twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரைக்கதையின் இலக்கணம் - அந்த ஏழு நாட்கள்

    By Shankar
    |

    Recommended Video

    அந்த ஏழு நாட்கள்!- வீடியோ

    - கவிஞர் மகுடேசுவரன்

    'அந்த ஏழு நாட்கள்' திரைப்படத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று நெடுநாள்களாவே நினைத்திருந்தேன்.

    அந்தப் படத்தை எப்படித் தவிர்க்க முடியும் ? திரைக்கதையின் இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரேயொரு படத்தைத்தான் கூற வேண்டும் என்றால் என் தேர்வு 'அந்த ஏழு நாட்கள்'தான். படத்தின் சிறப்புகள், திரைக்கதை உத்திகள், முன்பின் காட்சியமைப்புத் தொடர் நுணுக்கங்கள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் பலரும் பலவிதமாக வியந்து கூறிவிட்டார்கள். சந்திரபாபு என்னும் நடிகரின் வாழ்வில் நடந்ததாய்க் கூறப்படும் ஒரு நிகழ்ச்சியை வைத்து இப்படியெல்லாம் திரைக்கதை எழுத முடியுமா ?

    Tamil Cinema Classics: Antha 7 Naatkal

    பாக்கியராஜ் அதைச் செய்து காட்டினார். அப்படத்தில் எல்லாரும் வியந்து கூறிய பல கூறுகளையே நாமும் இங்கே எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இன்றைக்கு நகைச்சுவையின் பல்வேறு வகைமைகளைக் குறித்துப் பேசுகிறார்கள். அந்த ஏழு நாட்களில் இடம்பெற்றிருந்ததைப் போன்ற 'துன்புறு முரண் நகைச்சுவைக் காட்சிகள்' அன்றைய காலத்தில் மிகப்புதிது. அந்தத் தரத்திலான நகைச்சுவைக் காட்சிகளை வேறு எந்தப் படத்திலும் நாம் பார்க்க வாய்க்கவில்லை. படத்தை உயர்த்தி நிறுத்தியது ஒவ்வொரு காட்சியிலும் நடுநரம்பாய் ஊடாடியிருந்த அத்தகைய நகைச்சுவைக் காட்சிகளே. அவற்றுள் சில காட்சிகளைப் பார்ப்போம்.

    வசந்தி ஒரு பூங்காவின் வழியே வந்துகொண்டிருக்கும்போது மாதவனின் உதவியாள் கோபியைப் பார்ப்பாள்.

    பூங்காக்காரனிடம் வெறுந்துண்டைக் காட்டி "இன்னும் கொஞ்சம் தண்ணி ஊத்துங்க..." என்று கேட்டுக்கொண்டிருக்கும் கோபியைத் தன்னருகே அழைப்பாள்.

    "என்னடா... நீ மட்டும் தனியா சுத்திட்டிருக்கே ? உன் ஆசான் எங்கே ?"

    Tamil Cinema Classics: Antha 7 Naatkal

    "அதோ அங்கே மரத்தடியில மெய்ம்மறந்து டியூன் போடறார் பார்த்தீங்களா ?" என்று சுட்டிக் காட்ட, அங்கே ஆர்மோனியப் பெட்டியோடு அமர்ந்து மெட்டு போட்டுக்கொ ண்டிருப்பான் பாலக்காட்டு மாதவன்.

    "ஆமா கையில என்ன ஈரத்துணி ?"

    "ஒலகத்துல பசிக்காம இருக்கிறதுக்கு என்னென்ன வைத்தியங்கள் உண்டோ அத்தனையும் என் ஆசானுக்குத் தெரியும்..."

    "இந்த ஈரத்துணியை நல்லா பசிக்கிறபோது வயித்துல இறுக்கிக் கட்டிக்கிட்டா சுத்தமா பசியே இருக்காது... எங்க ஆசானுக்கு அப்பப்ப இதுதான் சாப்பாடு...," என்று கோபி கூறியதும் மெட்டமைத்துக்கொண்டிருக்கும் ஆசானைப் பார்ப்பாள் வசந்தி. அங்கே மாதவன் மெட்டமைத்துக்கொண்டிருக்கும் பாடல் : "ஈரேழு லோகத்துக்கும் ராஜா ஞான் தன்னே... என் ராஜசபையில் நர்த்தகி நீயல்லோஓஓ... தாலாலே தாலே தாலல்லே...."

    நடைமுறை வாழ்க்கைக்கும் கலைக்கனவுக்கும் இடையில் உள்ள மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு அந்த ஒரே காட்சியில் விளக்கப்பட்டுவிடுகிறது.

    இன்னொரு காட்சி. வசந்தி வீட்டில் கொலு வைக்கப்படுகிறது. கொலுவில் கலந்துகொள்வதற்காக பாலக்காட்டு மாதவனை அழைக்கின்றார் வசந்தியின் தாத்தாவான கல்லாப்பெட்டி சிங்காரம். "ஏப்பா... மாதவா... உனக்குத்தான் சாதிசனம் உறவுக்காரங்க யாருமே இந்த ஊர்ல இல்லையே... இந்த மாதிரி வீட்டுல விசேசம் நடக்கும்போது கலந்துக்க வேண்டியதுதானே... சந்தடி சாக்குல சாமி கும்பிட்ட மாதிரி இருக்கும்... ஒரு வாய் சாப்பிட்ட மாதிரியும் இருக்கும்..." என்று அழைத்ததும் பாலக்காட்டு மாதவன் தொட்டாற்சிணுங்கியாகி விடுவார்.

    "எந்தா... சாப்பாடோ... ஈ மாதவன் எந்தா ஊணு கழிக்கன்னோ இவ்விட வந்து... ஞான் வரியில்லா..." என்று முணுக்கென்று திரும்ப, தாத்தா அமைதிப்படுத்தி அழைத்து வந்து அமர்த்துவார். வந்தமர்ந்தால் அங்கே கோபி அவனுக்கும் முன்னே அமர்ந்திருப்பான்.

    "எந்தடா கோபி.... நீ எப்ப வந்து ? "

    "சோறு போடறதா கேள்விப்பட்டேன். அதான் ஆறு மணிக்கே வந்து உட்கார்ந்துட்டேன்..." என்பான்.

    காஜா செரீப்புக்கு அமைந்த அந்தக் குணச்சித்திரம் இனி யார்க்கும் அமையாது. சிறுவன் என்றாலும் முதிர்ச்சியும் பதமும் உடனே விளங்கிக்கொள்ளும் மதியும் பெற்றவன் என்னும் குணவார்ப்பு. ஏனோ தெரியவில்லை, வளர்ந்ததும் பெரிய நடிகராக அவர் வலம்வரத் தவறினார். "என்கிட்ட உதைவாங்கினா எல்லாரும் பெரிய நடிகராயிடுவாங்க... என்கிட்ட உதைவாங்கியும் பெரிசா ஆக முடியாமப் போனவன் நீ மட்டும்தான்..." என்று கவுண்டமணி காஜா செரீப்பைப் பார்த்து வருந்திச் சொல்வாராம். பாக்கியராஜின் முதற்படமான சுவர் இல்லாத சித்திரங்களில் கவுண்டமணி தையற்காரர். அவரிடம் காஜா எடுக்கும் சிறுவன் செரீப். பெயர்க்காரணமும் அஃதே. கவுண்டமணி முதன்முதலில் உதைத்ததும் காஜா செரீப்பைத்தான்.

    Tamil Cinema Classics: Antha 7 Naatkal

    கொலுப்பாடலில் கோபியும் சேர்ந்து பாடிக்கொண்டிருப்பான். "தாஆஆரணீ..." என்று பாட, அருகிலிருக்கும் மாதவன் திருத்துவான். "தாரணி அல்ல... த்தாரணீ..." என்று பாடிக்காட்டித் திருத்துவார். கடுப்பான கோபி "சுண்டலுக்காகப் பாடற பாட்டு... இதுல சுதியென்ன வேண்டிக்கிடக்கு... கொஞ்சம் சும்மா இரு வாத்தியாரே..," என்று தொடர்வான்.

    பின்னொரு காட்சியில் மாதவனும் கோபியும் சென்னைத் தெருக்களில் வேலை தேடி அலைவார்கள்.

    "ஆசானே... நீ இந்த லைன்ல உள்ள கடைங்கள்ள வேலை தேடு... நான் அந்த லைன்ல உள்ள கடைங்கள்ள வேலை தேடறேன்... இந்த வீதிக் கடைசில நாம இரண்டு பேரும் மீட் பண்ணுவோம்...," என்று வேலை தேடத் தொடங்குவார்கள். முதற்கடையில் நுழைந்ததுமே இருவரும் கழுத்தைப் பிடித்து வெளியேற்றப்படுவார்கள். நிலைமையை விளங்கிக்கொள்ளும் கோபி அடுத்தடுத்த கடைகளில் நுழையும்போது கடைக்காரர்களை ஏமாற்றி ஒவ்வொரு பொருளாகத் திருடத் தொடங்குவான். மறுபுறத்தில் பாலக்காட்டு மாதவன் ஒவ்வொரு கடையிலும் சண்டை போட்டு வெளியேறிக்கொண்டிருப்பான். வீதி முடியுமிடத்தில் மாதவன் வந்து சேரும்போது, கோபி நடைமேடையில் கடைபரப்பி அமர்ந்து கூவிக்கொண்டிருப்பான். "எதெடுத்தாலும் ஐம்பது பைசா... எதெடுத்தாலும் ஐம்பது பைசா..."

    பாலக்காட்டு மாதவன் தன் கண்ணை நம்பமுடியாமல் அவன் அருகில் அமர்ந்து "எடா கோபி... எந்தாடா இது ?" என்று கேட்க, "டிஸ்டர்ப் பண்ணாதே ஆசானே... யாவாரம் கெட்டுரும்... இந்தா ரண்டு ரூவா.. நீ போய் சாப்பிட்டு வா..." என்று கொடுப்பான்.

    இன்னொரு காட்சியில் கதைமுடிவு என்ன என்று மாதவன் விரும்பிக் கேட்க, "என் வீட்டுக்கு வாங்க மாதவன் சொல்றேன்..." என்று ராஜேஷ் அழைப்பார். அவர் வீட்டுக்கு வந்து இறங்கியதும் மாதவன் கூறுவது...

    "ஹோ... எந்து வல்லிய வீடு... நிச்சயமாயிட்டு ஈ புரொடியூசர் ஈ வீடு வித்தெங்ஙிலும் படத்தை பினிஷ் செய்யும்..."

    அந்த ஏழு நாட்கள் திரைப்படத்தில் பெண் காதலின் ஆணிவேராக விளங்கும் உணர்ச்சி எது என்று விளக்கும் ஒரு கட்டம் வருகிறது. வலிமையான அந்த ஒற்றை வசனத்தில் வசந்தி தன்னைப் பற்றிய அனைத்தையும் உணர்த்தும் காட்சி அது. "இவ்வளவு நேரம் நீங்க சொன்னதையெல்லாம் கேட்டுட்டுத்தான் இருந்தேன்... நீங்க

    சொல்ற எல்லாத்துலயும் நியாயம் இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டேன்... ஆனா எனக்குன்னு சொல்ல ஒரேயொரு நியாயம்தான் இருக்கு... ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடி இன்னொருத்தர் மேல ஆசை வெக்கக்கூடாது... அப்படி ஆசை வெச்சு அது நிராசையாயிட்டா நிச்சயமா அவ வாழ்க்கைல எந்த நிம்மதியும் இருக்காது...!" வசந்தி அதைச் சொன்ன பின் பாலக்காட்டு மாதவன் அவளுடைய காதலை ஏற்றுக்கொள்கிறான்.

    ஒரு படத்தில் காட்சித் தொடர்களும் உரையாடல்களும் எவ்வளவு வலிமையாக அமைய முடியும் ? அந்த ஏழு நாட்கள் அளவுக்கு வலிமையாக அமைய முடியும். அது ஓர் உச்சம். இன்றைய இயக்குநர்கள் அதைத் தாண்டிச் சென்றுவிடக்கூட வேண்டா... அதை அடைந்தாலே போதும்.

    English summary
    K Bagyaraj's Antha 7 Naatkal is the best example for a perfect screenplay.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X