மருத்துவ காரணங்களுக்காக வெளியேறிய நமீதா மாரிமுத்து....உறுதிப்படுத்திய சுதா மம்மி
சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 போட்டியில் 18 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். இதுவரை பிக்பாஸ் வரலாற்றில் இல்லாத வகையில் முதல் முறையாக திருநங்கையான நமீதா மாரிமுத்து போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.
முதல் வாரம் சிறு சிறு உரசல்கள் மற்றும் கலகலப்பாக சென்றது. இன்றும், நாளையும் கமல் வரும் எபிசோட்கள் ஒளிபரப்பாக உள்ளன. இதனால் கமல், போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்து என்ன சொல்ல போகிறார், எளிமினேஷன் இந்த வாரமே துவங்குமா என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

வாழ்க்கையை பகிர்ந்த போட்டியாளர்கள்
கடந்த 3 நாட்களாக போட்டியாளர்கள் தங்களை பற்றியும், தங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை, சந்தித்த சோதனைகளை, தடைகள் பற்றியும் சக போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் தெரிந்து கொள்ளும் படி கூறி வருகின்றனர். முதல் ஆளாக இசைவாணியும் அவரைத் தொடர்ந்து சின்னபொண்ணு, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோரும் தங்களின் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

நமீதாவின் உருக வைத்த பேச்சு
இவர்களைத் தொடர்ந்து நமீதா மாரிமுத்து தன்னை பற்றியும், தன் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களையும் மிகவும் வெளிப்படையாக கூறினார். ஒட்டுமொத்த திருநங்கைகளின் குரலாக, எங்கள் மீது அனுதாபப்பட வேண்டாம். எங்களுக்கு படிப்பை தாருங்கள் நாங்கள் முன்னேறி காட்டுவோம் என அனைவரின் மனதையும் உருக வைக்கும் விதமாக பேசினார்.

கண்கலங்கிய போட்டியாளர்கள்
நமீதாவின் பேச்சு அனைவரையும் கண்கலங்க வைத்தது. நமீதாவின் கதையை கேட்டு, அனைத்து போட்டியாளர்களும் அவருக்கு ஹார்ட் கொடுத்து தங்களின் அன்பை வெளிப்படுத்தினர். ஒரே நாளில் ரசிகர்கள் மத்தியிலும் அவர் ஸ்டார் ஆகி விட்டார். அதைத் தொடர்ந்து தாமரைச் செல்வியிடம் காரசாரமாக பேசிய நமீதா, அன்று இரவே அவரை மன்னிப்பதாக கூறி டீ போட்டு கொடுக்கிறார். தன்னை தங்கையாக நினைத்துக் கொள்ளும்படி கேட்கிறார். இது அனைவரின் மனதையும் தொட்டு விட்டது.

வெளியேறினார் நமீதா
இதனால் அனைத்து போட்டியாளர்களுக்கும் கடும் டஃப் கொடுத்து, இறுதிப் போட்டி வரை நமீதா செல்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென அவர் பிக்பாஸ் போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறி உள்ளதாக கூறப்பட்டது. இந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அவரை மீண்டும் போட்டியில் கலந்து கொள்ள வைக்க வேண்டும் என ரசிகர்கள் பலர் கேட்க துவங்கி விட்டனர்.

உறுதிப்படுத்திய சுதா மம்மி
ஆனால் நமீதா வெளியேறியது உண்மை தானா என தெரியவில்லை. இது பற்றி அவருக்கு மிகவும் நெருக்கமான சுதா மம்மியிடம் போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது, ஆம். நமீதா மாரிமுத்து பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறியது உண்மை தான். மருத்துவ காரணங்களால் தவிர்க்க முடியாமல் அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அதைத் தவிர தன்னால் ஒன்றும் சொல்ல முடியாது என கூறி விட்டார்.

ப்ரோமோவிலும் நமீதா இல்லை
இவர் சொன்னதை உண்மை என உறுதிப்படுத்தும் வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் எபிசோடிற்காக வெளியிடப்பட்ட ப்ரோமோவில் 17 போட்டியாளர்கள் மட்டுமே அமர்ந்திருப்பதாக காட்டப்படுகிறது. அவர்களில் நமீதா மாரிமுத்து இல்லை.


Click it and Unblock the Notifications











