முதல்கட்ட ஷூட்டிங் ஓவர்
பிரம்மாண்ட சரித்திரப் படமாக 150 கோடி ரூபாய் செலவில் உருவாக உள்ள 'சைரா' படம் கால தாமதமாகிக் கொண்டே சென்றது சிரஞ்சீவியின் ரசிகர்களை வருத்தமடைய வைத்தது. இந்நிலையில், இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் கடந்த டிசம்பர் 6-ம் தேதி தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது.
ரஹ்மான் விலகல்
இப்படத்தின் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானும் ஒளிப்பதிவாளராக அறிவிக்கப்பட்ட ரவிவர்மனும் அப்படத்திலிருந்து சில வாரங்களிலேயே வெளியேறினர். ரவிவர்மனுக்கு பதிலாக ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இசையமைப்பாளர் தமன்?
திட்டமிட்டபடி படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெறாததே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் படத்திலிருந்து வெளியேறியதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. தமன் இசையமைப்பாளராக அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
தயாரிப்பாளர் ராம்சரண்
சிரஞ்சீவியின் 151-வது படமான 'சைரா' சுதந்திர போராட்ட வீரர் நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் உருவாகிறது. இந்தப் படத்தில் 400-க்கும் மேற்பட்ட பிரிட்டீஷ் நடிகர்கள் நடித்துள்ளனர். சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம்சரண் இந்த படத்தை தயாரிக்கிறார்.
ஷூட்டிங் ஆரம்பம்
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் 6-ம் தேதி முதல் ஐதராபாத்தில் போடப்பட்டுள்ள செட்டில் தொடங்கியது. அதில் சில முக்கியத்துவம் வாய்ந்த ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டன. சிரஞ்சீவி வெளிநாட்டு நடிகர்களுடன் மோதும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது.
இரண்டாம் கட்ட ஷூட்டிங்
கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, சுதீப் ஆகிய முக்கிய நடிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
விஜய் சேதுபதி
தமிழ் நடிகரான விஜய் சேதுபதி, 'சைரா' படம் மூலம் தெலுங்குத் திரையுலகத்தில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது சஸ்பென்ஸ் ஆக இருந்தது.
சிரஞ்சீவியின் வலது கை
இப்போது விஜய் சேதுபதி நடிக்க உள்ள கதாபாத்திரம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. படத்தில் அவர் சிரஞ்சீவி நடிக்கும் கதாபாத்திரமான 'சைரா நரசிம்ம ரெட்டி' கதாபாத்திரத்தின் வலதுகரமாக 'ஒப்பாயா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். சைராவின் நம்பிக்கைக்கு உகந்தவராக இருந்தவராம் ஒப்பாயா.
தெலுங்கில் விஜய் சேதுபதி
இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் விஜய் சேதுபதிக்கு தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் விஜய் சேதுபதிக்கு நல்ல தொடக்கமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.