Robo Shankar Net worth: பாடிபில்டர் டு காமெடியன்.. ரோபோ சங்கரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை: பிரபல தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், படப்பிடிப்பின் போது திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் அதிகமானதால், தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 46. அவரது மறைவு தமிழ் திரையுலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மண்ணின் மைந்தரான சங்கர், திருவிழாக்களில் தனது உடல் முழுவதும் சில்வர் பெயிண்ட் பூசி, ரோபோ போல அவர் ஆடிய நடனம் அவருக்கு "ரோபோ சங்கர்" என்ற பெயரைப் பெற்றுத் தந்தது. பின்னர், தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் தனது தனித்துவமான நகைச்சுவை, உடல் மொழி மற்றும் மிமிக்ரி திறமைகளால் பார்வையாளர்களைக் கவர்ந்தார். சின்னத்திரையில் கிடைத்த புகழ் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகளைத் தேடித் தந்தது. தனுஷின் 'மாரி' படத்தில் அவர் ஏற்ற நகைச்சுவைப் பாத்திரம் அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து, 'புலி', 'விஸ்வாசம்', 'சிங்கம் 3', 'வேலைக்காரன்' போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து அசத்தினார்.
கடுமையான உழைப்பாளி: ரோபோ சங்கர் ஒரு சிறந்த டப்பிங் கலைஞராகவும் முத்திரை பதித்தார். 'தி லயன் கிங்' மற்றும் 'முபாசா' போன்ற பிரபலமான ஹாலிவுட் படங்களில் பும்பா கதாபாத்திரத்திற்கு தனது குரலைக் கொடுத்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தார். தனது தனித்துவமான குரலால் அந்தக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தார். சின்னத்திரையில் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று, எப்போதும் சிரிப்பலைகளை ஏற்படுத்தினார்.

சொத்துமதிப்பு: ஒரு காலத்தில் வாழ்வாதாரத்திற்காகப் போராடிய ரோபோ சங்கர், தனது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி மூலம் இன்று உச்சத்தை அடைந்துள்ளார். ஏசியானெட் வெளியிட்ட அறிக்கையின் படி, அவரது சொத்து மதிப்பு சுமார் 5 முதல் 6 கோடி ரூபாய் இருக்கும் எ ன சொல்லப்படுகிறது. சென்னை வளவரவாக்கத்தில் சொந்த வீடு, தனிப்பட்ட கார்கள் மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்திருக்கிறார். திரை உலகில் அவர் அடைந்த வெற்றி, அவரது வாழ்க்கையை மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தின் நிலையையும் உயர்த்தி உள்ளது. அவரது மனைவி பிரியங்கா மற்றும் மகள் இந்திரஜா இருவரும் திரையுலகில் தமக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளனர். கடுமையான உழைப்பால் கலை, குடும்பம் மற்றும் செல்வம் என வாழ்க்கையில் உச்சத்தை தொட்ட ரோபோ சங்கரின் திடீர் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சோகத்தில் ரசிகர்கள்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரோபோ சங்க மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உடல் எடை குறைந்து மிகவும் மோசமான நிலையில் இருந்தார். இனிமேல், ரோபோ சங்கரின் மீண்டு வர வாய்ப்பே இல்லை என அனைவரும் பேசிய நிலையில், நோயை எதிர்த்து போராடி அதிலிருந்து மீண்டு வந்து, தனது மகளின் திருமணத்தை சிறப்பாக செய்து முடித்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டு போதே மதுவையிலிருந்து விலகி இருந்த ரோபோ சங்கர், மீண்டும் அவர் மதுவை கையில் தொட்டது தான் இந்த விபரீதத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











