந்த நிலையில் திடீரென ஸ்ரீகாந்த், வந்தனா இடையே சமரசப் பேச்சு நடந்தது. இதையடுத்து இருவரும் நேரில் சந்தித்துப் பேசினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. சுமூகமாகப் போகும், சேர்ந்து குடும்பம் நடத்தவும் தீர்மானித்தனர்.

வந்தனாவை மருமகளாக ஏற்க ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டதால் பிரச்சினை சட்டென முடிவுக்கு வந்தது. இதை செய்தியாளர்களிடம் சந்தோஷமாக அறிவித்தார் ஸ்ரீகாந்த்.

இதையடுத்து இருவரது திருமண வரவேற்புக்கான அழைப்பிதழ்கள் அடிக்கப்பட்டன. ஸ்ரீகாந்த்தும், வந்தனாவும் நேரில் தங்களது நண்பர்கள், உறவினர்கள், திரையுலகினரை சந்தித்து அழைப்பிதழ்களைக் கொடுத்தனர்.

இன்று மாலை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வரவேற்பு நடப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எந்த ஹோட்டல் என்று தெரிவிக்கப்படவில்லை. பாதுகாப்பு காரணமாக ரகசியம் காப்பதாக ஸ்ரீகாந்த் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை ஸ்ரீகாந்த், வந்தனாவுக்கு மறுபடியும் கல்யாணம் நடந்தது. முறைப்படி நடந்த இந்த கல்யாணத்தில், நடிகர் ராஜேஷ், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இரு தரப்பு குடும்பத்தாரும், நெருங்கிய உறவினர்களும் மட்டும் இதில் கலந்து கொண்டனர்.

திருமண நிகழ்ச்சி குறித்த விவரங்கள் படு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil