»   »  பெருமைப்படத்தக்க நம் நகைச்சுவை நாயகர்கள்!

பெருமைப்படத்தக்க நம் நகைச்சுவை நாயகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

- கவிஞர் மகுடேசுவரன்

தமிழ்த் திரைப்படங்களால் காலத்தால் அழிக்க முடியாத எண்ணற்ற இசைப்பாடல்கள் கிடைத்தன. அதற்கு இணையான இன்னொரு நல்விளைவு நம்மால் என்றைக்கும் மறக்க முடியாத நகைச்சுவைக் காட்சிகள் கிடைத்ததும்தான். தமிழ்த் திரையுலகில் காலத்தை வென்று நிற்கும் அருமையான நகைச்சுவை நடிகர்கள் தொடர்ந்து கோலோச்சி வந்திருக்கின்றனர். பேசாப்படங்களிலிருந்து தொடங்கிய திரைப்படக்கலை வரலாற்றிலேயேகூட சார்லி சாப்ளினின் நகைச்சுவை வகைமைப் படங்களுக்கே முதலிடம். ஒருவேளை திரைப்படம் என்பது நகைச்சுவைக்கே நல்வாய்ப்புள்ள பதிவுக் கலையோ என்பதையும் ஆராய வேண்டும்.

தமிழில் நகைச்சுவை நடிப்பு ஒரு மரபுத்தொடர்ச்சியைப் போலவே தொடர்ந்து வருவதைக் கவனிக்கலாம். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனிடமிருந்து தொடங்கும் இந்த வழிமரபு இன்றைக்குப் புதிது புதிதாகத் தலையெடுக்கும் எண்ணற்ற இளம் நடிகர்கள் வரை தொடர்கிறது. கலைவாணர்க்கும் முன்பும் பலர் இருந்திருக்கலாம். பல்வேறு காலகட்டங்களில் திரைப்படப் போக்குகள் வெவ்வேறாக இருந்தும்கூட மரபுத் தொடர்ச்சியின் இழை எங்குமே அறவில்லை என்பது மிகவும் இன்றிமையாத கூறு.

Tamil Cinema Comedians - 1

நகைச்சுவை மாமேதை சாப்ளினின் நடிப்பில் அவர் பேசுவதற்கு இடமிருக்கவில்லை. ஒவ்வொரு உணர்ச்சியையும் தவிப்பையும் மகிழ்வையும் ஏன் தன் எண்ணத்தையுமே கூட நடிப்பில் தெரியுமாறு வெளிப்படுத்தினார். ஒரு சொல் என்ன பொருள் தருமுமோ அந்தப் பொருளைச் சாப்ளினின் முகத்திலோ நடிப்பிலோ நாம் காணலாம். அத்துணை நுண்மையான நடிப்பாற்றல் அவரிடமிருந்தது. அதனால்தான் வரலாற்றாசிரியர்கள் 'Chaplin The Great' என்ற பெருமைக்குரிய சிறப்பை அவர்க்கு அளித்தனர். மகா சார்லி சாப்ளின். ஆனால், தமிழில் நடிப்பே நகைச்சுவை ஆகுவது என்பது மிகக் கடினமான ஒன்று. ஏனென்றால் இங்கே மொழிதான் எல்லாம். நீங்கள் ஒன்றைச் சொல்வதன் வழியாகத்தான் நகையைத் தோற்றுவிக்க முடியும். ஒரு நடிகர் என்னதான் விழுந்து புரண்டாலும் அந்த அவலத்திலிருந்தபடியே நகையைத் தோற்றுவிக்கும் ஏதோ ஒன்றை வாய்விட்டுச் சொல்ல வேண்டும். அங்கே ஏதேனுமொன்றைப் பேச வேண்டும். அப்போதுதான் நமக்குச் சிரிப்பு வரும். என்னதான் தலைகீழாக நடித்து முயன்றாலும் அது ஏற்படுத்தும் நகையுணர்ச்சி பேச்சுக்கு நிகராக வராது. திராவிட மொழிகள் அனைத்திற்குமே உரிய இயற்கை இது. இங்கே நகைச்சுவை உணர்வானது மொழிவழிப்பட்டே தூண்டப்பட வேண்டியது. அதனால்தான் கமல்ஹாசனின் நகைச்சுவைப் படங்கள் பேச்சு மயமாக இருக்கின்றன. பேசாமொழிப் படமாக கமல்ஹாசன் எடுத்த பேசும்படத்தைப் பார்க்கும்போது "பேசியே இருக்கலாமே..." என்றுதான் பார்வையாளர்க்குத் தோன்றும். தற்கால நகைச்சுவை நடிகர்கள் பேசியே கொல்வதற்கும் இந்த மரபுதான் காரணமாக இருக்கிறது.

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் நடிப்பை நாம் பார்த்திருக்கிறோம். திரையில் அவர் தோன்றும் காட்சி மிகவும் மெல்ல நிகழும் ஒன்றாக இருக்கும். ஏதேனும் ஒன்றைக் கூறியபடியே அவர் நிகழ்த்துவதுதான் நகைச்சுவை. அதற்கும் ஒரு படி மேலாகச் சென்று பாடல்களின் வழியாகவே தம் நகைச்சுவையை நிகழ்த்துவார். சபாபதி என்னும் ஒரு திரைப்படத்தை அடிக்கடி தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம். அதில் இராமச்சந்திரனும் காளி என் இரத்தினமும் தொடர்ச்சியாய்ப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதில்தான் நமக்குரிய நகைச்சுவை நிகழ்த்தப்படுகிறது.

டி.எஸ். பாலையாவும் எம். ஆர். இராதாவும் நகைச்சுவையில் மழையாய்ப் பொழிந்து தள்ளக்கூடியவர்கள். ஆனால், சொல்கின்ற வசனங்களின் ஏற்ற இறக்கங்களின் வழியாகவே தம்முடைய நகைச்சுவையை வேறு தளத்திற்கு நகர்த்த்திக்கொண்டு சென்றுவிடுவார்கள். எம் ஆர் இராதாவுக்கும் நாகேஷுக்கும் நகைச்சுவைக்கேற்ற அரிய உடல்மொழி வாய்த்தது. நகைச்சுவையோடு நகர்ந்து செய்ய வேண்டிய அடவுகளும் அவர்களுடைய காட்சியில் அமைந்துவிட்டால் முழு அரங்கமும் தேவைப்படும். கைகால்களை அசைப்பதும் திடீரென்று நகர்வதும் சாய்வதுமாய் அவர்களுடைய காட்சி அதகளப்படும். இந்த வரிசையில் சந்திரபாபுவை நாம் மறக்கவே முடியாது. சந்திரபாபு தம்மை முழுநேர நகைச்சுவை நடிகராகவே வரித்துக்கொண்டிருந்தார் எனில் அவரை மீறிய ஒன்றாய்த் தமிழ்த் திரையுலக நகைச்சுவை வரலாறு இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், கலைஞனின் வேட்கை ஒன்றோடு முடிவதில்லையே. பல்வேறு பாத்திர வார்ப்புகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட சந்திரபாபு அம்முயற்சிகளுக்கே தம்மைப் பலிகொடுத்தார்.

மொழியைப் பல்வேறு தொனிகளில் பயன்படுத்திப் பேசி நகைச்சுவையைத் தோற்றுவித்ததில் முதலிடம் என்றால் அது தங்கவேலுக்குத்தான். சிலர் நகைச்சுவை வசனத்திலுள்ள ஒரு சொல்லைப் பேசுகையில் அதிலுள்ள ஓரிரு எழுத்தைத் தேய்த்து நசுக்கி விடுவார்கள். உச்சரிக்காமல் வழுக்கிச் செல்வார்கள். தங்கவேலின் உச்சரிப்பில் அந்தக் குறையையே காண முடியாது. தங்கவேலு நடித்த நகைச்சுவைக் காட்சிகளைக் காதணிபாடி (ஹெட்போன்) அணிந்து கேட்டுப் பாருங்கள். ஒவ்வொரு சொல்லையும் முறைப்படவும் தெளிவாகவும் விரைந்தும் கூறியிருப்பார். "எவன்டா இவன் சுத்தப் பைத்தியக்காரனா இருக்கறான்..." என்று சொல்லும்போது அவருடைய உச்சரிப்பில் வல்லினங்கள் தெள்ளத் தெளிவாக ஒலித்து அடங்குவதைக் கேட்கலாம். தங்கவேலின் இந்தத் தன்மை வெண்ணிற ஆடை மூர்த்தியிடமும் கொஞ்சம் காணப்படுகிறது. ஆனால், இதில் தங்கவேலுக்குத்தான் முதலிடம். தம்மைக் கண்டபடி திட்டிக்கொண்டிருக்கும் பாலாஜியிடம் கேளாச்செவியுடையவரான தங்கவேலு கூறுகிறார் : "ஆமா... நானும் நீ வந்ததிலிருந்து பார்த்திட்டு இருக்கறேன்... ரொம்ப நேரமா எதையோ வாயில போட்டு மென்னுட்டே இருக்கிறயே.. என்ன அது ?"

பிற்பாடு வந்தவர்களில் சுருளிராஜனும் தேங்காய் சீனிவாசனும் வேறொரு கொடுமுடியைத் தொட்டார்கள் என்றால் அது மிகையில்லை. தேங்காய் சீனிவாசன், வி. கே. இராமசாமி போன்றவர்கள் சொற்களை விரைவில்லாமல் கூறுவதில் வல்லவர்கள். நிதான நகைச்சுவை அவர்களுடையது. "என்னப்பா உனக்கு, நேரு மாதிரி பொசுக்கு பொசுக்குன்னு கோபம் வந்துடுது..." என்று தேங்காய் சீனிவாசன் கூறுவது ஒரு கருத்துத்தான் என்றாலும் நாம் புன்னகைப்போம். சுருளிராஜனுடையது அவல நகைச்சுவை. சிக்கிக்கொண்டு சின்னபின்னப்படுவது. திருடச் சென்ற துணிக்கடைக்குள் அடைபட்ட சுருளிராஜன் அக்கடை இருக்கைகளின் பஞ்சைப் பிய்த்துத் தின்றுவிட்டு வயிற்று வலியில் துடிப்பது அவர் மட்டுமில்லை. பார்த்துச் சிரித்த பார்வையாளர்களும்தான்.

அந்தத் தலைமுறையில் இவர்களெல்லாம் முதல்நிலை நகைச்சுவை நடிகர்களாய்க் கொடி நாட்டினார்கள். இவர்களோடு அதே காலத்தில் இரண்டாம் நிலை நடிகர்கள் என்று ஒரு பெருங்கூட்டமே இருந்தது. கருணாநிதி, என்னத்த கன்னையா, ஐசரி வேலன் என்று அவ்வரிசை நீளும். எண்பதுகளுக்குப் பின்வந்த நகைச்சுவை நடிகர்களையும் நடிகையரையும் இன்னொரு கட்டுரையில் பார்க்கலாம்.

English summary
An analysis on Tamil comedy actors in earlier cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil