Mohan G Vs Suriya Fan: பார்த்து பேசுங்க.. எச்சரித்த மோகன் ஜி.. சூர்யா ரசிகரோடு புது பஞ்சாயத்து!
சென்னை: நடிகர் சூர்யாவுக்கும் இயக்குநர் மோகன் ஜிக்கும் இடையிலான பஞ்சாயத்து என்பது சூர்யா தயாரித்து நடித்த படமான ஜெய் பீம் படம் வெளியான பின்னர், தொடங்கியதுதான். அப்போது, மோகன் ஜிக்கு மட்டும் இல்லாமல், பாமகவின் முன்னாள் தலைவர் அன்புமணி உள்ளிட்ட பலருக்கும் தனது கடிதத்தின் வாயிலாக பதில் அளித்திருந்தார், ஆனால் இந்த பிரச்னை என்பது ஏதோ பனிப்போர் மாதிரி தொடர்ந்து கொண்டே உள்ளது.
அதாவது சூர்யாவை, மோகன் ஜி அடிக்கடி வம்புக்கு இழுப்பது போல தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிடுவதும், திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழும்போது, ஏதோ சூர்யாதான் திமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என்று பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது போலவும், சூர்யாவை கேள்வி கேட்டு பதிவிட்டு வருகிறார். இவரது விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் சூர்யா பதில் அளிக்கவில்லை என்றாலும், சூர்யா ரசிகர்கள் மோகன் ஜிக்கு பதிலடி கொடுப்பதை வாடிக்கையாக செய்து வருகிறார்கள்.

விமர்சனங்கள்: இது மட்டும் இல்லாமல், மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் தனது கருத்துக்களை பொதுவான விசயங்களுக்கோ, அல்லது அவர் நம்புகிற அரசியல் சார்ந்த விசயங்களுக்கோ பதிவிட்டால், அவருக்கு எதிராக பதிவிடுபவர்களில் சூர்யா ரசிகர்களும் இருக்கிறார்கள். அதிலும் சிலர் சூர்யா ரசிகர்கள் என்ற போர்வையில் மோகன் ஜியை விமர்சித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில், மோகன் ஜி இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள படம் திரௌபதி 2. இந்த படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்துவிட்டது என்றும், படத்தின் போஸ்ட் புரெடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் அண்மையில் தெரிவித்திருந்தார்.

ஆபாச விமர்சனம்: இப்படி இருக்கும்போது, இந்த படத்தின் போஸ்டரை, தீபாவளியை முன்னிட்டு படக்குழு தரப்பில் ரிலீஸ் செய்யப்பட்டது. திரௌபதி படத்தில் நடித்த ரிச்சர்ட் ரிஷி தான் இந்த படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படி இருக்கும்போது, இந்த படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்ட பின்னர், மோகன் ஜியை சூர்யா ரசிகர்கள் விமர்சித்தனர். இதில் என்ன பிரச்னை என்றால், சூர்யா ரசிகர்கள் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். ஆபாசமாக விமர்சித்தவர் யார் என்று பார்த்தால், அவர் சூர்யாவின் ரசிகராக இருக்கிறார். இந்நிலையில் அந்த ரசிகர் சூர்யாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, பார்த்து பேசுங்க பிரதர், தேவையில்லாத பிரச்னைகளில் எல்லாம் தலையிடாதீர்கள் என்று எச்சரித்து பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது என்ன புது பஞ்சாயத்தா இருக்கே என்றும் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











