சுதா கொங்காரா இன்னொரு ஜெயலலிதா... இயக்குநராக அவருடைய திறமையை ஒப்பிட்ட குணச்சித்திர நடிகர்
சென்னை: இயக்குநர் சுதா கொங்கார தற்சமயம் சூரரை போற்று திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறார்.
தமிழில் கடைசியாக பாவ கதைகள் என்கிற ஆந்தோலோஜியில் தங்கம் என்கிற பகுதியை இயக்கியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் சூப்பர் குட் சுப்ரமணி இயக்குநர் சுதா கொங்கார பற்றியும் அவர் பணிபுரியும் விதம் பற்றியும் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்

சூரரை போற்று
சூரரை போற்று கொடுத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அந்தப் படத்தை நடிகர் சூர்யா தயாரிக்க, இந்தியில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறார் சுதா கொங்காரா. இந்தி நடிகர் அக்க்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்க, சூர்யா அதில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். தமிழ் பதிப்பிற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தி பதிப்பிற்கும் இசையமைக்கிறார். ஆனால் இந்தி ரசிகர்களுக்கு ஏற்றார் போல முழுக்க முழுக்க புது பாடல்களை இசையமைக்கிறார். சமீபத்தில் இந்தப் படம் தேசிய விருதுகளை குவித்தது, இப்போது இந்தி படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது.

சூப்பர் குட் சுப்ரமணி
ஜெய் பீம், சூரரைப் போற்று, சார்பட்டா பரம்பரை, முண்டாசுப்பட்டி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் சூப்பர் குட் சுப்ரமணி. அடிப்படையில் தான் ஒரு இயக்குநர் குழுவை சேர்ந்தவர் என்பதால் சூரரைப் போற்று திரைப்படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு வந்தபோது ஒரு பெண் இயக்குநர் எப்படி படத்தை இயக்குகிறார் என்று பார்க்கத்தான் போனேன். அங்கு சென்றபோதுதான் தெரிந்தது அவர் மிகப் பெரிய ஆளுமையான பெண்மணி என்று.

நினைத்ததை முடிப்பவர்
ஒரு பாடல் காட்சியில் சூர்யா நடனமாடிக் கொண்டே வசனம் பேச வேண்டும் என்று இயக்குநர் கூறியபோது சூர்யா தனது பாணியில் ஒன்றை செய்து காட்டினாராம். ஆனால் தன்னுடைய கற்பனையில் இருப்பது போலத்தான் நடித்துக் காட்ட வேண்டும் என்று விடாப்பிடியாக தான் எதிர்பார்த்த நடிப்பை சூர்யாவிடம் கேட்டு வாங்கினார்.

இன்னொரு ஜெயலலிதா
டப்பிங் பேசும்போது கூட ஒரு சில சொற்கள் மதுரை வட்டார வழக்கு போல இல்லை என்றால் அதனை சரியாக கண்டுபிடித்து அந்த ஊர் வட்டார வழக்கு பேசுபவரை வரவழைத்து உச்சரிப்பு சரியாக இருக்கிறதா இல்லையா என்று கேட்டுத் தெரிந்து கொண்டு சரியான உச்சரிப்பு வரும் வரை விட மாட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அரசியலில் எப்படி ஒரு ஆளுமையாக இருந்தாரோ அதேபோல இயக்குநர்களில் ஒரு ஆளுமையான பெண்ணாக சுதா கொங்காரவை நான் பார்க்கிறேன் என்று சூப்பர் குட் சுப்ரமணி கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











