ரோபோ சங்கரை வைத்து டி.ராஜேந்தர் போட்டிருந்த பிளான்.. தத்து புள்ளைனு உருக்கம்.. காமெடி நடிகர் ஷேரிங்ஸ்
சென்னை: ரோபோ சங்கர் உடல்நல குறைவால் உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழ் திரைத்துறையையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பெருங்குடியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அவரது உயிர் பிறந்தது. வளசரவாக்கத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இன்று இறுதி சடங்குகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் காதல் பட நடிகர் சுகுமார் ரோபோ சங்கர் குறித்து உருக்கத்துடன் பதிவிட்டிருக்கிறார்.
சின்னத்திரை, வெள்ளித்திரையில் மின்னிய ரோபோ சங்கர் ஏற்கனவே உடல்நிலை குறைவால் சிகிச்சை பெற்று தேறியவர். அப்படி மீண்ட அவர் ஒட்டுமொத்தமாக குடியை நிறுத்தி; வேறு ஒரு நபராக இருந்தார். சில நாட்களுக்கு முன்புகூட இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு நடத்திய பாராட்டு விழாவை நேரில் பார்த்து ரசித்தார். பல படங்களில் நடிப்பதற்கு புக் ஆகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மருத்துவமனையில் மரணம்: சூழல் இப்படி இருக்க நேற்று திடீரென அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை பெருங்குடியில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் சங்கரை காப்பாற்ற முடியவில்லை. அவருக்கு 46 வயதுதான் ஆகிறது. ரோபோ சங்கரின் உயிரிழப்புக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகிறார்கள்.

காதல் சுகுமார் போஸ்ட்: இந்நிலையில் நடிகர் காதல் சுகுமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "மதுரையில் ஒரே கலைக்குழுவில் அறிமுகமானோம்... சமகாலத்தில் சென்னைக்கு கனவுலகத்தை தேடி ஓடி வந்தோம்.97களில் 200 ரூபாய்க்காக மிஸ்டர் மதுரை சங்கர் சினிமா வாய்ப்பு வேண்டும் என மேடையில் ஆடும்போது யாராவது இயக்குநர் கண்களில் பட்டுவிடவேண்டும் சில்வர் பெயிண்ட் அடித்துக்கொண்டு கட்டுமஸ்தான உடலை காட்டி ரோபோ நடனமாடுவார்.
நான் உங்கள் தத்து பிள்ளை: இயல்பில் நல்ல நகைச்சுவை உணர்வுள்ளவர். பலகுரல் மன்னன். சினிமா அவர் திறமைக்கு வாய்ப்பளித்தது. உலகநாயகன் அவர்களின் தீவிர ரசிகர். அவரைப்போல் ஒரு சக நடிகன் கமல் சார் அவர்களை காதலிக்கவில்லை என்றே சொல்லலாம். சமீபத்தில் T. ராஜேந்தர் அண்ணன் அவர்கள் என்னையும் அவரையும் வைத்து "காதல் கலாட்டா" எனும் படத்தை இயக்க கதை சொன்னபோது.. ரோபோ சங்கர் சொன்ன வார்த்தை, "அண்ணே சிம்பு நீங்க பெத்த புள்ளை. நான் உங்க தத்துப்புள்ள"
கண் கலங்கிய ராஜேந்தர்: இதற்கு TR அவர்கள் ஏனோ கண்கலங்கினார்... இன்று அவரால் சிரிக்க வைத்தவர்கள் அழவைத்து அவசரப்பட்டுக்கொண்டார். அன்பர்களே... அவர் விட்டு சென்ற செய்தி ஒன்றுதான் எனக்கும் நமக்கும்... உடல்தான் நமக்கு எல்லாமே. அதை விட்டுவிட்டால் உயிர் நம்மை விட்டுவிடும். குடி உயிரைக் குடிக்கும்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











