ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற ராகவா லாரன்ஸ்… பிறந்தநாள் தினத்தில் எடுத்த புது முடிவு
சென்னை: டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடிகர், இயக்குநர் என கலக்கி வருபவர் ராகவா லாரன்ஸ்.
ருத்ரன், சந்திரமுகி 2, அதிகாரம் படங்களில் நடித்து வரும் ராகவா லாரன்ஸ் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற ராகவா லாரன்ஸ், புதிய முடிவை எடுத்துள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.

46வது பிறந்தநாள்
ஜென்டில்மேன் படத்தில் குரூப் டான்ஸராக திரையில் முகம் காட்டிய ராகவா லாரன்ஸ், அஜித்தின் 'அமர்க்களம்' படத்தில் 'மஹா கணபதி' பாடல் மூலம் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமானார். தொடர்ந்து பாடல்களில் தனது வெறித்தனமான ஆட்டத்தால் பிரபலமான ராகவா லாரன்ஸ், பார்த்தேன் ரசித்தேன், பார்த்தாலே பரவசம் என அடுத்தடுத்து பல படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து நடிகராகவும் ஜொலிக்கத் தொடங்கினார். அதன்பின்னர் இயக்குநராகவும் முனி, காஞ்சனா போன்ற படங்களை ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த ராகவா லாரன்ஸ், இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

தலைவரிடம் வாழ்த்து
46வது பிறந்தநாள் கொண்டாடி வரும் ராகவா லாரன்ஸுக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இந்நிலையில் தீவிர ரஜினி ரசிகரான அவர், சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அப்போது சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள ராகவா லாரன்ஸ், தலைவரும் குருவுமான ரஜினியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துடன் ஆசியும் பெற்றேன். இது எனது வாழ்நாளில் மறக்க முடியாதது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

பிறந்தநாளில் புதிய முடிவு.
மேலும், இந்த நாளில் இருந்து புதிய முடிவொன்றை எடுத்துள்ளதாகவும் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். ஏற்கனவே பல சமூக சேவைகள் செய்து வரும் அவர், இனிவரும் நாட்களில் அன்னதானம் செய்யவுள்ளதாக கூறியுள்ளார். பசியின் கொடுமை எனக்கு நன்றாகவே தெரியும், அதனால் என்னால் முடியும் நேரங்களில் நானே நேரில் சென்று பசித்திருப்பவர்களுக்கு உணவு வழங்க உள்ளேன், அதற்கு உங்கள் ஆசிர்வாதங்கள் தேவை என பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து
ராகவா லாரன்ஸ் பல சமூக சேவைகளையும், தனிப்பட்ட முறையில் சிலருக்கு பொருளாதார உதவிகள், மருத்துவ உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், தற்போது பிறந்தநாளில் இருந்து அன்னதானமும் செய்ய முடிவெடுத்துள்ளது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ராகவா லாரன்ஸின் இந்த முயற்சி வெற்றிபெற வேண்டும் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனிடையே ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு ருத்ரன் படத்தில் இருந்து சூப்பர் அப்டேட் இன்று வெளியாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











