தம்பி கார்த்தியின் சர்தார் படத்துடன் மோதும் பிரின்ஸ்… சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து சொன்ன சூர்யா!
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான பிரின்ஸ் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
இதனிடையே சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் குறித்து சூர்யா போட்டுள்ள ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

எப்படி இருக்கு பிரின்ஸ்?
சென்ற வருடம் டாக்டர், சில மாதங்களுக்கு முன்னர் டான் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து கெத்து காட்டியிருந்தார் சிவகார்த்திகேயன். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அனுதீப் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் மரியா, சத்யராஜ், ராகுல் தாத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம், சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக தெரிகிறது. படத்தில் கதையே இல்லையென்றும் சும்மா ஜாலியாக இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சூர்யா வாழ்த்து
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்துடன், கார்த்தியின் சர்தாரும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ள சர்தார், ஆக்சன் ஜானரில் ஸ்பை திரில்லராக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் வெற்றிபெற சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள சூர்யா, சிவகார்த்திகேயன், அனுதீப், தமன் உட்பட பிரின்ஸ் படக்குழுவுக்கு வாழ்த்துகள், ராக் ஆன் என போஸ்ட் போட்டுள்ளார். சூர்யாவின் இந்த ட்விட்டர் பதிவை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கார்த்தியுடன் மோதல்
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் கார்த்தியின் சர்தாருடன் மோதுகிறது. தனது தம்பி கார்த்தியின் சர்தாருக்கு எதிராக ரிலீஸாகியுள்ள போதும், பிரின்ஸ் படக்குழுவுக்கு வாழ்த்துக் கூறியுள்ளார் சூர்யா. அவரின் இந்த பெருந்தன்மையான மனசை பார்த்து ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். சிவகார்த்திகேயனுக்கு தீபாவளியில் ரிலீஸாகும் முதல் படமாக பிரின்ஸ் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் சிவகார்த்திகேயன் பாடல் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இருவருக்குள்ளும் நெருங்கிய நட்பு இருக்கும் நிலையில், பிரின்ஸ் வெற்றிபெற சூர்யா வாழ்த்தியுள்ளது வைரலாகி வருகிறது.

சர்தாருக்கும் வாழ்த்து
இந்நிலையில், சிவகார்த்திகேயனை வாழ்த்திய கையோடு, கார்த்திக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார் சூர்யா. சர்தார் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருவதை பார்க்க மகிழ்ச்சியாக இருப்பதாகவும், படம் வெற்றி பெற வாழ்த்து என்றும் சூர்யா ட்வீட் செய்துள்ளார். சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, அப்படியே தம்பி கார்த்தியின் மனசையும் குளிர வைத்துள்ள சூர்யாவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சூர்யா கூறியுள்ளதை போல, கார்த்தியின் சர்தார் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.


Click it and Unblock the Notifications











