ட்ரெண்டிங்கில் பொன்னியின் செல்வன் புதிய ப்ரோமோ…. சன் டிவிக்கு கிடைத்த தொலைக்காட்சி உரிமை!
சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
பொன்னியின் செல்வன் படம் வெளியாகவுள்ளதை முன்னிட்டு, அடுத்தடுத்து ப்ரோமோஷன் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் பணிகள் தீவிரம்
தமிழ்த் திரையுலகின் கனவுப் படமான 'பொன்னியின் செல்வன்' வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உட்பட மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏஆர் ரஹ்மானின் இசையில் பாடல்களும், ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

புதிய ப்ரோமோவாக ‘போர் வீரனா சொல்’ லிரிக்கல் வீடியோ
'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்கள் தொடர்ந்து பல ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், படக்குழுவும் போஸ்டர்கள், மேக்கிங் வீடியோ, லிரிக்கல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. இப்படி அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து வரும் பொன்னியின் செல்வன் படக்குழு, தற்போது 'போர் வீரனா சொல்' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டுள்ளது. திரிஷா, சோபிதா துலிபாலா நடித்துள்ள இந்தப் பாடல், பொன்னியின் செல்வன் ரசிகர்களிடம் ட்ரெண்டிங்கில் உள்ளது.

பொன்னியின் செல்வன் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் டிவி?
பான் இந்தியா படமாக பல மொழிகளில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ஓடிடி உரிமையை, அமேசான் ப்ரைம் 125 கோடிக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பொன்னியின் செல்வன் ஆடியோ உரிமையும் 24 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்க கடும் போட்டி நிலவியது. இதில் சன் டிவி 25 கோடி ரூபாய்க்கு பொன்னியின் செல்வன் படத்தின் உரிமையை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாம் பாகத்திற்கும் இப்போதே எதிர்பார்ப்பு
பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், முதல் பாகம் வரும் 30ம் தேதி வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முதல் பாகமே இன்னும் வெளியாகாத நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழுவினர் மேற்கொண்டுள்ள ப்ரோமோஷன் பணிகள், ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளன. இந்நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம், அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











