For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கொடையாக கிடைத்த ஸ்வர்ணலதாவின் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி

  |

  சென்னை: மறைந்த பாடகி ஸ்வர்ணலதாவின் எட்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று.

  பாட்டுக்கு இசை முக்கியம் என்றால் பாடலில் உள்ள முழு உணர்வை வெளிப்படுத்த மொழியறிவு முக்கியம். பாடுபவர்கள் மொழியை சிதைக்கும்போது பாடலின் உயிரோட்டமும் அறுந்துபோகும். தான் பாடிய எல்லா மொழிப்பாடல்களிலும் அதை கட்டி காப்பாற்றியவர் ஸ்வர்ணலதா.

  வேற்று மொழிகளில் பாடும்போது அந்த மொழியின் அழகு குறையாமல் உணர்வை வெளிப்படுத்துவதில் வல்லவராக திகழ்ந்தவர் ஜானகி. அதன்பிறகு அதை கனக் கச்சிதமாகச் செய்தவர் ஸ்வர்ணலதா எனச் சொல்லலாம். இப்போது ஸ்ரேயா கோஷல், சின்மயி போன்றவர்கள் பிற மொழிகளை லாவகமாக கையாளுகிறார்கள்.

  உச்சரிப்பு

  உச்சரிப்பு

  பிற மொழிகளின் அழகை மெருகேற்றும் வகையில் ஸ்வர்ணலதா பாடியதற்கு ஆகச்சிறந்த சான்றாக, ரக்த் என்ற இந்திப்படத்தில் இடம்பெற்ற "ஜன்னத் ஹே ஏ ஜமீன்" என்ற பாடலை சொல்லலாம். இந்தி மொழியின் சாரம் குறையாமல், உச்சரிப்பு பிசகாமல் ஒரு பாடலை தமிழ்நாட்டுப் பாடகியால் எப்படி பாட முடியும் என பலரும் வியந்தனர். அதேபோல் ஏஆர்.ரஹ்மானின் முதல் இந்தி படமான ரங்கீலாவில் "ஹேய் ராமா யே க்யா ஹூவா" பாடலும் அப்படியே இருந்தது. அவர் தமிழ்நாட்டுப் பாடகியல்ல, கேரளாவிலிருந்து வந்தவர் என பிறகு அவர்களுக்கு தெரிந்தது. காரணம் என்னவென்றால் ஸ்வர்ணலதா பிறந்தது கேரளா என்றாலும், அவர் கர்நாடகாவிலும், சென்னையிலும் வசித்து வந்தார். மேலும் அவர் பாடிய தமிழ், கன்னட பாடல்களும் அப்படியே அந்த மொழிப் பாடகி பாடுவதுபோல் இருந்தன.

  கொடை

  கொடை

  1987 ஆம் ஆண்டு எம்.எஸ்.விஸ்வநாதனால் நீதிக்குத் தண்டனை திரைப்படத்தில் தான் ஸ்வர்ணலதா முதன் முதலில் திரையுலகிற்கு அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 14. மிகப்பெரிய இசை ஜாம்பவான் இருவருக்கிடையே சின்னஞ்சிறிய குழந்தையாய் தவழ்ந்தார் ஸ்வர்ணலதா. எம்.எஸ்.வி இசையில் பாடிய முதல் பாட்டு பாரதியாரின் "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா", சேர்ந்து பாடியவர் திரையுலகில் கொடிகட்டிப் பறக்கும் கேஜே.யேசுதாஸ். எத்தனை பேருக்கு இந்த அதிர்ஷடம் அமையும் என்பது கேள்விக்குறி தான். 14 வயது சிறுமி தாயன்பை போற்றும் பாடலை அத்தனை அழகாக பாடியிருப்பார். ராதிகாவிற்கு ஸ்வர்ணலதாவின் பின்னணி குரல் கச்சிதமாக பொருந்தியது. பின்னாளில் ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசும்போது "ஸ்வர்ணலதா நமக்கு கிடைத்த கொடை" என்று குறிப்பிட்டார் எம்.எஸ்.வி.

  வித்தியாசங்கள்

  வித்தியாசங்கள்

  ஸ்வர்ணலதாவின் திறமையை அறிந்துகொண்ட இளையராஜா குரு சிஷ்யன் திரைப்படத்தில் "உத்தம புத்திரி நானு" என்ற பாடலைப் பாட வாய்ப்பளித்தார். மதுபோதையில் காபரே நடமாடிக்கொண்டு ஒரு பெண் காமத்தை வெளிப்படுத்தும் பாடல் அது. ஆனால் அதையும் லாவகமாக பாடி அசத்தினார். பின்னர் சத்ரியன் படத்தில் வரும் "மாலையில் யாரோ" பாடலுக்கு பிறகு ஸ்வர்ணலதா முக்கியமான பாடகியாக அங்கீகரிக்கப்பட்டார். இப்பாடல் தனிமையில் இருக்கும் பெண்ணின் காதலை மிக நுட்பமாக ஓவியம் தீட்டியது. முரட்டுத்தனமான ஒரு ஆண் இந்த பாடலைக் கேட்டால் கூட அவனுக்குள் இருக்கும் பெண்மை வெளிப்படும் பாடல். ராஜாவின் ட்யூன் ஸ்வர்ணலதாவின் குரல் என அனைத்தும் அற்புதமாக இருக்கும்.

  மாசி மாசம்

  மாசி மாசம்

  ஆட்டமா தேரோட்டமா, மாசி மாசம் ஆளான பொண்ணு, மல்லியே சின்ன முல்லையே, குயில் பாட்டு வந்ததென்ன, கான கருங்குயிலே, ராஜாதி ராஜா உன் தந்திரங்கள், போவோமா ஊர்கோலம்.. என பல வெரைட்டியான பாடல்களை இளையராஜாவின் இசையில் பாடி கலக்கினார். ஆரம்ப காலங்களில் மெல்லிசைப் பாடல்களில் சுஜாதாவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை ஏனோ ஏஆர்.ரஹ்மான் ஸ்வர்ணலதாவுக்கு கொடுக்க வில்லை. ராக்கோழி ரெண்டும், உசிலம்பட்டி பெண்குட்டி, மெட்ராச சுத்திப்பாக்க.. முத்துப் பாப்பா போன்ற பெப்பியான பாடல்களை வழங்கினார். இதுபோன்ற டெக்னோவிலும் ஸ்கோர் செய்வார் ஸ்வர்ணலதா என அப்பாடல்கள் மூலம் தெரியவந்தது.

  ஏஆர்.ரஹ்மான்

  ஏஆர்.ரஹ்மான்

  போராளே பொண்ணுத்தாயி பாடல் இந்திய அளவில் இன்றும் மிகச்சிறந்த சோகப்பாடலாக இருக்கிறது. அப்பாடலுக்காக அவர் தேசிய விருது பெற்றார். அதுவும் காதலன் படத்தில் வரும் முக்காலா பாடலில், மனோவின் குரல் அதிகாரத் தொணியில் ஓங்கி ஒலிக்கும்போது, கடிகாரத்தின் கீழ் லேசால ஆடும் பெண்டுலம் போல .. நீ சொல்லு காதலா... நம் காதல் யாருமே எழுதாத பாடலா... போன்ற வரிகளை பாடியிருப்பார். அதன்பிறகு பல முக்கிய பாடல்களை ரஹ்மான் இசையில் பாடினார். அதில் அலைபாயுதே படத்தின் எவனோ ஒருவன் வாசிக்கிறான் முக்கியமானது. தனிமையில் துடிக்கும் மீனை ஒரு கழுகு கொத்தி தூக்கிச் செல்வதுபோல் வலியை உண்டுபண்ணும் பாடல் அது. அதே சோகக்குரல், மாய மச்சிந்திரா எனவும், குச்சி குச்சி ராக்கம்மா எனவும் கிறங்கடிக்கத் தவறவில்லை. ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் வரும் முன்பே வா பாடல் முதலில் ஸ்வர்ணலதா பாடவேண்டியது. உடல்நிலை காரணமாக ஸ்ரேயா கோஷல் பாடவைக்கப்பட்டார்.

  வினோத நோய்

  வினோத நோய்

  இப்படி எல்லா வகையான பாடல்களையும் பாடும் அற்புத திறமையை கொண்டிருந்த ஸ்வர்ணலதாவுக்கு கூச்ச சுபாவம் அதிகம். கேமரா முன்பு வருவதற்கும், தொலைக்காட்சியில் தோன்றுவதற்கும் தயக்கம் காட்டினார். 2000 த்திற்கு பிறகு வெகுவாக அவருக்கு வாய்ப்புகள் குறையத்தொடங்கின. சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த ஸ்வர்ணலதா சகோதரர்களுடனும், உறவினர்களுடனே வசித்து வந்தார். திருமணம் செய்துகொள்ளவில்லை. சுவாசப் பிரச்சனையும் மூச்சுவிடுவதில் சிரமமும் அவரை நெடு நாட்களாக வாட்டியது. மருத்துவ சிகிச்சை எடுத்துவந்தாலும், என்ன நோய் என்று மருத்துவர்களால் சரியாக கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியவில்லை. உலகையே மயக்கிய குரலழகி ஒரு கட்டத்தில் பேச முடியாத நிலைக்குத் தள்ளபட்டார். அவருக்கு வந்திருப்பது Idiopathic Pulmonnary Fibrosis எனும் வினோத நோய் என மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். நுரையீரலுக்கு செல்லும் காற்றைத் தடுத்து சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுத்தும் நோய் அது. வீடும் மருத்துவமனையுமே கதி என்று தன்னுடைய இறுதிக் காலங்களை கழித்த ஸ்வர்ணலாதா 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் நாள் 37 வயதில் இயற்கை எய்தினார். காற்றின் அலைகளாய் நம்மை ஆட்கொண்ட குரல் அன்று காற்றில் கரைந்தது.

  English summary
  Popular late Indian Singer Swarnalatha 8th death anniversary today.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X