5 தேசிய விருதுகளை அள்ளி தந்த 'சூரரைப் போற்று'...குவிந்த வாழ்த்துக்கள்... மனமார்ந்த நன்றி சூர்யா
சென்னை : தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக மாறி உள்ளார் சூர்யா. சூர்யா நடித்த படங்கள் அடுத்தடுத்து மாஸ் ஹிட் அடித்து வருவதை கொண்டாடி வந்த ரசிகர்கள், தற்போது அவர் நடித்த 'சூரரைப் போற்று' படம் 5 தேசிய விருதுகளை அள்ளி குவித்திருப்பதையும் கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video
அதிலும் சூர்யா தனது பிறந்தநாளை கொண்டாடும் இந்த சமயத்தில் அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய, அவர் நடித்த 'சூரரைப் போற்று' படத்திற்கு அதிகமான விருதுகள் கிடைத்திருப்பதை கொண்டாடாமல் இருப்பார்களா? சூர்யாவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
நேற்று பலரும் சூர்யா மற்றும் 'சூரரைப் போற்று' படக்குழுவிற்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்திருந்த நிலையில், நடிகர் சூர்யா அதற்காக நன்றி தெரிவித்த அறிவிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நன்றி சொன்ன சூர்யா
அந்த அறிக்கையில் சூர்யா, வணக்கம். அன்பான வாழ்த்துக்களால் வாழ்வை நிறைக்கும் அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றிகள்.' சூரரைப் போற்று' திரைப்படத்திற்கு ஐந்து தேசிய விருதுகள் கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. பெருந்தொற்று காலத்தில் எதிர்பாராத நெருக்கடிகளுக்கு இடையில் வெளியான இத்திரைப்படத்திற்கு இந்திய அளவில் வரவேற்பு கிடைத்தது. தன்னம்பிக்கை நிறைந்த கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்வைச் சிறந்த திரைப்படமாக்க பல ஆண்டுகள் உழைத்த, இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

படக்குழுவிற்கு நன்றி
தேசியவிருது பெறுகிற சுதா கொங்கரா - ஷாலினி உஷாநாயர், ஜி.வி.பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள். சிறந்த திரைப்படத்தை தயாரிக்க துணைநின்ற படக்குழுவினர் அனைவருக்கும் இந்த அங்கீகாரம் உரியது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் சகோதரர் அஜய் தேவ்கன் அவர்களுக்கும் , மேலும்தேசிய விருது பெறுகிற இயக்குநர் வசந்த் சாய், ஸ்ரீகர் பிரசாத், லஷ்மி ப்ரியா சந்திரமெளலி, இயக்குநர் மடோன் அஸ்வின் மற்றும் 68வது தேசிய விருது பெறுகிறது சக கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஜோதிகாவிற்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்
'நேருக்கு நேர்' திரைப்படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்த இயக்குநர் வசந்த் சாய் அவர்களுக்கும், தயாரிப்பாளர் இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பும், வழிகாட்டலும் தந்து எப்போதும் துணைநிற்கும் அம்மா, அப்பா, கார்த்தி, பிருந்தா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், சூரரைப் போற்று திரைப்படத்தில் நடிக்கவும், தயாரிக்கவும் வலியுறுத்திய என் ஜோதிகாவிற்கும், அன்பு பிள்ளைகள் தியா, தேவ் ஆகியோருக்கும் இந்த விருதை அன்புடன் உரித்தாக்குகிறேன்.

தம்பி - தங்கைகளுக்கு நன்றி
என் முயற்சிகளை வரவேற்று கொண்டாடும் மக்களுக்கும், என்னுடைய ஏற்றத் தாழ்வுகளில் எப்போதும் உடனிருக்கும் அன்பு தம்பி - தங்கைகளுக்கும் நெஞ்சம் நிறைந்த அன்பும், நன்றியும். இந்த தேசியவிருது அங்கீகாரம், நல்ல திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஊக்கத்தை அளிக்கிறது. தேர்வுக் குழுவினருக்கும், இந்திய அரசிற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.அன்பின் வாழ்த்துக்களால் நெகிழச் செய்கிற அனைவருக்கும் மீண்டும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் கொண்டாடும் ரசிகர்கள்
சூர்யா தனது நன்றி அறிக்கையில் ரசிகர்கள் என குறிப்பிடாமல் தம்பி - தங்கைகள் என குறிப்பிட்டுள்ளதையும் அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். சூர்யா பிறந்தநாள் மற்றும் தேசிய விருது பெற்றது என சந்தோஷத்தை இரட்டிப்பாக கொண்டாடி வரும் ரசிகர்கள் #HBDDearSuriya, #JaiBhim. #Suriya, #BestActor,#SooraraiPottru போன்ற ஹேஷ்டேக்குகளை டிரெண்டாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











