twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஷாலின் மோசடிக்கு பலியாக வேண்டாம்! - ரஜினிக்கு சுரேஷ் காமாட்சி வேண்டுகோள்

    By Shankar
    |

    சென்னை: அனுமதியின்றி நடக்கும் நடிகர் சங்க கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்வதைத் தவிர்க்குமாறு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சுரேஷ் காமாட்சி ரஜினிகாந்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

    Suresh Kamatchi's request to Rajinikanth

    அந்தக் கடிதம்:

    அன்புக்கும் மரியாதைக்குமுரிய தமிழ்சினிமாவின் அசைக்கமுடியாத அரசனாக நாங்கள் முடிசூட்டி வைத்திருக்கும் அய்யா சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு பணிவார்ந்த வணக்கங்கள்...

    நான் சுரேஷ் காமாட்சி. தமிழ் சினிமாவின் ஒரு சிறு தயாரிப்பாளர். உங்களை ஆச்சரியமாகப் பார்க்கும் கோடிக்கணக்கானவர்களில் கடைக்கோடியன். உங்களுக்கு எதையும் அறிவுறுத்தவோ வலியுறுத்தவோ தகுதியற்றவன்.

    ஆனாலும் என்னைப் போன்றவர்களின் பரவலான ஆதங்கம் உங்களைச் சென்றடைய வேண்டுமே என்ற நோக்கத்திலும், சென்று சேரும் என்ற நம்பிக்கையிலும் எழுதுகிறேன்.

    அய்யா, தாங்கள் பல நேரங்களில் நீங்கள் செயல்படும் விதத்தில் நேர்மையானவராகவும், மக்களின் உணர்வுகளை சீராய்ந்து மதிப்பவராகவும் நடந்துவந்திருக்கிறீர்கள்.

    மக்களை எந்தவிதத்திலும் உங்கள் புகழின் மூலமும் ஆளுமையின் மூலமும் பாதிக்கப்பட்டவர்களாக்க துணிந்ததேயில்லை.

    சின்னச் சின்ன முன்னெடுப்புகளை மேற்கொள்கையில், அது அவர்களைப் பாதிக்கும் என அறிந்தால் அதிலிருந்து விலகி நின்றிருக்கிறீர்கள்.

    சமீபத்தில்கூட இலங்கை செல்வது குறித்து ஒருசிலர் எதிர்க்கருத்து கொண்டுவந்தபோது நீங்கள் நான் தவிர்த்துவிடுகிறேன் என ஒரு அழகான அறிக்கையின் மூலம் உங்கள் மேன்மைக்குரிய குணத்தை நிரூபித்திருந்தீர்கள்.

    அவர்கள் கேட்டுக்கொண்டது சரி தவறு என்ற விவாதத்திற்குள் நான் மூக்கை நுழைக்க விரும்பவில்லை. நான் போவேன் என்றுகூட நீங்கள் முடிவெடுத்திருக்கலாம். ஆனால் யாரையும் புண்படுத்திவிடக்கூடாது என்ற மனப்பாங்கில் வேண்டுகோள் விடுத்தவர்களின் கோரிக்கையை புறந்தள்ளாமல் பயணத்தை ரத்து செய்தீர்கள்.

    அந்த முடிவு உங்களுக்கு எவ்வளவு பெரிய சிரமத்தைக்கொடுத்திருக்கும் என்பதை எங்களால் உணர்ந்துகொள்ள முடிகிறது.

    அதற்காக முதலில் உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். நன்றி அய்யா!

    இப்போதும் நாங்கள் தயாரிப்பாளர்கள் இதேபோலொரு இக்கட்டான சூழலில் தள்ளப்பட்டிருக்கிறோம். அதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவரவேண்டியது அவசியமானதும் கடமையும் கூட.

    நடிகர் விஷால் தனது சுயநலத்திற்காக உங்களைப் பயன்படுத்திக்கொள்ள துணிந்திருக்கிறார்.

    அய்யா அவர்மீது ஏழை எளிய நாடகநடிகர்கள் உட்பட அனைத்து நடிகர்களும் பெரும் நம்பிக்கை வைத்து ஓட்டளித்து அவரை நடிகர் சங்கச் செயலாளராக வெற்றிபெற வைத்தனர்.

    ஆனால் இரண்டு வருட பதவிக்காலத்தில் என்னென்னவோ நிறைவேற்றுவோம் என அதிகபட்ச வாக்குறுதிகளைக் கொடுத்து பதவிக்கு வந்தார். கூடவே ஒரு வருடத்திற்குள் நாங்கள் சொன்னதைச் செய்யாவிட்டால் பதவி விலகுவோம் என்ற பெரு நம்பிக்கையை எல்லா நடிகர்களுக்குள்ளும் விதைத்துத்தான் ஓட்டு வாங்கினார்.

    செய்ததென்னவோ ஆட்சி மாற்றத்திற்கான விளம்பரத்தில் கிரிக்கெட் ஆடி பணம் பெற்றதோடு அவர் சேவை நின்றுபோனது. அதன்பிறகு செய்ததெல்லாம் பத்திரிகை தொலைக்காட்சிகளில் மிகைப்படுத்தப்பட்ட விளம்பரப் புகழைத் தேடிக்கொண்டதோடு சரி.

    ஊர் ஊராகச் சென்று நாடக நடிகர்களின் வாழ்வில் விளக்கேற்றுவேன் என்று சொன்ன வாக்குறுதியை பின் மறந்தே போய்விட்டார்.

    வசதியாக, ஒருவருடத்திற்குள் ராஜினாமா செய்வோம் என்பதையும் மறந்துவிட்டார். தவிர நீங்கள் வைத்த தமிழ்த் திரைப்பட நடிகர் சங்கம் என்ற கோரிக்கையை அவரும் அவரது சகாக்களும் நிராகரித்து காற்றில் பறக்கவிட்டு விட்டனர்.

    இதெல்லாம் நடிகர் சங்க விவகாரம். இதில் தயாரிப்பாளர்களுக்கென்ன பிரச்சனை என்றால் நடிகர் சங்கப் பதவியிலிருக்கும்போதே இன்னொரு தாய் சங்கமான தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடுவதா என்று கேட்டால், அதுவும் இல்லை. அதுதான் போட்டியிடலாம் என்று நடிகர் சங்க விதியும், தயாரிப்பாளர் சங்க விதியும், நீதிமன்றத்தின் சட்டமும் சொல்லிவிட்டதே..

    நாங்களும் அதை ஏற்று போட்டியிடத் தயாராகிவிட்டோமே.

    ஆனால் அவர் இப்போது தேர்ந்த அரசியல்வாதியைப் போல நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவை கையிலெடுத்து அதற்கு உங்களை இழுத்து விளம்பரம் தேடி ஓட்டுக்களை பெறலாம் என்று கணக்குப் போட்டு வேலை செய்கிறார்.

    அதற்கு உங்களை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார். இந்த அடிக்கல் நாட்டுவிழாவை செய்யத் தகுதியானவர் நீங்கள்தான் என்ற மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்கப் போவதில்லை.

    என்னுடைய வேண்டுகோளெல்லாம் நீங்கள் விஷாலின் பதவி ஆசைக்கும் தவறான முன்னெடுப்புக்கும் துணைபோகவேண்டாம் என்ற ஒன்றே ஒன்றுதான்.

    அதற்கு துணைபோகவேண்டாம் எனச்சொல்ல மிக முக்கியமான காரணம் இந்தக் கட்டிடத்திற்கு சென்னை மாநகராட்சி இன்னும் முறைப்படியான அனுமதி கொடுக்கவில்லையென்பதுதான். முறையான அனுமதி பெறாமல் அடிக்கல் நாட்ட நடத்தப்படும் இந்த விழாவில் நீங்கள் கலந்துகொண்டு உங்கள் மீது ஒரு சிறு கரும்புள்ளி விழ விட வேண்டாம் என்பது என் வேண்டுகோளும் என் போன்ற சிறு தயாரிப்பாளர்களின் வேண்டுகோளும் ஆகும்.

    நான் சொல்வது தவறென்றால் தயவுசெய்து தாங்கள் நினைத்தால் இதன் உண்மைத்தன்மையை அறிய ஒரு நிமிடமே பிடிக்கும் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

    விதிகளுக்குட்பட்டு நடக்கும் எங்கள் சூப்பர் ஸ்டார் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்ற நம்பிக்கை எங்களுக்குள்ளது.

    நடிகர் சங்க கட்டிடம் கட்டவில்லை. எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. ஆனால் அதற்குள் தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டி ஏன் என்று நாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நடத்தப்படும் இந்த கண்துடைப்பு விழாவை தாங்கள் தயவுசெய்து அனுமதியாதீர்கள்.

    அரசியல் தேர்தல் விதிகளில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் எந்த நலத்திட்டங்களோ பொதுப் பயன்களையோ போட்டியாளர் அறிவிக்கவே கூடாது என்ற விதி ஏன் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தாங்கள் அறியாததல்ல.

    இருந்தும் இங்கு தேர்தல் ஆணையமும் கிடையாது. அதைப்போன்ற நெறிமுறையும் வகுக்கப்படவில்லை என்பது விஷாலுக்கு சாதகமாக உள்ளது.

    அதைப் பயன்படுத்தி முழுக்க முழுக்க தயாரிப்பாளர் சங்கத் தேர்தலைக் குறிவைத்து தனது அவசரகோலத்தை அரங்கேற்றத் துடிக்கிறார். அதற்கு வலு சேர்க்கவே உங்களை அழைத்துள்ளனர்.

    இது உங்களைப் பயன்படுத்தும் சதிச்செயலே அன்றி வேறொன்றுமில்லை.

    நீங்கள் எதையும் பகுத்தறியும் தன்மைகொண்டவர். பக்திமான். மக்களின் மதிப்பிற்குரிய பெருமகன்.

    நீங்கள் இதை ஆராய்ந்து தகுதியான முடிவெடுத்து இந்த விழாவில் கலந்துகொள்வதை தவிர்க்க வேண்டுமாய் அனைத்து தயாரிப்பாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும், இவ்விழா பின்னொரு நாளில் நடிகர் சங்கக் கட்டிடத்திற்கான மாநகராட்சியின் முறையான அனுமதி பெற்று இந்த நிகழ்வு அரங்கேற வேண்டும் என்பதைத் தாங்கள் வலியுறுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

    Suresh Kamatchi's request to Rajinikanth

    முந்தின நாள் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டு நாளை மறுநாள் நடத்தப்பட வேண்டிய விழாவா இது அய்யா?

    அத்தனை நாடக நடிகர்கள் ஏழை எளிய நடிகர்கள் உட்பட பெருவாரியான நடிகர்கள் கலந்துகொள்ள திருவிழாவாக நடத்தப்பட வேண்டிய விழா அல்லவா இது?

    அய்யா சங்கரதாஸ் சுவாமிகள், அய்யா நடிகவேள், அய்யா சிவாஜி, அய்யா எம்ஜிஆர் போன்ற பெருமகனார்களின் நிறைந்த ஆசீர்வாதம் இதன்மூலம் கிடைக்குமா அய்யா சொல்லுங்கள்..?

    நான் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் யாராவது ஒருத்தர் ஏன் குறுக்கே வருகிறீர்கள் என்ற எண்ணத்தைப் புறந்தள்ளிவிட்டு இந்த ஒரு விழாவை சரியாக நடத்த வேண்டும் என்ற பெருநோக்கத்தை உங்கள் முடிவினிலும் ஆலோசனையாலும் முறைப்படுத்துவீர்கள் என்ற நம்புகிறேன்,

    அதோடு, தயாரிப்பாளர்கள் சங்கத்தை ரெகுலரான தயாரிப்பாளர்களே நிர்வகிக்க நீங்கள் அனுமதியளிப்பீர்கள் என்ற உண்மையான எதிர்பார்ப்புடனும், எளியவன் சொல்லும் அம்பலத்திலேறும் என்பதை நீங்கள் உறுதி செய்வீர்கள் என்ற பேராவலோடும் இக்கடிதத்தை நிறைவு செய்கிறேன்.

    நன்றி! வணக்கம்!!

    அன்பின்
    சுரேஷ் காமாட்சி

    தயாரிப்பாளர் / இயக்குநர்

    English summary
    Producer, director Suresh Kamatchi has requested Rajinikanth not to attend Nadigar Sangam's building foundation stone laying function.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X