இந்தியில் கால்பதிக்க நேரம் பார்க்கும் சூர்யா- சோதனை முயற்சியாக வரும் மாற்றான் டப்பிங்!
சென்னை: இந்திப் பட உலகில் கால்பதிக்க தயாராகிறார் நடிகர் சூர்யா. அதற்கு முன் முயற்சியா தனது மாற்றான் படத்தின் இந்தி டப்பிங்கை வெளியிடுகிறார்.
பாலிவுட்டுக்கு சூர்யா ஒன்றும் புதியவரல்ல. ஏற்கெனவே ராம்கோபால் வர்மாவின் ரக்தசரித்திரா மூலம் அவர் அறிமுகமானவரே.

ஆனால் அந்தப் படம் படுதோல்வியைச் சந்தித்ததும், தனது தமிழ் -தெலுங்கு மார்க்கெட்டைத் தக்கவைத்துக் கொள்வதில் குறியாக இருந்தார். புதிதாக கேரள சினிமா ரசிகர்களும் சூர்யாவுக்கு வந்தனர்.
சூர்யாவின் சிங்கம் 2 தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் சூப்பர் ஹிட்டானது.

இப்போது மீண்டும் பாலிவுட்டை ஒரு கை பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது சூர்யாவுக்கு. காரணம், அவரது தமிழ்ப் படங்கள் பலவற்றையும் இந்தியில் ரீமேக் செய்து வெற்றி பெறுவதுதான். கஜினி, சிங்கம் போன்றவற்றின் இந்தி ரீமேக் வெற்றி குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சூர்யாவின் சிங்கம் 2, மெய்ன் ஹூன் சூர்யா - சிங்ஹம் 2 என்ற தலைப்பில் வெளியாகி, ஓரளவு நன்றாகவும் ஓடியது.

இப்போது அடுத்ததாக தமிழில் தோல்வி கண்ட சூர்யாவின் மாற்றான் படத்தை இந்தியில் டப் செய்து நம்பர் 1 - ஜூத்வா - தி அன்பிரேக்கபிள் என்ற தலைப்பில் வெளியிடுகின்றனர்.
மாற்றான் படத்தை கேவி ஆனந்த் இயக்கியிருந்தார். காஜல் அகர்வால் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்தப் படத்துக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து சூர்யா தன் நேரடி இந்திப் படம் குறித்து முடிவெடுக்கப் போகிறார்.


Click it and Unblock the Notifications











