»   »  'தென்னிந்திய' என்று தொடங்கும் சினிமா சங்கங்கள் பெயரை மாற்ற வேண்டும்!- சுரேஷ் காமாட்சி

'தென்னிந்திய' என்று தொடங்கும் சினிமா சங்கங்கள் பெயரை மாற்ற வேண்டும்!- சுரேஷ் காமாட்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் 'தென்னிந்திய' என்று தொடங்கும் அத்தனை சினிமா சங்கங்களும் இனி தமிழுக்கு மாற வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. இனியும் தள்ளிப் போடாமல் பெயர் மாற்றம் செய்து நமது உணர்வை வெளிப்படுத்துவோம், என்று தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழ் திரைத்துறையில் 'தென்னிந்திய' என்று தொடங்கும் அத்தனை சங்கங்கள், யூனியன்களும் உண்மையாகவே நமது மாண்புமிகு தமிழக முதல்வர் மீது மரியாதை வைத்திருந்தால், தமிழகத்தில்தான் வாழ்கிறோம் என்ற உணர்வு இருந்தால், உடனடியாக அத்தனை சங்கங்கள், யூனியன்கள் பெயரிலும் உள்ள 'தென்னிந்திய' என்ற பெயருக்கு பதில் 'தமிழ்நாடு' என்று மாற்றவும். நீங்கள் களத்தில் இறங்கி கன்னடர்கள் அளவுக்குப் போராடத் தேவையில்லை. வேறு எந்த வழியிலும் உணர்வைக் காட்டத் தேவையில்லை.

Suresh Kamatchi urged to change the name of Nadigar Sangam

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இப்போது செயல்படும் இடத்தை தானமாகக் கொடுத்த தமிழகத்தின் மரியாதைக்குரிய மெய்யப்பச் செட்டியாரும், எஸ்எஸ் வாசன் அவர்களும். அவர்கள் கொடுத்த இடத்தில் செயல்படும் அமைப்புக்கு நியாயமாக தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை என்றல்லவா பெயர் சூட்டப்பட வேண்டும்... இங்கே 'தென்னிந்திய'' எங்கு வந்தது?

இன்றைக்கு நடிகர் சங்கம் 'எங்கள் நிலம்... எங்கள் சொத்து' என்று மார்த் தட்டிக் கொண்டிருக்கும் 4 ஏக்கர் நிலமும் எங்கள் மண்ணின் மைந்தர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் தானமாகக் கொடுத்தது. ஆனால் இன்று அந்த இடத்துக்குச் சொந்தம் கொண்டாடும் நடிகர் சங்க நிர்வாகிகள், சங்கத்தின் பெயரை 'தமிழ்நாடு நடிகர்கள் சங்கம்' என மாற்ற முடியாது என பிடிவாதம் பிடிக்கின்றனர். தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய மதிப்புக்குரியவர்கள் சொல்லியும் கூட மதிக்க மறுக்கிறீர்கள்.

'ரஜினியை விட எனக்கு ஒரு சதவீதமாவது தமிழுணர்வு' அதிகம் இருக்கிறது என்று ஜம்பமாகக் கூறிய நாசரோ, 'சௌத் இன்டியன் ஆர்டிஸ்ட் அஸோஸியேசன்' என புதிதாக ரப்பர் ஸ்டாம்ப் அடித்திருக்கிறார். என்னே ஒரு தமிழ்ப் பற்று!

காவிரிப் பிரச்சினைக்காக கர்நாடகம் நடத்தும் அனைத்துப் போராட்டங்களிலும் நடிகர் ரமேஷ் அரவிந்த் கலந்து கொண்டு தன் உணர்வைக் காட்டுகிறார். அதே ரமேஷ் அரவிந்த் தமிழ்நாட்டில் நடக்கும் காவிரி போராட்டங்களில் பங்கேற்க அழைத்தால் வருவாரா... அப்படி எனில் 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்ற பெயர் எதற்கு?"

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
Producer - Director Suresh Kamatchi urged Nadigar Sangam to change the name as Tamil Nadu Nadigar Sangam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil